Monday, December 8, 2014

பிரீமியம் ரயில்களுக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை!

மத்திய அரசு அறிமுகப்படுத்திய பிரீமியம் தத்கல், பிரீமியம் ரயில் திட்டங்களுக்கு தமிழகத்தில் போதிய வரவேற்பு இல்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரீமியம் தத்கல் முறை அறிமுகப்படுத்தி இரண்டு மாதங்களில் 56.7 சதவீதப் பயணிகள் மட்டுமே இதனைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பல பிரீமியம் ரயில்கள், போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில நாள்களுக்கு முன் சபரிமலைக்கு அறிவிக்கப்பட்ட பிரீமியம் ரயில்கள், பயணிகளிடையே வரவேற்பு இல்லாத காரணத்தால் அதிவிரைவு சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டன. இதில் குறிப்பாக, மதுரை- ஜெய்பூர் இடையே பிரீமியம் விரைவு சிறப்பு ரயில், ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால், சில வாரங்களிலேயே அந்த ரயில் ரத்து செய்யப்பட்டது.

வட மாநிலங்களில் வர்த்தக நகரங்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்ற பிரீமியம் ரயில், பிரீமியம் தட்கல் முறை தமிழகத்தில் வெற்றி பெறவில்லை. முதன் முதலில் தில்லி- மும்பை இடையே பிரீமியம் விரைவு ரயில் கடந்தாண்டு இயக்கப்பட்டது. அதன் வரவேற்பை பொருத்தே பட்ஜெட்டில் பிரீமியம் விரைவு ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பிரீமியம் தத்கல்: பிரீமியம் தத்கல் முறையில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில் தத்கல் ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இடங்கள் பிரீமியம் தத்கலுக்கு ஒதுக்கப்படும். இது சாதாரண தத்கல் டிக்கெட் முன்பதிவுக் கட்டணத்தில் இருந்து முதலில் பத்து சதவீத கட்டணம் உயர்த்தப்படும்.

பின்னர் அது 20 சதவீதமாகி அதற்கு மேலும் பயணிகள் இருந்தால் 40 சதவீதம் முதல் ஐம்பது சதவீகிதம் வரை இக்கட்டணம் உயர்த்தப்படும். இதனை இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும்.

காத்திருப்பு பயணச் சீட்டு கிடையாது. படுக்கை, இருக்கை வசதி கொண்ட பயணச் சீட்டை மட்டுமே பிரீமியம் தத்கல் வழங்கும். உதாரணத்துக்கு ரூ.250 க்கான தத்கல் பயணச் சீட்டு, பிரீமியம் தத்கலில் ரூ.500-க்கு கிடைக்கும்.

பிரீமியம் விரைவு ரயில்: பிரீமியம் விரைவு ரயில்களில் டைனாமிக் பிரைசிங் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது பயணிகளின் தேவைக்கு ஏற்ப முன்பதிவு நிலவரத்தைப் பொருத்து ரயில் பயணச் சீட்டு கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கும். சென்னையில் இருந்து திருச்சிக்குப் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் ரூ.225 மதிப்புள்ள பயணச் சீட்டு, தேவை அதிகமாகும் பட்சத்தில் ரூ.800 வரை பிரீமியம் ரயில்களில் கட்டணம் இருக்கும்.

இதுபோன்ற பிரீமியம் ரயில்களில் ஏசி வகுப்புகளின் பயணச் சீட்டு விமானப் பயணச் சீட்டுக்கு நிகராக இருக்கும். மேலும், பிரீமியம் ரயில்களின் பயணச் சீட்டு விற்பனை ரயில் புறப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன்பாக இணையதளத்தில் முன்பதிவு தொடங்கப்படும். ஒரு முறை முன்பதிவு செய்துவிட்டால், ரத்து செய்ய முடியாது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி கூறியது:

வட மாநிலங்களில் பிரீமியம் ரயில் அதிக வரவேற்பை பெற்றது. இதற்குக் காரணம் அவர்கள் செய்யும் வணிகம். தில்லி- மும்பை- ஆமதாபாத் ஆகியவை வர்த்தக நகரங்கள்.

அவர்களுக்கு இந்தப் பிரீமியம் தத்கல், பிரீமியம் ரயில்களின் கட்டணம் பெரிதில்லை. ஆனால், தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை வேறு. இந்த நடைமுறை தமிழகத்தில் பயணிகளிடம் போதிய வரவேற்பு பெறவில்லை என்றார் அவர்.



பாதி இடங்கள்கூட முன்பதிவாகவில்லை (அக்.1 முதல் நவ.30 வரை)



சென்னை சென்ட்ரல்- ஆமதாபாத்- நவஜீவன் விரைவு ரயிலில் 2 மாதங்களில் பிரீமியம் தத்கலுக்கு முன்பதிவுக்கென ஒதுக்கப்பட்ட 8,164 இடங்களில் 3,882 இடங்களே முன்பதிவு செய்யப்பட்டன.

சென்னை எழும்பூர்- செங்கோட்டை- பொதிகை விரைவு ரயிலில் பிரீமியம் தத்கல் முன்பதிவுக்கென ஒதுக்கப்பட்ட 6,786 இடங்களில் 3,327 இடங்களே முன்பதிவு செய்யப்பட்டன.

கோவை- ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் பிரீமியம் தத்கல் முன்பதிவுக்கென ஒதுக்கப்பட்ட 225 இடங்களில் 51 இடங்களே முன்பதிவு செய்யப்பட்டன. இதில், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மட்டுமே 30 சதவீதம் நிரம்பியது. இரண்டாம் ஏசி, மூன்றாம் ஏசி வகுப்புகளில் பிரீமியம் தத்கல் முன்பதிவுக்கு வரவேற்பு இல்லை.

முன்பதிவு உள்ள தத்கல் ரயில்கள்



சென்னை சென்ட்ரல்- ஆமதாபாத் நவஜீவன் விரைவு ரயில்

சென்னை சென்ட்ரல்- ஹெளரா கோரமண்டல் விரைவு ரயில்

சென்னை சென்ட்ரல்- ஹெளரா மெயில்

சென்னை எழும்பூர்- செங்கோட்டை பொதிகை விரைவு ரயில்

திருவனந்தபுரம்- ஷாலிமார் விரைவு ரயில்



ரத்து செய்யப்பட்டவை

மதுரை- ஜெய்ப்பூர் பிரீமியம் ரயில்

சென்னை சென்ட்ரல்- ஹெüரா பிரீமியம் ரயில்

சென்னை சென்ட்ரல்- கொச்சுவேளி பிரீமியம் ரயில்

சென்னை சென்ட்ரல்- திருநெல்வேலி பிரீமியம் ரயில்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024