Sunday, July 8, 2018

மஞ்சள் பை காலங்கள்

Published : 07 Jul 2018 22:38 IST


  எஸ்.ராஜகுமாரன்






‘கொக்கு பறந்த

வயல்களில் பறக்கின்றன

பாலிதீன் பைகள்.’

சாலை ஓரங்கள், குப்பைத் தொட்டிகள், நீரில்லா ஆறுகள், குளங்கள், விளைச்சல் மரத்துப்போன வயல்வெளிகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன பாலிதீன் பைகள் என்னும் நெகிழிப் பைகள்.

விதவிதமான வடிவங்கள், அளவுகளில் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றன இந்தப் பாலிதீன் பைகள். சில இடங்களில் ‘இங்கு பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப் பட்டுள்ளன!' என்ற அறிவிப்பு வேறு. அது வெற்று அறிவிப்பு மட்டுமே. ‘கேரிபேக்' எனப்படும் பாலிதீன் பைகள் இல்லாமல் வாழவே முடியாது என்னும் அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன நெகிழிப் பைகள். மக்காத குப்பையாக மண்ணில் புரளும் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளே பூமியின் மகா மாசாக விளங்குகின்றன என எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர் சூழலியலாளர்கள்!

இந்தப் பாலிதீன் பைகள் ஒரு காலத்தில் அபூர்வமான அதிசயப் பொருளாக இருந்தவை என்பது இன்றைய ஸ்மார்ட் போன் தலைமுறைக்கு வேடிக்கையான தகவலாக இருக்கும்.

எண்பதுகளின் தொடக்க காலம் வரை வீடுகளி லும் கடை களிலும் துணிப் பைகளே நிறைந்திருந்தன. ‘மஞ்சள் பை' என்னும் ஜவுளிக் கடைப் பைகள்தான் அப்போது பிரபலம். மளிகைப் பையும் அதுவே, பள்ளிக்கூடப் பையும் அதுவே. பயணப் பையும், பணப் பையும் துணிப் பைகளே.

கோயில் மணிபோல் பள்ளிக்கூட தண்டவாள மணி ஒலிக்கும் மாலை நேரங்களில், புறாக்கூட்டம் பறப்பது போல் பள்ளிக்கூடம் விட்டு மாணவர்கள் வேகமாக வெளியேறுவார்கள். பள்ளி வளாகம் விட்டு வெளியே ஓடும் அவர்களின் கைகளில் உள்ள மஞ்சள் பைகள் பறப்பது, புறாக்களின் றெக்கைகள் போலவே இருக்கும்.

‘மு.ரா.சன்ஸ்' ஜவுளிக் கடையின் மஞ்சள் பைகள் எங்கள் பகுதியில் ரொம்பப் பிர பலம். தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புதுத் துணிகளைச் சுமந்து வீட்டுக்கு வரும் ஜவுளிக்கடை மஞ்சள் பைகள் சந்தோஷத்தின் குறியீடுகள்.

புதிய பைகளின் ஆழ்மஞ்சள் வண்ணமும் புதுத்துணி வாசனையும் இப்போதும் கூட என் கண்ணிலும் நாசியிலும் வண்ணத்தையும் வாசனையையும் தீட்டுகின்றன. பண்டிகை காலத்தில் வீட்டுக்கு வரும் ஜவுளிப் பைகள், அதன்பிறகு பள்ளிப் பைகளாகும். பழைய பைகள் மளிகைக் கடைப் பைகளாக மாறும்.

கண்ணாடி மாமாவின் பழைய சைக்கிளில் எப்போதும் பழுப்பேறிய இரு துணிப் பைகள் இருக்கும். ஜவுளிக் கடையில் வேலை பார்த்த அவர், பணி முடிந்து வீடு திரும்பும் இரவுகளில் ஒரு பையில் மளிகை சாமான்களும் மறு பையில் காய்கறிகளும் வாங்கி வருவார். சில நாட்களில் எங்களுக்கான பகோடா பொட்டலங்களையும் சுமந்துவரும் அந்தப் பைகள்.

ஜவுளிக் கடை மஞ்சள் பைகள் ஒற்றை நூலில் தைக்கப்பட்டிருக்கும். கனம் தாங்காது சில சமயம் காதுகள் அறுந்து விடும். கொஞ்சம் விவரமானவர்கள் பைகளை தையல் கடையில் கொடுத்து ஒற்றைத் தையலின் மேல் இன்னொரு ஓட்டு ஓட்டிக் கொள்வார்கள். சிறு நகரங்களின் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள் என எல்லா கடை களிலும் ஒரு காலத்தில் மஞ்சள் பைகளே ஆக்கிரமித்திருந்தன. திருமண தாம்பூலப் பையாக மஞ்சள் பைகளிலேயே மணமக்கள் பெயர் அச்சிட்டு வழங்கிவந்தனர். இப்போது வகைவகையான வண்ணவண்ண பாலிதீன் பைகள் எங்கும் சர்வாதிகாரம் செய்கின்றன.

