Sunday, December 1, 2019

சென்னை கடற்கரையில் 2-வது நாளாக நுரை வெளியேற்றம்



சென்னை கடற்கரையில் நேற்று 2-வது நாளாக அதிகளவு நுரை வெளியேறியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

பதிவு: டிசம்பர் 01, 2019 04:15 AM

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று முன்தினம் கடல் அலைகளில் திடீரென நுரை பொங்கி வந்தது. கடற்கரையில் பனிபோல் நுரைகள் காணப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் அங்கு சென்று அந்த கடல் நீரின் மாதிரிகள் மற்றும் நுரைகளின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக பட்டினப்பாக்கம் கடலில் இருந்து அதிகளவில் நுரை வெளியேறியது.

மெரினா கடற்கரை, சீனிவாசபுரம், திருவான்மியூர், பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளிலும் கடல் அலைகளில் இருந்து அதிகளவு நுரை பொங்கி வந்தது.

கடற்கரை முழுவதும் நுரை பொங்கி படர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அலையில் கால்களை நனைக்காமல் ஒதுங்கி நின்று அச்சத்துடன் கடலை பார்வையிட்டு சென்றனர். சிறுவர்கள், சிறுமிகள் சிலர் அந்த நுரையை கைகளால் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

ஒரு விதமான தூர்நாற்றத்துடன் வெளியேறும் அந்த நுரை, காற்றில் அடித்து செல்லப்பட்டு பொதுமக்களின் கால்கள் மற்றும் உடம்புகளில் ஒரு விதமான பசை போல் ஒட்டிக்கொள்கிறது. இதனால் பலரின் உடலில் அரிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது:-

கடல் அலைகளில் இருந்து வெளியேறும் நுரைகளை அதிகாரிகள் அடங்கிய குழு பார்வையிட்டது. நுரைகளின் மாதிரிகளை ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் கழிவு நீர், அலைகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாததால், கடலுக்கு உள்ளே செல்லாமல் கரைக்கு அருகிலேயே அலைகளில் சுழன்று கொண்டு கிடக்கிறது. இந்த கழிவு நீருடன் தற்போது பெய்து வரும் மழை நீரும் அதிகளவு கடலில் கலக்கிறது.

இதனால் கடல் அலையில் இருந்து நுரை வெளியேறி வருகிறது. இவை அலையின் வேகத்தில் கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் தள்ளப்படுகிறது. எனவே கடலில் இருந்து நுரை வருவதற்கு இதுதான் காரணம். கடலில் வேதியியல் மாற்றங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவை ஒரு சில நாட்கள் இருக்கும். பின்னர் சரியாகி விடும். இதனால் ஆபத்து எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இருந்தாலும் இந்த நுரையால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுமா? என்ற தகவல் ஆய்வுக்கு பின்னர் தான் முழுமையாக தெரியவரும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இதுகுறித்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த சேகர் என்பவர் கூறியதாவது:-

கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறையும் போது அவ்வப்போது இதுபோன்று நுரை தள்ளுவது வழக்கம் தான். எங்களுக்கு இது புதிதல்ல. ஆனால் பொதுமக்கள் இதை பார்த்து அச்சப்படுகின்றனர். நுரை வெளிப்படுவதால் எங்களுக்கு மீன்பிடிக்க செல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் நடுக்கடலில் நுரை எதுவும் தென்படுவதில்லை.

ஆனால் கரையில் நிறுத்தி வைக்கப்படும் படகு முழுவதும் நுரை ஆகி விடுகிறது. அது ஒன்று தான் பிரச்சினையாக இருக்கிறது. சில நாட்களுக்கு பின்பு இது தானாகவே காணாமல் போய்விடும். அச்சப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024