Saturday, June 1, 2019

டாக்டர்கள் சீனியாரிட்டி பட்டியல் குளறுபடி: கவர்னரிடம் புகார்

Added : மே 31, 2019 23:36

மதுரை, தமிழக டாக்டர்கள் பணிமூப்பு பட்டியலில் 25 ஆண்டாக குளறுபடி நீடிப்பதாக மதுரை மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 1990-91ம் ஆண்டில் அரசு உதவி டாக்டர் பணிக்கான தேர்வை நடத்தியது. இதில் 553 பேரை தேர்வு செய்து 1991 நவ.12ல் அரசாணை வெளியிட்டது. 

தேர்வானவர்களில் பலர் முதுநிலை, பட்டயப்படிப்பு படித்துக்கொண்டு இருந்தனர். பலர் அந்த ஆண்டே பணியில் சேர்ந்தனர். ஒரு பகுதியினர் படிப்பை முடித்து 1993, 94ல் பணியில் சேர்ந்தனர்.இந்நிலையில் பதவி உயர்வுக்காக பின்பற்றப்படும் சி.எம்.எல்., (சிவில் மெடிக்கல் லிஸ்ட்) பட்டியலில், தாமதமாக பணியில் சேர்ந்தவர்களின் பெயர் முன்னிலையில் இருப்பதாக 1990-91ல் பணியில் சேர்ந்த மதுரை மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். இக்குளறுபடியை சரிசெய்யக் கோரி கவர்னர் பன்வாரிலால் புரோகித், சுகாதாரத்துறை செயலர் பீலாராஜேஷிடம் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசுப்பணியில் சேர நியமன ஆணை பெற்ற ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குள் சேரவில்லை என்றால் தகுதி இழப்பார் என்பது விதி. சில நேரங்களில் வேண்டுகோளை ஏற்று ஆறு மாதங்கள் கழித்து பணியில் சேர அரசு அனுமதிக்கும். எங்களுடன் தேர்வாகி இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து பணியில் சேர்ந்தவர்களின் பெயர்கள் பணிமூப்பு பட்டியலில் எங்களுக்கு முன் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மறுவரையறை செய்யப்படும் நிலையிலும், தொடர்ந்து அவர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளது.குளறுபடிகளை களைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் குளறுபடி சரி செய்யப்படவில்லை. நாங்கள் டீன், இயக்குனராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு பணிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலில் தவிக்கிறோம். பட்டியலில் திருத்தம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024