மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
(குறள்: 636)
|
குறள் இனிது: அறிதல்..புரிதல்...செய்தல்...!
2012-ல் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா கோபிநாத்தின் ‘உன்னால் முடியும்' நிகழ்ச்சி. தொழிலில் வெற்றி பெற்றவர்கள் அதன் ரகசியங்களை மேலாண்மை பயிலும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் களம் அது. ஆச்சி மசாலாவின் ஐசக்கின் நேர்காணலில் அவரது வெற்றிக்கான காரணங்களை அவரே கூறக் கேளுங்கள். BBA படித்துவிட்டு, MBA படிக்க முடியாததால் கோத்ரெஜ் நிறுவனத்தில் ஹேர்டை போன்ற பொருட்களை விற்கும் விற்பனை யாளராகச் சேர்ந்தவராம் அவர்!
10 பேர் இருக்கும் குழுவில் பலரும் விற்பனை இலக்குகளை எப்படி அடையலாம் , எதை விற்கலாம் என்றே யோசித்துக் கொண்டிருப்பார்களாம். ஆனால் இவரோ விற்பனையாகாத பொருட்களைப் பற்றியும் அவற்றை என்ன செய்தால் விற்கலாம் என்பதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டேயிருப்பாராம்! ஐயா, படிப்போ, பயிற்சியோ ஒன்றாக இருந்தாலும் அதன் பாதிப்பும் பலனும் ஆளுக்கு ஆள் வேறுபடுமில்லையா?
டெல்லியின் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் பயின்றவர்கள் அனைவருமா ஓம்புரி போல நடிக்கிறார்கள்? புணே பிலிம் இன்ஸ்டி டியூட்டில் பலர் பயின்றாலும் யாரோ ஒருவர் தான் ஸ்மிதா பாட்டீல் ஆகிறார்! கேட்பதும், பார்ப்பதும் ஒன்றே தான் என்றாலும் அதன் புரிதல் வெவ்வேறு கோணங்களில், அளவுகளில் அமைந்து விடுகிறதில்லையா? இதை ஆங்கிலத்தில் 3-i என்கிறார்கள்.அதாவது information, interpretation and implementation!
வகுப்பறையில், வாழ்க்கையில் நமக்குப் பல தகவல்கள் கிடைக்கின்றன. நாம் அவற்றை எப்படி கிரகித்துக் கொள்கிறோம், அவற்றை எப்படி செயல்படுத்துகிறோம் என்பது முக்கியமில்லையா ? இந்த இரண்டாவது மூன்றாவது செயல் i-க்கள் தானே ஏட்டுச் சுரைக்காயா இல்லையா எனத் தீர்மானிப்பவை? புத்திசாலித்தனம் என்பது எதிலும் இழையோடும் அடிப்படை முறைகளை (patterns) விரைவாகப் புரிந்து கொள்வது என்பார்கள்.அது தானேங்க சுயபுத்தி என்பது?
‘படித்தவன் பாடம் நடத்துகிறான், படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்' என்பது வெறும் திரைப்பட வசனமில்லை! அது வாழ்க்கையின் யதார்த்தம் நமக்குச் சொல்லும் பாடம்! இன்னுமொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.தொழிலில் வெற்றி பெற படிப்பு அவசியமா என்னும் விவாதம். இறுதியில் சிறப்பு விருந்தினராக வந்தவரிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. அவர் அதிகம்
படிக்காதவர்.ஆனால் அபார சாதனையாளர்.
‘உங்கள் வெற்றி எதைக் காட்டுகிறது? MBA படித்தவர்கள் செய்யாததை நீங்கள் சாதித்து விட்டீர்களே' என்பதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘முன்னேற்றமடைய கெட்டிக்காரத்தனம் தேவை. வாய்ப்புகளை இனம் காணவும், உபயோகப்படுத்திக் கொள்ளவும் தெரிந்த திறமை அது. வெறும் படிப்பினால் வருவதில்லை' என்று அவர் சொல்வதை மறுக்க முடியுமா?
படிப்பு முன்னேற்றத்திற்கு உதவியே தவிர உத்திரவாதம் இல்லையே! இதில் வேடிக்கை என்னவென்றால் அவரிடம் IIMல் படித்தவர்கள் சிலர் பணிபுரிவதாகவும், அவர்கள் பரவாயில்லை,கொடுத்த பணியைச் செய்து விடுவார்கள் என்றும் சொன்னார்! இயற்கையான அறிவுடன் கல்வியையும் பெற்றவரால் தீர்க்க முடியாத பிரச்சினை உண்டா என்கிறார் வள்ளுவர்!
- somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment