பொறியியல் கல்வி அவலத்தின் பேசப்படாத பக்கம்!: உதவிப் பேராசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகியிருக்கிறது
Published : 06 Jul 2018 09:28 IST
முகம்மது ரியாஸ்
லட்சக்கணக்கில் செலவழித்துப் பொறியியல் படித்த இளைஞர்களில் பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்துவரும் சூழலில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் யாராலும் கவனிக்கப்படுவதில்லை. தரமற்ற கல்வியும், வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், பொறியியல் கல்லூரிகளின் பெருக்கம் ஏற்படுத்தியிருக்கும் இரண்டு முக்கிய விளைவுகள். இதில், உதவிப் பேராசிரியர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மிகக் குறைந்த சம்பளம், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் வேலையையும் செய்ய வேண்டிய கட்டாய நிலை என்று பல்வேறு பிரச்சினைகளுடன் உழன்றுவருகிறார்கள் உதவிப் பேராசிரியர்கள்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் வரையறையின்படி, உதவிப் பேராசிரி யருக்கு அடிப்படை ஊதியம் (15,900 - 39,000), சராசரி தர ஊதியம் (6,000) மற்றும் கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.45,360 முதல் வழங்கப்படுகிறது. சில முன்னணி தனியார் பொறியல் கல்லூரிகளிலும் மட்டும்தான் இந்த அளவிலான ஊதியம் வழங்கப்படு கிறது. பல தனியார் கல்லூரிகள் இதைப் பின்பற்றுவ தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முறையான சம்பளம் இல்லை
கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி போன்றவை கல்லூரிகளுக்கேற்ப வேறுபடக்கூடும் என்றாலும், 80% தனியார் கல்லூரிகள் முறையான ஊதியம் வழங்கு வதில்லை. பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக உதவிப் பேராசிரியராகச் சேருபவருக்கு ரூ.12,000 - ரூ.15,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களுக்குக் கூடுதலாக ரூ.1,000 வழங்கப் படும். ஆண்டு ஊதிய உயர்வெல்லாம் கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்கும் தனியார் கல்லூரிகள் அதிகம். உதவிப் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சார்பாகத் தலா ஐந்து மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் மூன்று மாதங்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படுமென்றும் சில தனியார் கல்லூரிகள் நிர்ப்பந்திக்கின்றன. இதனால், ப்ளஸ் டு தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயத்தில், பள்ளிகளின் வாயிலில் காத்துக்கிடக்க வேண்டிய நிலைக்கு உதவிப் பேராசிரியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
பல தனியார் கல்லூரிகளில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை. சம்பளத் தொகையை மிச்சம்பிடிப்பதற்காக, ஆசிரியர்களின் எண்ணிக்கையை அக்கல்லூரிகள் குறைத்திருக்கின்றன. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் ஆய்வுக்கு வரும் சமயங்களில் இதை மறைக்க ஒரு தந்திரம் கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகலைப் பொறியியல் பட்டதாரிகளை அன்றைய ஒரு தினத்துக்கு மட்டும் கல்லூரிக்கு வரச்செய்து, அவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அங்கு பணிபுரிவதாகக் கணக்குக் காட்டும் தனியார் கல்லூரிகள் பல.
என்ன காரணம்?
10 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்பு அதிகரித்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 2007-2008ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 247ஆக இருந்த தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 431 ஆக அதிகரித்தது. 2007-2008ம் கல்வியாண்டில் 1,08,844 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கை 2010-2011ம் கல்வியாண்டில் 1,61,515 ஆக உயர்ந்தது. ஆனால், விரைவிலேயே பொறியியல் மோகம் எனும் நீர்க்குமிழி உடைந்தது. 2010-2011ம் ஆண்டுகளில் பெருந்திரளாகப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் 2014-2015 படிப்பு முடிந்து வெளிவந்த நிலையில், வேலைவாய்ப்பற்ற சூழ்நிலை உருவானது. இதன் விளைவாக, தொழில் நிறுவனங்கள் ஊதியத்தைக் கணிசமாகக் குறைத்தன. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் மாணவர்களின் சேர்க்கை குறையத்தொடங்கியது.
அதேசமயம், மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, 2010-ல் இருந்த நிலையையும், 2015-ல் இருந்த நிலையையும் பார்க்கும்போது ஒப்பீட்டளவில் பெரிய வீழ்ச்சி இல்லை என்றே சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்கிறார்கள். எனினும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் கிட்டத்தட்ட 1.50 லட்சம் இடங்கள் நிரம்பாமல் காலியாக இருப்பதற்குக் கூறப்படும் காரணம், தேவைக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதே!
இன்னொரு சிக்கல் உண்டு. சென்ற கல்வியாண்டு (2017-2018) வரை பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது விதி. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், விதிப்படி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது. இதனால், பல கல்லூரி களில், பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. அவர்கள் பணியில் தொடர வேண்டுமெனில் மாணவர்களை அழைத்துவர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.
வேறு வழியில்லை
தற்போதைய சூழலில், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் வேறு பொறியியல் கல்லூரிகளிலும் எளிதில் வேலை பெற இயலாது. தவிர, தொழில் நிறுவனங் களிலும் வாய்ப்பு குறைவு. பொறியியல் துறையைப் பொறுத்தவரை, ஒருவர் உதவிப் பேராசிரியராக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தாலும், தொழில் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அந்த அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. புதிதாகப் பணியில் சேர்பவராகவே கருதப்பட்டு, புதியவர்களுக்கான ஊதியமே வழங்கப்படும். இதனால், இதுபோன்ற கடும் நெருக்கடிகளுக்கு இடையில், வேறு வழியின்றி அதே துறையில் நீடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.
பணிக்கேற்ற முறையான ஊதியம் வழங்கப்படாத நிலையில், ஒருவர் எந்தளவு ஈடுபாட்டுடன் பணிபுரிவார், அவர்கள் மூலம் எம்மாதிரியான சமூகம் உருவாக்கப்படும் எனும் கேள்வி எழுந்திருக்கிறது. முறையான ஊதியமின்மை, தரமற்ற கல்வி, வேலைவாய்ப்பற்ற சூழல் என்று மோசமான காரணிகளால் கட்டமைக்கப்படும் ஒரு சமூகச் சூழலின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்குமா என்ற கேள்விக்குக் கல்விச் சமூகம் முகங்கொடுக்க வேண்டிய தருணம் இது!
- முகம்மது ரியாஸ், உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: hirifa@gmail.com
No comments:
Post a Comment