Monday, December 8, 2014

குப்பை மேடுகளும் குளிர் சோலைகளும் By ஆர்.எஸ். நாராயணன்..Dinamani 8.12.2014

மனிதனுக்கு உடலும் தூய்மையாக இல்லை. உள்ளமும் தூய்மையாக இல்லை. கேஜரிவால் துடைப்பத்தை அடையாளப்படுத்தி தில்லித் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டினார். வென்ற வேகத்திலேயே துடைப்பத்தைத் தொலைத்துவிட்டார். இப்போது அந்தத் துடைப்பம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கையில் "ஸ்வச்ச பாரதம்' என்ற பெயரில்.

ஸ்வேதா என்றால் தூய்மை. ஆகவே, தூய்மையைக் குறிக்கும் வெள்ளை உடையுடன் வெள்ளைக் குல்லாய் அணிந்து அழுக்கைக் கூட்டுகிறார்கள். கூட்டுவது சரி. கொட்டுவது எங்கே? கொள்வதற்கு இடமில்லாமல் கூட்டுவதில் பயன் உண்டா?

ஒவ்வொரு ஊரிலும் வண்ண மயமான பிளாஸ்டிக் பைகள் சல சலக்க மலை போல் குவிந்துள்ள குப்பைகளை அழிக்காமல் தூய பாரதத்தை உருவாக்க முடியுமா? இது ஒரு பக்கம்.

இந்தியாவின் மக்கள்தொகை 100 கோடிக்கும் மேல். இந்தியாவின் உணவு உற்பத்தி (தானியம், பழம், காய்கறிகள், பால், இறைச்சி எல்லாம் சேர்த்து) 60 கோடி டன். ஆண்டுக்கு ஒரு இந்தியன் 600 கிலோ உணவு உட்கொண்டு அதில் சுமார் 50 கிலோ அளவில் சீரணித்து ரத்தம், எலும்பு, சதையாக மாற்றிக்கொண்டு 550 கிலோ அளவில் சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றுகிறான்.

இவற்றில் 70 சதவீதம் திறந்தவெளியிலும், மற்றவை வீட்டில் உள்ள டாய்லட்டிலும் கழிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் நதிகள் எவ்வளவு புனிதமானவை என்பதற்குச் சாட்சியாக அக்காலத்து இந்தியர்கள் தினமும் குளிக்கும்போது, ஒரு சுலோகத்தை உரக்கச் சொல்லியவாறு நாலு சொம்புக் கிணற்று நீரைத் தலையில் ஊற்றிக் கொண்ட மரபும் தொலைந்து விட்டது.

புனித நதிகளும் அசுத்தமாகிவிட்டன. ஏனெனில் சுத்தம் என்று சொல்லி டாய்லட்டில் கழிப்பதும் கழிவுநீர்க் குழாய்கள் வழியே புனித நதிகளில்தான் சங்கமம் ஆகின்றன.

கிராமப் பகுதிகளில் ஒதுங்குமிடம் கட்டி ஒதுக்குவதை உரமாக்கினால் விவசாயம் வளம் பெறும். பாரத நாட்டுப் பெண்மணிகள் இரவை எதிர்பார்த்து ஒதுங்கும் நேரத்தில் அவர்களின் கற்புக்கும் சோதனைகள் ஏற்படுவது உண்டு.

வழிப்பறிக் கொள்ளையர்களும், காமாந்தகர்களும் இருட்டில் பதுங்கி இத்தகைய பாதகங்களைச் செய்வதுண்டு. இப்படிப்பட்ட இருட்டுகளை வெளிச்சமாக்கி நிழல்களை நிஜமாக்க வேண்டும். எப்படி?

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிப்பிடம் என்ற திட்டத்தை மாற்றி பழக்கதோஷம் காரணமாக கிராம மக்கள் பயன்படுத்தும் அதே திறந்த வெளியில் 20 அல்லது 30 கழிவறைகளுடன் குளியலறைகள் கொண்ட சமுதாயக் கழிப்பிட வளாகங்களை அமைக்கலாம்.

