Saturday, December 6, 2014

சிலிண்டருக்கான மானியம் வேண்டுமா?

வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே பல மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டாலும், ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது.

பாமர மக்களுக்கு மானியம் என்றாலோ, வங்கிக் கணக்கில் மத்திய அரசு பணத்தை செலுத்துகிறது என்றாலோ புரியவில்லை.

அதாவது, ஒவ்வொரு சிலிண்டரின் முழு விலையும் (சமீபத்தில் ரூ.113 குறைக்கப்பட்ட பிறகு) ரூ.752 ஆகும். இதில், ரூ.410ஐ நாம் சிலிண்டருக்கு செலுத்தி வாங்குகிறோம். மீதத் தொகையை மத்திய அரசு நாம் அளிக்கும் வரிப்பணத்தில் இருந்து நமக்காக மானியமாக செலுத்துகிறது. அந்த மானியத் தொகையை மத்திய அரசு கேஸ் நிறுவனங்களுக்குக் கொடுத்துவிடும். இதனால் வாடிக்கையாளர்கள் வாங்காத சிலிண்டர்களுக்கும் கேஸ் நிறுவனங்கள் கணக்கு காட்டி மானியத் தொகையை பெறும் வாய்ப்பு உள்ளது.

எனவே இனி ஒவ்வொரு காஸ் சிலிண்டருக்கும் உரிய மானியத் தொகையை நேரடியாகவே வாடிக்கையாளர்களிடம் கொடுத்துவிட்டால், அந்த தொகையை எடுத்து அவர்கள் சிலிண்டர் வாங்கிக் கொள்ளலாம். இதனால், மானியத் தொகையில் முறைகேடு நடப்பது தவிர்க்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்து அறிவித்திருப்பதே நேரடி மானிய திட்டமாகும்.

இந்த திட்டத்தின்படி, காஸ் ஏஜென்சியிடம் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது வங்கிக் கணக்கு எண்ணையும், வங்கியிடம் காஸ் ஏஜென்சி அளிக்கும் விண்ணப்பத்தையும் கொடுத்து பதிவு செய்துவிட வேண்டும். பிறகு, சிலிண்டர் வீட்டுக்கு வரும் போது அதற்கான முழுத் தொகையையும் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். சிலிண்டர் வாங்கிய 3வது நாள், வீட்டு சிலிண்டருக்கான மானியம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் அனைவரும் மார்ச் 31–ந் தேதிக்குள் உரிய ஆவணங்களை ஏஜென்சிகளிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சிலிண்டருக்கான மானியம் பெற தங்கள் ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண்களை அவரவருக்கான காஸ் ஏஜென்சியிடம் பதிவு செய்ய வேண்டும். முன்பு, இந்த மானியம் பெற ஆதார் அட்டை அவசியம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது ஆதார் அட்டை அவசியமில்லை என்றும், வங்கி கணக்கு எண் மட்டுமே முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.டி.பி.ஐ., எஸ்பிஐ என 40 வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் அல்லது புதிதாக கணக்குத் துவங்கி தங்களது வங்கி கணக்கு எண்களை கேஸ் ஏஜென்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சரிங்க.. வெறும் கேஸ் ஏஜென்சியிடம் கொண்டு போய் கொடுங்கள் என்று சொன்னால் போதுமா.. என்னவெல்லாம் கொடுக்க வேண்டும் என்று தெரிய வேண்டாமா..

அதையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.. வாருங்கள் தொடர்ந்து படிக்கலாம்...

அதாவது, காஸ் ஏஜென்சிகளிடம் வாடிக்கையாளர்களின் காஸ் இணைப்பு பாஸ் புத்தகம் அசல் மற்றும் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை அசல் மற்றும் நகல் ஆகிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதில் உண்மையான ஆவணங்களைக் காண்பித்து அவற்றுக்கான நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அதன் நகல், குடும்ப அட்டை மற்றும் நகல் (குடும்ப அட்டையின் வெளிப்பக்கம் மற்றும் காஸ் ஏஜென்சி சீல் உள்ள உள்பக்கத்தின் நகல்) இதோடு, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், வங்கியின் ஐ.எப்.எஸ்.சி. (வங்கியின் கணக்குப் புத்தகத்தில் இருக்கும்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

காஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் நேரில் சென்று காஸ் ஏஜென்சியில் கொடுக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதால், வாடிக்கையாளரே நேரடியாக செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதார் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர் என்றால் விண்ணப்பம் 1 மற்றும் 2–ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டைக்கான நகல், வங்கி கணக்குப் புத்தகம், சிலிண்டருக்கான புத்தகத்தின் நகலை இணைக்க வேண்டும். விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்து காஸ் ஏஜென்சியிடமும், விண்ணப்பம் 2ஐ பூர்த்தி செய்து கணக்கு வைத்திருக்கும் வங்கியிடமும் அளிக்க வேண்டும்.

ஆதார் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பம் 3 மற்றும் 4–ஐ பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பம் 3ல் வாடிக்கையாளர் விவரம் மற்றும் எரிவாயு உருளைக்கான வாடிக்கையாளர் பதிவு எண் ஒன்று காஸ் ஏஜென்சி அளிக்கும். அதனை பதிவு செய்து வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பம் 4ஐ பூர்த்தி செய்து கேஸ் ஏஜென்சியிடம் தர வேண்டும். இதற்கு உரிய ரசீதை வாடிக்கையாளர்கள் கேட்டுப் பெற வேண்டும். அதனுடன் குடும்ப அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தகம், சிலிண்டருக்கான புத்தகத்தின் நகல்களை இணைக்க வேண்டும்.

படிவம் வாங்கச் செல்லும் போது நுகர்வோர் காஸ் பில்லை எடுத்துச் செல்ல வேண்டும். வேறு எதையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பங்கள் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. ஆன்லைனிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வங்கி கணக்கு எண்ணைப் பதிவு செய்ய மார்ச் 31ம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் வங்கிக் கணக்கைத் துவக்கி காஸ் ஏஜென்சியிடம் கொடுக்க வேண்டும்.

இல்லாவிடில் நேரடி மானிய திட்டம் கிடைக்காமல் போய்விடும். மானியமில்லாமல் முழுத் தொகையையும் வாடிக்கையாளரே செலுத்தி சிலிண்டரை பெறும் நிலை ஏற்படலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024