பார்லி... கருஞ்சீரகம்... கோதுமை... சர்க்கரைநோயைக் குணப்படுத்துமா? #HealthTips
இன்று வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வெளியாகும் ஆரோக்கியம் தொடர்பான செய்திகளைப் படித்துவிட்டு, அதை உண்மையென்று நம்பிப் பின்பற்றுபவர்கள் அநேகம் பேர். `இதை நம்பலாமா... வேண்டாமா... நம் உடல் தன்மைக்கு இது ஒப்புக்கொள்ளுமா’ என்பதையெல்லாம் இவர்கள் யோசிப்பது இல்லை; மருத்துவரிடம் இது குறித்து ஆலோசிப்பதும் இல்லை. இதனால் உடலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் சில நேரத்தில் மிக மோசமாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு. அப்படி சமீபத்தில் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தி இது... `சர்க்கரைநோயை இரண்டு மாதத்தில் குறைக்கலாம்; இன்சுலின் தேவையில்லை; பார்லி, கருஞ்சீரகம், கோதுமையை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை குடித்தால் போதும்.’
இது சாத்தியம்தானா? சித்த மருத்துவ ஆலோசகர் உலகநாதனிடம் கேட்டோம். பதிலளித்த அவர், நம் ஆரோக்கியம் காக்கும் முக்கியக் கஷாயம் ஒன்றையும் அறிமுகப்படுத்துகிறார் இங்கே...
கருஞ்சீரகம், பார்லி, கோதுமை இவை அனைத்தும் உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கக்கூடியவை. குறிப்பாக பார்லி, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். உடல் வீக்கத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதில் நார்ச்சத்தின் அளவு அதிகம். கருஞ்சீரகம், உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். இதயத்துக்கும் ரத்தநாளங்களுக்கும் தூய்மையான ரத்தத்தை எடுத்துச்செல்லும். கோதுமையிலும் நார்ச்சத்து அதிகம். அத்துடன் இது, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலைத் தரவல்லது.
இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரைநோய் வராது என்று உறுதியாகக் கூற முடியாது. சர்க்கரைநோய் வருவதற்கான காரணங்கள் பல... அவரவரின் வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்கங்கள், உடலுழைப்புக் குறைவது, இவற்றைத் தாண்டி தலைமுறை தலைமுறையாகக்கூட சர்க்கரைநோய் இருக்கலாம். ஆகவே, இதையெல்லாம் முதலில் நன்கு ஆராய்ந்து, உடலின் தன்மைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி சர்க்கரைநோய்க்கு சிகிச்சைகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொள்வதுதான் நல்லது.
ரத்தத்தைச் சுத்திகரிக்கக் கஷாயம்
உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரித்துவிட்டாலே நம்மால் உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், கணையம் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். நோய்கள் அண்டாமல் பாதுகாக்கவும் முடியும். அதற்கு உதவுகிறது இந்தக் கஷாயம்...
தேவையானவை:
வெந்தயம் (அ) ஆவாரம்பூ (அ) நாவல்பழக் கொட்டை (அ) சீரகம் (அ) கருஞ்சீரகம் (அ) மிளகு (அ) பார்லி (அ) மிளகு (அ) சீரகம் (அ) சோம்பு (அ) பட்டை (அ) லவங்கம் (அ) இஞ்சி (அ) பூண்டு.
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் ஏதாவது ஒன்றை மட்டும் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இந்த மூன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இதனுடன் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்கு கொதிக்கவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து வடிகட்டிக் குடிக்கவும்.
சில டிப்ஸ்...
* காலையில் முதலில் வெறும் வயிற்றில் இளம்சூடான நீரை ஒரு கிளாஸ் பருக வேண்டும். இது உடம்பின் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.
* 20 நிமிடங்கள் கழித்து இந்தக் கஷாயத்தைப் பருக வேண்டும். கஷாயம் குடித்த 45 நிமிடங்கள் கழித்துத்தான் காலை உணவைச் சாப்பிட வேண்டும். காலை உணவை எந்தக் காரணத்தைக்கொண்டும் தவிர்க்கக் கூடாது.
* இந்தக் கஷாயத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
* ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளைக்கொண்டு கஷாயத்தைச் செய்து பார்க்கவும்.
பலன்கள்...
* நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
* ஒற்றைத் தலைவலி குணமாகும்.
* கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.
* சர்க்கரைநோயின் தீவிரத்தைக் குறைக்கும்.
* தொப்பையைக் குறைக்கும்.
* செரிமான மண்டலப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.
* ரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும்.
* ரத்தத்திலுள்ள எச்.பி அளவை அதிகரிக்கும்.
குறிப்பு:
* மிளகு, இஞ்சி உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் என்பதால், உடல் சூடு உடையவர்கள் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கஷாயத்தைப் பருகலாம்.
* தொடர்ந்து 48 நாட்கள் கஷாயத்தை எடுத்துக்கொள்ள இயலாதவர்கள், ஒரு வாரரத்துக்கு எடுத்துக்கொண்டு மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு பின்னர் இதைத் தொடரலாம்.
* ஒரு மண்டலம் இந்தக் காஷாயத்தை எடுத்துக்கொண்டவர்கள், சிறிது காலம் கழித்து மறுபடியும் தொடரலாம்.
* கஷாயம் சாப்பிடுபவர்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது பருகவேண்டும்.
* ஆறு முதல் எட்டு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும்.
- கி.சிந்தூரி
No comments:
Post a Comment