‘தொளதொளாப் பேண்டு சார்' என நாங்கள் ரகசியமாக அழைக்கும் ரொசாரியோ வாத்தியார் பழுப்புநிற காடாத் துணியில் கொண்டுவரும் பெரிய பைக்குள் பைபிளும், ‘கடவுள் நம்மோடு' புத்தகமும் எப்போதும் இருக்கும்.

ஊருக்குள் சிங்கப்பூர் சென்று வந்த ஒரு சிலர் கொண்டு வரும் பாலிதீன் பைகள் வழவழப்பாக மினுக்கும். அவற்றில் அடிக்கும் ஒருவித வாசனை கூடுதல் பிரமிப்பு.

துணிப் பையில் பல வகை உண்டு. அவற்றுள் பால்யத்தில் என்னை ஈர்த்தது சுருக்குப் பை. வரிச்சிக்குடியில் இருந்து கூடையில் கத்தரிக்காய் கொண்டுவரும் தங்கம்மா பாட்டி யின் சுருங்கிய இடுப்பில்தான் நான் முதன்முதலில் சுருக்குப் பையைப் பார்த்தேன். புடவைக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் பத்திரமாக செருகப்பட்டிருக்கும் சுருக்குப் பையை எடுத்து, அதில் இருக்கும் சுருக்குக் கயிற்றை இழுத்தால், வாய் பிளக்கும் சுருக்குப் பை. அதில் இருந்து தங்கம்மா பாட்டி கத்தரிக்காய் விற்பனையின் மிச்ச சில்லரையை லாவகமாக எடுத்துக் கொடுக்கும் அழகே அழகு. சுருக்குப் பைகளை இன்றைய பெண்களின் ஹேண்ட் பர்ஸ்களாக காலம் மாற்றிவிட்டது.

எண்பதுகளின் இறுதியில்தான் துணிப் பைகளுக்கு மாற்றாக மெல்ல பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. அப்போதுதான் பெண்கள் பணிக்குப் போகத் தொடங்கியிருந்தனர். ‘அவள் ஒரு தொடர்கதை' நாயகி சுஜாதாவைப் போல் பணிக்குப் போகும் பெண்களும் தோளில் தொங்கும் தோல் பைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது கலை, இலக்கியத் துறைகளில் அறிவுஜீவியாக அறியப்பட்டவர்கள் தோளில் தொங்கும் ஜோல்னாப் பைகளுடன் வலம் வந்தனர். அறிவுஜீவிகளாக தங்களை காட்டிக் கொள்பவர்களையும் பிடித்துத் தொங்கியது ஜோல்னாப் பை மோகம்.

என் நண்பன் ஒருவன் பைகளின் ரசிகன். அவனின் அலு வலகப் பைக்குள் பல பைகள் இருக்கும். ஏதேனும் ஒரு புதிய பாலிதீன் பையை யார் கொடுத்தாலும் முகமெல்லாம் சிரிப்பாக வாங்கித் தன் பைக்குள் வைத்துக் கொள்வான். பிடித்த பையைத் திருடவும் தயங்காத தீவிரப் ‘பை'யன் அவன். துணிப்பைகள் மட்டுமே இருந்த காலத்தில் வெளி இடங்களிலோ, குப்பைக் கழிவுகளிலோ துணிப் பைகளைப் பார்க்க முடியாது. பழைய துணிப் பைகள் அடுப்புக் கரித் துணியாக, சுத்தம் செய்யும் துணியாகப் பயன்பட்டு கடைசி யில் குப்பைக்குச் சென்று மண்ணோடு மண்ணாக மக்கிச் செரித்துவிடும். ஆனால், இன்றைய உலகம் ஒரு பெரிய பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.

செக்கு எண்ணெய், இயற்கைப் பொருட்கள் பயன்பாடு என மீண்டும் இயற்கைக்குத் திரும்பும் முயற்சிகள் இன்று உலகெங்கும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. பாலிதீன் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன் படுத்தும் முயற்சிகளை வரவேற்போம். மஞ்சள் பைகளோடு வாழ்ந்த காலங்கள் மீண்டும் வராதெனினும் மீண்டும் மஞ்சள் பைகளை நம் கைகள் சுமப்பது சுகமானதுதானே!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024