Friday, June 7, 2019

இணைப்புக் கட்டணம் செலுத்தாத 109 கல்வியியல் கல்லூரிகள்: மாணவர் சேர்க்கைக்கு முன்பாக செலுத்த கடைசிக் கெடு

By DIN | Published on : 07th June 2019 03:09 AM |

பல்கலைக்கழகத்துக்கான இணைப்புக் கட்டணத்தை பல ஆண்டுகளாக செலுத்தாத 109 ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகள், இந்தக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு முன்பாக அந்தக் கட்டணம் முழுவதையும் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடைசி அவகாசம் அளித்துள்ளது.

அவ்வாறு செலுத்தத் தவறினால், மாணவர் சேர்க்கைக்கான அனுமதி மறுக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் அதிகமான பி.எட். (கல்வியியல்) கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகள் பல்கலைக்கழக இணைப்புக் கட்டணமாக மூன்று கல்வியாண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் வீதம் பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டும்.

ஆனால், பல கல்லூரிகள் இந்தக் கட்டணத்தை செலுத்தாமலே இருந்து வந்துள்ளன. இதுதொடர்பாக பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டபோது, 122 கல்வியியல் கல்லூரிகள் பல ஆண்டுகளாக இணைப்புக் கட்டணத்தை செலுத்தாமல், பல்கலைக்கழகத்தின் வசதிகளைப் பெற்று வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிகள், அபராதத் தொகையுடன் சேர்த்து ரூ. 1 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை இணைப்பு கட்டணம் நிலுவை வைத்திருப்பதும் தெரியவந்தது.

இந்த 122 கல்லூரிகளின் பட்டியலை, செலுத்த வேண்டிய கட்டணத்துடன் சேர்த்து பல்கலைக்கழக இணையதளத்தில் கடந்த மே 6-ஆம் தேதி வெளியிட்ட பல்கலைக்கழகப் பதிவாளர், "மே 10-ஆம் தேதிக்குள் இந்த நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும். இல்லையெனில், பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து உள்ளிட்ட வசதிகள் ரத்து செய்யப்படும்' என எச்சரித்திருந்தார். இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஒருசில கல்லூரிகள் மட்டுமே நிலுவைத் தொகையைச் செலுத்தின. ஆனால், 109 கல்லூரிகள் செலுத்தவில்லை.

அதனைத் தொடர்ந்து, இந்த 109 பி.எட். கல்லூரிகளின் பட்டியலை கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட பல்கலைக்கழகம், நிலுவைத் தொகையைச் செலுத்த மீண்டும் வியாழக்கிழமை வரை கால அவகாசம் அளித்தது. இந்த கால அவகாசமும் முடிவடைந்த நிலையில், 109 கல்லூரிகளும் நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை.

இப்போது மூன்றாவது வாய்ப்பாக 2019-20 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, நிலுவைத் தொகையைச் செலுத்தவேண்டும் என கால அவகாசத்தை பல்கலைக்கழகம் மீண்டும் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வி.பாலகிருஷ்ணன் கூறியது:

பல ஆண்டுகளாக பல்கலைக்கழக இணைப்புக் கட்டணம் செலுத்தாத 122 கல்லூரிகளுக்கு, நிலுவைத் தொகையைச் செலுத்த இரண்டு முறை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருசில கல்லூரிகள் மட்டுமே தொகையைச் செலுத்தியுள்ளன. இப்போது 109 கல்லூரிகள் நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை. 2019-20 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, நிலுவைத் தொகையைச் செலுத்தவேண்டும் என கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதன் பிறகும் நிலுவைத் தொகையை கல்லூரிகள் செலுத்தவில்லை எனில், இந்த விவகாரத்தை பல்கலைக்கழக ஆட்சிக் குழுவுக்கு எடுத்துச் சென்று, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024