எவ்வாறு பேருந்து நிலையங்களில் கட்டணக் கழிப்பிடம் செயல்படுகிறதோ அதேபோல், ஆனால், கட்டணம் வாங்காமல் சமுதாயக் கழிப்பிடங்கள் செயல்பட வேண்டும். சுத்தம் பராமரிக்க அங்கு ஆட்களை நியமிக்கலாம்.

வீட்டில் கழிப்பிடம் கட்டிவிட்டுத் தண்ணீர் வசதி இல்லாவிட்டால் பயன்படுத்த முடியாது. இப்படிப்பட்ட சமுதாயக் கழிப்பிடங்களின் செப்டிக் டேங்கில் சேரும் கழிவுநீரிலிருந்து மீத்தேன் மின்சாரம் எடுத்து சுயதேவைப் பூர்த்தி முறையில் இருட்டையும் செலவில்லாமல் வெளிச்சமாக்கலாம்.

இதுபோல் பேருந்து நிலையங்களில் உள்ள செப்டிக் டேங்குகளிலிருந்தும் மீத்தேன் மின்சாரம் தயாரித்து மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை உயர்த்தலாம்.

புனித நதிகள் மனிதக்கழிவுகளால் அசுத்தமாகின்றன. ஏரிகளும் குளங்களும் பிளாஸ்டிக் கலந்த இதரக் குப்பைகளால் அசுத்தமாகின்றன. வானத்தில் உள்ள வருணதேவன், தான் வழங்கும் கொடையை மனிதன் மாசுபடுத்தி வருவதைக் கண்டு மனம் வருந்துவானே.

குப்பை கொட்ட உகந்த இடம் இல்லாமல் ஏரி, குளங்களைக் குப்பைகளால் நிரப்பினால் நன்னீருக்கு என் செய்வது? மனைக்கட்டுகளின் தேவையும் உயர்வதால் தூர்ந்த நிலையில் உள்ள ஏரி, குளங்களுக்கு ஏக டிமாண்ட்.

வருவாய்த் துறையை ஏமாற்றிப் பட்டா வாங்கி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அடுக்குமாடிக் கட்டடம் கட்டுகிறது. நகராட்சிகளும் பேரூராட்சிகளும் ஏரி, குளங்களில் குப்பை கொட்டுகிறது.

கோவில்களெல்லாம் திருத்தலங்கள். திருத்தலங்கள் எல்லாம் திருக்குளங்கள். திருக்குளங்கள் எல்லாம் பிளாஸ்டிக் குப்பை மேடுகள். இதுவே நாம் காணும் காட்சி.

நகராட்சியா, நரகாட்சியா?

இறைவா, நீயே சாட்சி.

பிளாஸ்டிக் குப்பை மேடுகளுக்குத் தீர்வு காணாமல் தூய பாரதத்தை எவ்வாறு நிர்மாணிப்போம்!

பிளாஸ்டிக் குப்பைகள் சேராமல் பாரத மண்ணைக் காப்பாற்றுவது எப்படி?

அன்றைய கிராமங்கள் இன்றைய நகரங்கள். அன்றைய மனிதன் (1970-80 வரை) கடை கண்ணிக்குச் செல்லும்போது கூடவே பெரிய பை எடுத்துச் செல்வான். பால், எண்ணெய் வாங்கப் பாத்திரம் எடுத்துச் செல்வான்.

இன்றோ கை வீசியபடி செல்கிறான். மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி எல்லாமே பிளாஸ்டிக் பைகளில் வழங்குகிறார்கள். ஓட்டல்களிலும் சாம்பார், சட்னி, இட்லி, தோசை, சாப்பாடு எல்லாமே பிளாஸ்டிக் பைகளில் பார்சல் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் கப்புகளில் காபி, டீ. பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர்.

