Monday, June 3, 2019

இசை கொண்டாடும் இசை விழா துளிகள்...

By DIN | Published on : 03rd June 2019 02:42 AM



*"இசை கொண்டாடும் இசை' நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45-க்கு தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாம்பலம் என்.கே.எஸ். நடராஜன் தலைமையில் 76 பேர் கலந்து கொண்ட மங்கல இசை கச்சேரி நடைபெற்றது. சுமார் 10 நிமிடங்கள் வரை இந்தக் கச்சேரி நடந்தது.
*நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன் ஊரான பண்ணைபுரம் கிராமம், தந்தை ராமசாமி, தாய் சின்னத்தாய், சகோதரர்கள் பாவலர், பாஸ்கர், சகோதரி கமலம், இசை குருமார்கள் தன்ராஜ் மாஸ்டர், ஜி.கே.வெங்கடேஷ், டி.வி.கோபாலகிருஷ்ணன், தெட்சிணாமூர்த்தி சுவாமி, திரை இசையில் அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம், தான் வணங்கி வரும் ரமண மகரிஷி ஆகியோரை காட்சிப் படமாக அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தினார். 

*எப்போதும் நிகழ்ச்சிகளில் முதலாவதாகப் பாடும் "ஜனனி ஜனனி'... பாடலையே இங்கும் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் இளையராஜா. இரண்டாவது பாடலாக "நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற "ஹர ஹர மகாதேவ்...' பாடல் பாடப்பட்டது.





*"மடை திறந்து'.... பாடலைப் பாட வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனை பார்த்ததும், ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் இருவரும் இணையும் நிகழ்ச்சி என்பதால் அவ்வளவு கைதட்டல். இளையராஜாவுக்கு அவர் வணங்கும் ரமண மகரிஷியின் படத்தை பரிசாக வழங்கி கட்டித் தழுவினார் எஸ்.பி.பி.

* "அம்மா என்றழைக்காத உயிரில்லையே....' பாடலை முதல் பாடலாக பாடினார் கே.ஜே.ஜேசுதாஸ். அடுத்து "கண்ணே கலைமானே....', "என் இனிய பொன் நிலாவே...', "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே...' என இருவரின் எவர்கிரீன் ஹிட் பாடல்கள் ரசிகர்களின் செவிகளுக்கு விருந்து படைத்தன. ""என் இசை வாழ்க்கையில் மறக்க முடியாத தம்பிகள். பிறந்த நாள் கொண்டாடும் இளையராஜா தம்பிக்கு என் வாழ்த்துகள்'' என்றார் கே.ஜே.ஜேசுதாஸ். குறுக்கிட்ட எஸ்.பி.பி., "நாளை மறுநாள் எனக்கும் பிறந்தநாள்'' என்று சொல்ல, அவருக்கும் வாழ்த்துச் சொல்லி நெகிழ்ந்தார் கே.ஜே.ஜேசுதாஸ்.



*எஸ்.பி.பி. பாட வரும் போதெல்லாம் இளையராஜாவிடம் அவ்வளவு குறும்பாக நடந்து கொண்டார். "ஓ பட்டர் ப்ளை....' பாடல் பாடும்போது "எனக்காய் திறந்தாய் மனக் கதவை...' என்ற வரி வரும் போது இளையராஜாவிடம் அன்பாக கை நீட்டி வம்பிழுத்தார். இதுபோன்று ஒவ்வொரு பாடலிலும் எஸ்.பி.பி.யின் குறும்புகள் தொடர்ந்தன. நீண்ட இடைவெளிக்குப் பின் மேடையில் இணைந்த தருணம் என்பதால், ராயல்டி உரிமை விவகாரத்தை ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள்.



*விழாவுக்கு வந்திருந்த கமல்ஹாசன், "நான் இவரோடு மட்டுமே வேலை செய்து கொண்டிருந்த காலம் அது. வித்தியாசத்துக்காக இன்னொரு இசையமைப்பாளரிடம் சென்று விட்டேன். அவரை நம்பி பாடல்களையும் படமாக்கி விட்டேன். வர்த்தகக் காரணங்களால் அவரோடு சேர முடியவில்லை. கடைசியில் நான் போய் நின்ற இடம் இளையராஜா வீடு. "என்னிடம் பொம்மைதான் இருக்கு. டப்பிங் பிக்சர்ஸ்தான் இருக்கு' என்று சரணடைந்தேன். "சொன்னால் வேறு எடுத்து விடலாம்' என்றேன். "அந்த பொம்மையே போதும்' என்று அதற்கு உயிர் கொடுத்தார். பாடலே யோசிக்காத இடத்திலும் பாட்டு போட்டுக் கொடுத்தார். அதுதான் "ஹேராம்'. காட்சிகளுக்கு இடையே போட்டுக் கொடுத்த பாட்டுதான் "இசையில் தொடங்குதம்மா....'' என நெகிழ்ந்த கமல்ஹாசன், "விருமாண்டி' படத்தில் வரும் "உன்னை விட...' பாடலை பாடி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024