Thursday, March 10, 2016

இணையதளமும், தகவல்களும்..


DINAMANI


By ஜி. சசிகுமார்

First Published : 10 March 2016 01:46 AM IST


இணையம் இன்றி அணுவளவும் அசையாது என்பதுதான் இன்றைய நிலை. துவக்க காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இணையம், தற்போது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, குழந்தைகளுக்கான பொருள்கள் முதல் பெரியவர்களுக்கான மருந்து, மாத்திரைகள் வரை அனைவருக்கும் தேவையான, அனைத்து விதமான பொருள்களையும் இணையதளங்கள் மூலமாக வீட்டில் இருந்தபடியே தற்போது வாங்க முடிகிறது.
மேலும், வங்கிக் கணக்கைச் செயல்படுத்துதல், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளையும் இணையம் மூலமாகவே செய்து முடிக்க முடிகிறது.
இன்னும் இதுபோல எண்ணற்ற சேவைகளையும் எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளும் இடையறாது நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு இணையத்தின் பயன்பாடு ஒருபுறம் இருக்க, தற்போது மிகப் பெரிய தகவல் சேகரிப்பு மையமாகவும் திகழ்கிறது இணையம். இதில் கிடைக்காத தகவல்களே இல்லை எனும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தகவல்கள் சரியாவைதானா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, தமிழ்ச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ள ஒரு தளத்தில் அசோகமித்திரனின் "புலிக்கலைஞன்' எனும் சிறுகதையும் இடம் பெற்றுள்ளது. அதில், வாய்ப்புக் கேட்டு சினிமா அலுவலகத்துக்குச் செல்லும் அந்தக் கதையின் நாயகன் அங்கிருப்பவர்கள் முன்பாக புலி வேஷமிட்டு ஆடிக் காட்டும் பகுதி இடம் பெறவேயில்லை. அதுதான் அந்தக் கதையின் முக்கியப் பகுதியாகும்.
ஆனால், அது இல்லாததால் அந்தக் கதை அதன் தன்மையையே இழந்து, வாசகருக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அந்தக் கதையை புத்தகத்தில் வாசித்தவர்களுக்கு அதன் உண்மையான வடிவம் தெரியும். ஆனால், இணையதளத்தின் மூலமாக, முதன்முதலாக அந்தக் கதையை வாசிப்பவர்களுக்கு அதில் உள்ள கதையின் உண்மை வடிவமே அதுதான் என்ற எண்ணத்தையே உருவாக்கும்.
இதேபோல, தமிழில் உள்ள தகவல் களஞ்சியம் தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பெரியாரைப் பற்றி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதுகுறித்து அந்த அமைப்பினர் கண்டனம் தெரிவித்த உடன், சரியான தகவலையும் தெரிவித்ததையடுத்து அது சரி செய்யப்பட்டது.
சமீபத்தில் கூட, அதே தகவல் தளத்தில், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைப் பற்றியும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதுகுறித்தும் சுட்டிக் காட்டிய பின்னர் அவை நீக்கப்பட்டன.
இதேபோல, மக்களவை பா.ஜ.க. பெண் உறுப்பினர் அஞ்சு பாலா இறந்துவிட்டதாகவும், மேலும் அவரைப் பற்றித் தவறான தகவல்களும் அந்தத் தகவல் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர் மக்களவையிலும் புகார் எழுப்பியுள்ளார் என்பது தற்போதைய செய்தி.
இதெல்லாம் நமக்குத் தெரியவரும் மிகச் சில உதாரணங்களே. இவற்றில் சில தகவல்கள் தமிழில் வெளியானதாலும், அந்தத் தகவல்களைப் பற்றி நாம் ஏற்கெனவே தெரிந்திருந்ததாலும், அவை தவறாக வெளியிடப்பட்டபோது சுட்டிக்காட்டப்பட்டன.
ஆனால், இதேபோல ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை முதன்முதலாகப் படிக்கும்போது அதன் உண்மைத் தன்மையை நாம் எப்படிக் கண்டுகொள்வது?
இணையத்தில் உள்ள தேடுபொறியின் உதவியுடன் நாம் தேடும் தகவல்கள் சில இணையதளங்கள், வலைப்பூக்கள், மின் இதழ்(நூல்)கள், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் போன்றவற்றில் இருந்தே நமது பார்வைக்குக் கிடைக்கின்றன.
இதில், முகநூல் மூலமாக வெளியிடப்படும் தகவல் பகிர்வு குறித்து இங்கு குறிப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில், முகநூலில் குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வெளியிடப்படுவது தவறான தகவல்களே.
இதற்கு சமீபத்திய உதாரணமாக சென்னை வெள்ள நிவாரணச் சம்பவத்தைக் கூறலாம். வெள்ளத்தின்போது முகநூல் நண்பர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய அளவிலான உதவிகளைச் செய்தனர். அவ்வாறு தொடர்பு கொள்ளுமாறு முகநூலில் வெளியிடப்பட்ட செல்லிடப்பேசி எண்கள் பெரும்பாலும் தவறானவையாகவே இருந்தன.
குறிப்பாக, வெளியூரைச் சேர்ந்தவர்களின் எண்களே அதில் அதிக அளவில் வெளியிடப்பட்டிருந்தன. இதை, முகநூலிலேயே பலர் சுட்டிக்காட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இணையத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் போலி இணையதளங்கள். இதற்கு உதாரணம்,
பிரபல தனியார் தொலைக்காட்சியின் இணையப் பக்கத்தை தேடினால் அதே முகவரியில், அதே பெயரில், வேறுவிதமான பக்க வடிவமைப்புடன் ஆனால், முற்றிலும் வேறு தகவல்களைக் கொண்ட இணையதளம் காட்சிக்குக் கிடைக்கும். இவையெல்லாம் நம் பார்வைக்கு கிடைக்கப் பெற்ற மிகச் சில உதாரணங்களே ஆகும்.
இந்நிலையில், தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் செய்முறைப் பயிற்சிக்காக மாணவ, மாணவிகளைப் பல்வேறு தகவல்களைச் சேகரித்து வரச் சொல்கின்றனர். இதற்காக அவர்கள் நாடுவதும் இணையதளங்களைத்தான்.
இதுமட்டுமன்றி, எம்.ஃபில்., பி.ஹெச்டி. உள்ளிட்ட ஆராய்ச்சிப் படிப்புகள் மேற்கொள்வோரும் முன்பெல்லாம் நூலகம் சென்று தகவல்கள் திரட்டி வந்தனர். ஆனால், அந்த நிலை மாறி, தற்போது அவர்களின் முதல் தகவல் சேகரிப்பு மையமாக இணையதளங்களே உள்ளன.
இதுபோல, பல்வேறு தகவல்கள் வேண்டுவோரும் அதற்காக இணையத்தையே நாடுகின்றனர்.
இணையம் ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்பதிலும், இன்றைய நிலையில் அனைத்துத் துறைகளிலும் அதன் பயன்பாடு அளப்பரியது என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை.
ஆனால், அதில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் சரியானவையா என்பதே தற்போது நம்முன் எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024