Saturday, July 14, 2018

காமராஜர் பிறந்த நாள்; ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் குழப்பம்

Published : 13 Jul 2018 20:31 IST

மு. அப்துல் முத்தலீஃப் சென்னை

 

கல்வி வளர்ச்சி நாள் - கோப்புப் படம்

வரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால் பெற்றோரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசு அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளில் பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி விழாவாகக் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமையாக உள்ளதால் வேறொரு நாளில் கல்வி வளர்ச்சி நாளைக் கொண்டாடுவார்கள் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நினைத்திருந்த வேளையில் திடீரென ஞாயிற்றுக்கிழமை அன்றே காமராஜர் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கட்டாய உத்தரவு இடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை தினமான ஞாயிறு அன்றும் பள்ளிகளைத் திறந்தே ஆக வேண்டும் என்ற அறிவிப்பு பெற்றோரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரி வாசுவிடம் கேட்டபோது, ''கல்வி வளர்ச்சி நாளைக் கொண்டாட வேண்டும் என்றுதான் சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது. அதை அன்றுதான் கொண்டாட வேண்டும் என்றில்லை, வேறொரு நாளிலும் கொண்டாடலாம்'' என்று தெரிவித்தார்.

ஆனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் கட்டாயம் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் செயல்படும். அன்று அனைவரும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து விழா நடத்திட வேண்டும் என சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வியிடம் இதுகுறித்து கேட்டபோது, ''கல்வி வளர்ச்சி நாளை ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். மேலிட உத்தரவு என்பதால் அதை அப்படியே அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பிவிட்டோம்'' என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை அல்லாமல் மற்ற நாட்களில் இதைக் கடைப்பிடிக்கலாமே, மேலதிகாரிகள் அன்றுதான் கொண்டாட வேண்டும் என்று சர்க்குலர் அனுப்பவில்லை என்று தெரிவிக்கிறார்களே என்று கேட்டபோது, ''எங்களுக்கு தெளிவாக சர்க்குலர் வந்துள்ளது. ஜூலை 15 அன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த அடிப்படையில் நான் சர்க்குலர் அனுப்பியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.

விடுமுறை நாள் அன்று ஓய்வெடுக்கும் மனநிலையில் உள்ள பெற்றோர் பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பால் ஞாயிற்றுக்கிழமை அன்றும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுற்றறிக்கை:

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024