ஆனால் இத்தகைய பிளாஸ்டிக்குகள் பயனான பின்னர் ஆங்காங்கே வீசி எறியப்படுகிறது. மக்கக் கூடிய குப்பைகளில் கலந்து விடுகிறது. இப்படிப்பட்ட சூழலை மாற்றுவது எப்படி?

குப்பைகளைக் கூட்டி எடுத்துச் செல்லும் போதே மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் பிரித்துச் செல்வது நலம். அவ்வாறு செய்யாமல் மொத்தமாகக் கொட்டுவதை நிறுத்த வேண்டும்.

சில பேரூராட்சிகள் கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தி பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்து ரூ.2,000 வரை அபராதம் போடுகிறார்கள். ஒரு வாரத்திற்குப் பின் பழையபடி சாமான்களைப் பிளாஸ்டிக் பைகளில் கடைக்காரர்கள் வழங்குகிறார்கள். காரணம் நுகர்வோர்கள்.

கட்டிய அபராதத்தைப் பொருள்களில் விலையைக் கூட்டி கடைக்காரர்கள் ஈடு செய்து விடுவார்கள். ஆகவே, பிளாஸ்டிக் பைகளில் சாமான்கள் வாங்க மாட்டோம் என்று பொதுமக்கள் சபதம் செய்தால்தான் விடிவு.

பொதுமக்கள் கடைக்குப் போகும் முன்பு பை, பாட்டில், பாத்திரங்களை எடுத்துச் செல்லவேண்டும். பால், சமையல் எண்ணெய், நெய் நீங்கலாக மற்றவை பிளாஸ்டிக் பைகளில் பேக் (Pack) செய்யத் தடை உத்தரவு வேண்டும். மீண்டும் பயன்படும் வழியில் பிளாஸ்டிக் கண்டைனர்களை அனுமதிக்கலாம்.

இப்படி ஒரு தடை உத்தரவு பிறப்பிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளில் கலப்பதைத் தவிர்க்கலாம். கொட்டும்போதே நுகர்வோர் மக்கும் குப்பைகளான காய்கறி, பழம், சோறு, இறைச்சிக் கழிவுகளைத் தனியாகவும், பிளாஸ்டிக்குகளைத் தனியாகவும் பிரித்து வழங்கலாம்.

அவ்வாறு இயலாத சூழ்நிலையில் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரி, டிராக்டர்களில் உடன் செல்வோர் அப்பணியில் ஈடுபடலாம். இதன்மூலம் மக்கும் தன்மையுள்ள குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் பணி எளிதாகும்.

பிரிக்க இயலாதவாறு இதுவரை கொட்டப்பட்ட குப்பை மலைகளை என்ன செய்யலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஜே.சி.பி. உதவி கொண்டு மூட்டமாயுள்ள குப்பைகளை அழுத்திச் சமனாக்க வேண்டும். குப்பைகள் குவிந்த இடத்திலேயே மண்ணைத் தோண்டி அரை அடி கனத்திற்குப் பரப்பிவிட வேண்டும்.

இவ்வாறு ஓரளவுக்கு சமன் செய்யப்பட்ட அம் மண் மீது ஆல், அரசு, கொன்றை, வாகை, வேம்பு, நாவல், கொடுக்காப்புளி, புளி போன்ற மர விதைகளை நெருக்கமாக நட வேண்டும்.

ஆழத்தில் நீர் தேடும் இம் மரத்தின் வேர்கள் பிளாஸ்டிக்குகளைத் துளைத்துக் கொண்டு குவியலின் கீழுள்ள சமன் நிலத்தில் கால் பதிக்கும்.

மூன்றே மாதங்களில் புல் வளர்ந்து பசுமை தட்டும். மூன்றே ஆண்டுகளில் மரங்கள் வளர்ந்து குளிர்சோலையாகும்.

இவ்வாறு ஒவ்வொரு ஊராட்சி / பேரூராட்சிகளிலும் குப்பை மேடுகள் பசுமை நிறைந்த சோலைகளாக மாற வேண்டும்.

அப்போதுதான் தூய பாரதம் என்கிற கனவு நனவாகும்.



கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024