Saturday, December 6, 2014

ஃபேஸ்புக்கில் மத உணர்வைத் தூண்டும் கருத்துக்கள்: நடவடிக்கை கோரி மனு!

சென்னை: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மத உணர்வைத்துண்டும் விதத்தில் கருத்துக்கள் வெளியிடுவோர் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு நிர்வாகிகள், சென்னை காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அமைப்பின் துணைப்பொதுச்செயலாளர் யூசுப் மற்றும் நிர்வாகிகள்இன்று சென்னை காவல்துறை கூடுதல் இயக்குனரைச் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யூசுப், "இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியால் சோஷியல் மீடியாக்கள் எல்லாமே, மக்களுக்கு மத்தியில் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்தி பல்வேறு நல்ல காரியங்களுக்கும், நல்ல செய்திகளை உலகமெல்லாம் பரப்புவதற்கும் பயன்படுகின்றன.

ஆனாலும், மத உணர்வுகளைத் தூண்டும் செய்திகளையும் பேஸ்புக் போன்று பல்வேறு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். சமீபகாலமாக மறைந்த தலைவர்களைப் பற்றியும், மதநம்பிக்கையினால் புனிதமாகக் கருதப்படக்கூடியவர்களின் கண்ணியத்தை சிதைக்கும் விதமாகவும் முகநூலில் விஷமக் கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் வாழக்கூடிய அனைத்து மக்களும் அமைதியோடு வாழவே விரும்புகிறோம். அனைத்து சமூக மக்களும் இந்த நாட்டில் அமைதியுடன் இருக்கவே விரும்புகிறோம். மத்திய அரசு தனது கொள்கைகளைப் பேசும்போது இந்த நாட்டின் அமைதிதான் வளர்ச்சிக்கு காரணம் என்று சொல்கிறது. ஆனால் இந்த நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக சமூகவலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெகுஜன ஊடகங்களும், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் இதனைக் கண்டறிந்து அப்படிப்பட்டவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும். நாம் மறந்தவர்களை, தொடர்பு விட்டுப்போனவர்களை கண்டறியப் பயன்படும் முகநூலை இதுபோல் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் விதமாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

அவரவர் மதம் அவரவருக்குப் புனிதமானது. யாரும் யாரையும் சீண்டக்கூடாது, காயப்படுத்தக்கூடாது என்பது எங்களின் நம்பிக்கை. முஸ்லிம்களில் அப்படியான காரியங்களைச் செய்வார்கள் என்றால் அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள்தான். இந்த நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அமைதி நிலவினால் மட்டும்தான் வளமும், வளர்ச்சியும் உறுதிசெய்யப்படும். அதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்திருக்கிறார்கள்" என்றார்.

- எம்.செய்யது

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024