Saturday, November 1, 2014

மாற்று கட்சியினரின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம், அரசியலில் நாகரிகத்தை மேம்படுத்தி, தேவையற்ற வெப்பத்தையும், கசப்பு உணர்வுகளையும் மாற்றமுடியும். எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எதிரி கட்சிகளாக இருக்க தேவையில்லை.


திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று உலகம் முழுவதிலும் சொல்லும் வழக்கு மொழி உண்டு. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ, இல்லையோ, குடும்பங்களில் உறவுகள் வலுப்படும் இடமாக திருமணங்கள் இருப்பதுபோல, அரசியல் கட்சிகள் இடையே புதிய நட்புகள் உருவாகும் இடமாகவும், ஏன் கூட்டணிகள் உருவாவதற்கு அச்சாரம் போடும் இடமாகவும் மாறிவிடுகிறது. அதை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்வு சென்னையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் பேத்தி சம்யுக்தா சவுமியா அன்புமணி–ப்ரித்தீவன் பரசுராமன் ஆகியோரின் திருமண வரவேற்பின்போதும், திருமணத்தன்றும் நடந்தது.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பார்கள். ஆனால், தமிழக அரசியல் ஒரு வித்தியாசமான நிலையில் தற்போது உள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும், கூட்டணிகள் மாறுபடும். அப்போது, புதிது புதியதாக கூட்டணிகள் உருவாகும். நேற்றுவரை நண்பர்களாக இருந்து, நட்புக்கு இவர்கள்தான் அடையாளம் என்ற வகையில், பாசப்பிணைப்பில் ஒருவரிடம் ஒருவர் அன்பு ஒழுக பழகுவார்கள், பேசுவார்கள். அதேபோல, எதிர் முகாமில் இருப்பவர்கள் அடுத்த முகாமில் உள்ள கட்சியினரை பரமஎதிரிகளாக கருதுவார்கள்.

ஏதோ ஜென்மபகை இருப்பதுபோல, ஒருவரை ஒருவர் நேருக்கு சந்திப்பதையே பாவம் என்று நினைப்பார்கள். ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் மற்றொருவர் கலந்து கொள்ள அழைப்பதும், கலந்து கொள்வதும் தீண்டத் தகாதவையாக நினைப்பார்கள். ஆனால், அடுத்த தேர்தலில் கூட்டணி மாறும்போது, இந்த நிலைமை தலை கீழாக மாறிவிடும். நேற்றுவரை பரம எதிரிகளாக இருப்பவர்கள், உயிர் நண்பர்களாக மாறிவிடுவார்கள். அன்பான நண்பர்களாக இருந்தவர்கள், மீண்டும் எதிரிகளாக மாறிவிடுவார்கள். ஆனால், டெல்லியில் இப்படியொரு நிலைமையே கிடையாது.

பாராளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்குவார்கள், அவைக்கு வெளியே வந்தவுடன் ஒன்றாக உட்கார்ந்து டீ சாப்பிடுவார்கள், ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து நட்பை வலுப்படுத்தி விடுவார்கள். கடந்த பாராளுமன்ற தொடரின்போது, சோனியாகாந்தி தன் காருக்காக காத்திருந்த நேரத்தில், எல்.கே.அத்வானி என் அறைக்கு வாருங்கள்... ஒரு டீ சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று அழைத்தவுடன், அவர் மகிழ்ச்சியுடன் டீ அருந்திவிட்டு சென்றார்.

இதுபோன்ற நிலைமை தமிழக அரசியலிலும் வராதா? என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், தமிழக அரசியலிலும் முன்பு எல்லாம் இதுபோன்ற நிலைமை இருந்தது. 1975–ல் மு.க.ஸ்டாலின் திருமணத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் முக்கிய விருந்தினராக வந்து கலந்து கொண்டு மணமக்களை மனப்பூர்வமாக வாழ்த்திவிட்டு சென்றார்.

1977–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியாக வெற்றிபெற்று, திருநாவுக்கரசர் துணை சபாநாயகராக இருந்தார். அவர் திருமணத்துக்கு, மறைந்த புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதியையும் நேரில் அழைத்து வரச்சொல்லி, அதுபோல திருமணத்திற்கு கருணாநிதியும் வந்து வாழ்த்தினார். இதுபோல, அரசியல் கட்சித்தலைவர்கள் அரசியலில்தான் எதிரிகளாக இருந்தார்களே தவிர, அதைத்தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் நட்புடன்தான் இருந்து வந்தார்கள்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணி ராமதாசும் தங்கள் இல்ல திருமணத்திற்கு அரசியல் கட்சி மாச்சாரியங்களை கடந்து, அனைவரையும் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்கள். அதுபோல, கட்சி வேறுபாடு இல்லாமல் தி.மு.க. தலைவர் கருணாநிதி கண் வலியோடு சென்றதும், பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பதற்கு ஏற்ப அவரும், டாக்டர் ராமதாசும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தங்கள் நட்பின் வலிமைபற்றி பெருமையாக பேசியதும், எதிரும் புதிருமாக இருந்த மு.க.ஸ்டாலினும், வைகோவும் ஒருவரையொருவர் தேடிச்சென்று பேசியதும், அமையப்போகும் கூட்டணியில் ம.தி.மு.க.வும் இடம் பெறும் என்ற சூசகமான தகவலை சமுதாயத்திற்கு எடுத்து காட்டியதும் ஒரு மகிழ்ச்சியான அரசியலை எடுத்து காட்டும் வகையில் இருந்தது. நிச்சயமாக, இதுபோன்ற மாற்று கட்சியினரின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம், அரசியலில் நாகரிகத்தை மேம்படுத்தி, தேவையற்ற வெப்பத்தையும், கசப்பு உணர்வுகளையும் மாற்றமுடியும். எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எதிரி கட்சிகளாக இருக்க தேவையில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024