பேருந்துகளில் டிராவல் பண்றப்போ, மூன்று பேராவது மாறி, மாறி போன்ல பேசிட்டுதான் இருப்பாங்க. அந்த மூன்று பேரிலும் யாராவது ஒருத்தர்தான் உண்மையைப் பேசுறவரா இருப்பார். லோக்கலில் இருந்துகிட்டே "நான் சிங்கப்பூர்ல இருக்கேன்"னு சொல்ற மாதிரி, அமிஞ்சிக்கரையில இருந்துகிட்டு, அடையாறு வந்துட்டேன்னு பொய் சொல்ற மக்கள்தான் அதிகம். அதுவுமில்லாம ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். வண்டி ப்ரேக் டவுன் ஆயிடுச்சு. எங்க ஏரியாவுல பயங்கர கலாட்டானு விதவிதமா ரீல் விடுறதுக்கும் செல்பேசியைத்தான் பயன்படுத்துறாங்க. ஆக, பொய் விரும்பிகளின் பேராதரவோடதான் செல்பேசிகள் இந்த அளவு சேல்ஸ் ஆகிட்டு இருக்கு.
பஸ் ஸ்பீடா போய்க்கிட்டிருக்கறப்போ அந்த பஸ்ஸுக்குள்ளேயே பல பேர் டெம்பிள் ரன்னில் தலைதெறிக்க ஓடிக்கிட்டு இருக்காங்க. இன்னும் சிலர் ப்ரூட் கிரஷ், மான் வேட்டைனு செல்போன் கேம்ஸ்தான். இதில் செக்கிங் வந்து உலுக்கு உலுக்குனு உலுக்கின பிறகுதான் டிக்கெட் எடுக்காத மேட்டரே பலருக்கும் தெரிய வருது. விளையாட்டு வினையாகிறது இதுதானோ.
கல்யாணத்துக்கு முன் லவ் பண்றதுக்கு தில்லு இல்லாத தில்லுதுரைகள்தான் கல்யாணம் நிச்சயமான மறுநொடியிலிருந்து லவ் பண்ணத் தொடங்குறாங்க. கத்து வெச்ச மொத்த வித்தையையும் இறக்குற மாதிரி, ராத்திரி பகல்னு வித்தியாசம் இல்லாமல், சோறு தண்ணியப்பத்திக்கூட கவலைப்படாமல், விடிய விடிய பேசிப் பேசியே செல்பேசி வழியா காதல் வளர்ப்பாங்க. இந்த மாதிரி திடீர் காதலர்களை நம்பித்தான் பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க ஆஃபரை கொண்டு வந்திருக்காங்க. கல்யாணம் நிச்சயமானப்போ, கோடீஸ்வரனா இருந்துட்டு, கல்யாணத்தன்னைக்கு லட்சாதிபதியா மாறிப்போன விபரீதமெல்லாம் இதுல சகஜம்.
இப்போ பஞ்சாயத்து ஆலமரம், மேடை, சொம்பெல்லாம் மலையேறிப் போயிடுச்சு. 'ஆன் தி வே'ல, செல்பேசி வழியா பெரும்பாலான பஞ்சாயத்து நடக்குது. பஞ்சாயத்து பண்றேன் பேர்வழினு, சுற்றி இருக்கிறவங்களையும் மறந்துட்டு, தப்பு பண்றவனை நாராசமா திட்டுறதுக்கும் தயங்குவதில்லை. மொத்தக் குடும்பத்தையும் திட்டித் தீர்த்த பிறகுதான், காசெல்லாம் கரைஞ்சிடுச்சேன்னு 'வடை போச்சே' ஃபீலிங்கே வரும். ஆக நாம நாட்டாமைத்தனம் பண்றதால தீர்ப்பென்னவோ செல்பேசி கனெக்ஷன் கொடுக்கிற முதலாளிகளுக்குத்தான் சாதகமா இருக்கு.
கூட்டுக் குடும்பமாவோ அல்லது ஒரே ஊருக்குள்ளயோ வாழ்ந்துகிட்டிருந்த காலத்துல கிசுகிசு பேசுறதெல்லாம் தண்ணிபட்ட பாடு. ஒரு எட்டு போனோமா, பேசி பத்த வெச்சோமா, வந்தோமான்னு இருந்தாங்க. இப்போதான் ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு போக ஆரம்பிச்சாச்சே. கிசுகிசுவெல்லாம் செல்பேசியில்தான் பெரும்பாலும்.
குளிர்காலம்னா நாம போர்வையைப் போர்த்திகிட்டு தூங்குறதுல ஒரு நியாயம் இருக்கு. போர்வைக்குள்ள செல்போனை வெச்சுகிட்டு விடிய விடிய வாட்ஸ் அப் சாட்டிங்னு தானும் தூங்காம, தள்ளியும் படுக்காம இருக்கிறது பேஷனாப் போயிடுச்சு. இதுல இந்த மெஸேஜை பத்து பேருக்கு ஃபார்வர்ட் பண்ணினால் நல்லது நடக்கும்னு அட்வைஸோட மெஸேஜ் வேற.
இவ்வளவும் போதாதுனு, சும்மா வர்ற கஸ்டமர் கேர் போனையும் விட்டு வைக்காமல் அதுல பேசுற பொண்ணுங்க கூடவும் கடலை போடுறதுக்கு தனி கூட்டமே திரியுது. ரியல் எஸ்டேட் விளம்பரத்திலிருந்து ரிசார்ட் விளம்பரம் வரைக்கும் ஒண்ணைக்கூட விட்டுவைக்காம கால் பண்ற பெண்களிடம் என்னவோ அம்பானி ரேஞ்சுல டீடெயிலெல்லாம் கேட்டுட்டு கடைசியில இப்போதான் நல்ல வேலை தேடிக்கிட்டிருக்கேன். வேலை கிடைச்சதும் முதல் மாச சம்பளத்துல நீங்க சொல்ற இடத்துக்கு அட்வான்ஸ் கட்டிடுறேன்னு சத்தியம் பண்ணி பந்தாவா பல் இளிக்கிறதே பழக்கமா வெச்சிக்கிறாங்க. இப்படியெல்லாம் இருக்குறப்போ செல்போன் கம்பெனி வளராம எப்பூடி!
- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்
No comments:
Post a Comment