Monday, December 8, 2014

நவீன வசதிகளுடன் சொகுசு சுற்றுலா ரயில்


இந்தியாவின் பாரம்பரிய நகரங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில், அதிநவீன "மஹாராஜா எக்ஸ்பிரஸ்' என்ற சொகுசு சுற்றுலா ரயிலை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்திருக்கிறது.

ஏழு நட்சத்திர ஹோட்டல் வசதிகளுடன் கூடிய இந்த ரயில், ஆசியாவிலேயே மிக உயர்ந்த கட்டணத்தைக் கொண்ட ரயிலாகக் கருதப்படுவதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய காலங்களில் ராஜாக்களும், ஆட்சியாளர்களும் திருமண நிகழ்ச்சிகள், வேட்டையாடுதல் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது தங்களுக்கென தனியாக சொகுசு ரயில்களைப் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு அவர்கள் செல்லும் ரயில்களில், பல நாள்களுக்குத் தேவையான உணவு, ஆடை, அணிகலன்கள், அரண்மனை போன்ற அமைப்பு, அரச குடும்பத்தினருக்கான அறைகள் என அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

இப்படி சகல வசதிகளுடன் இந்தியாவின் பாரம்பரிய நகரங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்த "மஹாராஜா எக்ஸ்பிரஸ்' ரயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.

என்னென்ன வசதிகள்? இந்த ரயிலில் மொத்தம் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். 88 பேர் பயணம் செய்ய முடியும். இதில், 14 விருந்தினர் படுக்கைகள், 20 டீலக்ஸ் அறைகள், 18 ஜூனியர் சூட்டுகள், ஒரு பிரெஸிடன்ஷியல் சூட் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அனைத்துப் பெட்டிகளிலும் தட்பவெப்பநிலை கட்டுப்பாட்டு வசதி, "வை-ஃபை' இணைப்பு, சாட்டிலைட் சேனல்களுடன் கூடிய எல்.இ.டி. டிவி, தொலைபேசி, உணவு விடுதி, பார், விளையாட்டு, பொழுதுபோக்கு அரங்கங்கள் என்பன உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பயண விவரம்: இந்தச் சுற்றுலா ரயில் மூலம் ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா, இந்தியன் ஸ்ப்லென்டர், இந்தியன் பனோரமா, டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா, ஜெம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய 5 பயணத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தச் சுற்றுலா மூலம் இந்தியாவை ஆண்ட அரசர்களின் கோட்டைகள், அரண்மனைகள், உலகப் புராதனச் சின்னங்கள், ராஜஸ்தான் பாலைவனம், ஆன்மிக தலங்கள், மலைகள் ஆகியவற்றை கண்டு ரசிக்க முடியும் என்பதோடு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியப் பெருமைகளையும் உணர்ந்து கொள்ள முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

வருகிற 14-ஆம் தேதி "ஜெம்ஸ் ஆஃப் இந்தியா' என்ற பயணத் திட்டத்தின் கீழ் 4 நாள் சுற்றுப் பயணமாக தில்லி- ஆக்ரா- ரணதம்பூர்- ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

டிசம்பர் 27-ஆம் தேதி "தி இந்தியன் பனோரமா' பயணத் திட்டத்தின் கீழ் 8 நாள் சுற்றுப் பயணமாக தில்லி- ஜெய்ப்பூர்- ரணதம்போர்- ஃபதேபூர் சிக்ரி- ஆக்ரா- குவாலியர்- ஒடிஸா- கஜுராஹோ- வாராணசி- லக்னெü ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

தொடர்ந்து வருகிற 2017-ஆம் ஆண்டு வரை பல்வேறு சுற்றுலாப் பயணத் திட்டங்களுக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசியாவிலேயே மிக அதிகக் கட்டணத்தைக் கொண்ட சுற்றுலா ரயில் இது என்றும் தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



எந்தெந்த ஊர்களுக்கு...



ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா:

மும்பை- அஜந்தா- உதைபூர்- ஜோத்பூர்- பிகானேர்- ஜெய்ப்பூர்-

ரணதம்போர்- ஃபதேபூர் சிக்ரி- ஆக்ரா- டில்லி.

இந்தியன் ஸ்ப்லென்டர்: டில்லி- ஆக்ரா- ரணதம்போர்- ஜெய்ப்பூர்-

பிகானேர்- ஜோத்பூர்- உதைபூர்- பலசினோர்- மும்பை.

இந்தியன் பனோரமா: டில்லி- ஜெய்ப்பூர்- ரணதம்போர்- ஃபதேபூர் சிக்ரி- ஆக்ரா- குவாலியர்- ஒடிஸா- கஜுராஹோ- வாராணசி- லக்னெü- டில்லி.

டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா: டில்லி- ஆக்ரா- சவாய் மாதேபூர்-ஜெய்ப்பூர்- டில்லி.

ஜெம்ஸ் ஆஃப் இந்தியா: டில்லி- ஆக்ரா- ரணதம்போர்- ஜெய்ப்பூர்- டில்லி.

தொடர்புக்கு: 91 9717635915, 011-23210321

இமெயில்: maharajas@irctc.com

இணையதளம்: http:www.irctctourism.com



கட்டணம் எவ்வளவு?



சுற்றுலாத் திட்டத்தை தேர்வு செய்வதன் அடிப்படையில் பெரியவர்களுக்கு (நபர் ஒருவருக்கு) குறைந்தபட்சம் ரூ.2.39 லட்சம் முதல் ரூ.14.75 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறியவர்களுக்கு (5 வயது முதல் 12 வயது வரை) ரூ.1.20 லட்சம் முதல் ரூ.7.40 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024