பலே பலன்கள்... இல்லை பக்க விளைவுகள்.. வீட்டிலேயே வளர்க்கலாம் கொசு விரட்டும் செடிகள்..!
நம் அன்றாடங்களைத் தொல்லையில்லாமல் கழிக்க மிக அவசியமானது நல்ல தூக்கம். அந்த நல்ல தூக்கத்துக்கு இன்றைய காலகட்டத்தில் எது அவசியமோ இல்லையோ, நல்ல வேப்பரைசர் (Vaporizer - கொசுவிரட்டி) அவசியமாகிவிட்டது. தினம் தினம் மாறுகிற சூழலுக்கு நாம் பழகிவிட்டதைப்போல், நம்மைக் கடித்து உயிர்வாழ்கிற கொசுவும் பழகிவிடுகிறது. விளைவு, விதவிதமாக, கலர்க் கலராக சாயம் பூசப்பட்ட ரசாயனங்களின் அணிவகுப்பு! நம்மை திருப்திப்படுத்துவதாக உத்தரவாதம் கொடுக்கும் பலவிதமான கொசுவிரட்டிகள்... ஆனால், எதிலும் பலனில்லை என சலித்துக்கொள்பவர்கள்தான் இங்கே ஏராளம்! இவற்றை விரட்டும் குட்டிக் குட்டிச் செடி வகைகள் உண்டு. அவற்றை எளிதாக நம் வீட்டு குறைந்த இடத்தில், பால்கனியிலேயே வளர்க்கலாம். பக்க விளைவுகள் இல்லை... பலன்கள் ஏராளம்... வீட்டிலேயே வளர்க்கக்கூடிய கொசுவிரட்டும் செடிகள் இங்கே...
காட்டுத்துளசி
நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும் காட்டுத்துளசி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கொசுவையும், சிறு பூச்சிகளையும் விரட்டும் தன்மைகொண்டது. இதன் சாறு, பூச்சி விரட்டிக்குப் பயன்படுத்தப்படும் டீட்டைவிடப் (DEET-Diethyltoluamide) பலமடங்கு சக்தி வாய்ந்தது. காட்டுத்துளசியின் வாசம் இருக்கும் இடத்தில் கொசு அண்டவே அண்டாது.
ஓமம் (Basil)
ஓமத்தின் விதை சமையலுக்கு நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது. ஓம இலைகளில் இருக்கும் வாசனை, கொசுக்களை விரட்டி நமக்கு நல்ல தூக்கத்தைத் தரும். இதை வளர்க்க சின்ன மண்பாண்டம் போதும். கொசு அந்தக் கோட்டைத் தாண்டி உள்ளே வரவே வராது.
புதினா
பெயரைக் கேட்டதுமே புத்துணர்ச்சிதான், எல்லோருக்கும் பிடித்த பிரியாணியின் பெயரை ஞாபகப்படுத்துவது தவிர்க்க முடியாதது. அதேபோல்தான் இதன் வாசனையால் அவை நம் அருகே வராமல் இருப்பதும் தவிர்க்க முடியாதது. சின்ன தொட்டியில் நட்டு, ஜன்னல் ஓரத்தில் வைத்தால் போதும். சீக்கிரம் வளர்ந்துவிடும். கொசுக்கள் உள்ளே வராது.
மாரிகோல்டு
கண்களைக் கவரும் மலர்களைக் கொண்ட இந்தச் செடி அழகுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. இந்தச் செடியை வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி நட்டுவைத்தால் கொசுவிடம் இருந்து நம்மைப் பாதுகாகாக்கலாம்; அதோடு, இந்த மாரிகோல்டு செடியால் மற்ற செடிகளுக்கும் பாதுகாப்பு. இந்தச் செடி இருக்கிற இடத்தில் செடிகளை அழிக்கும் பூச்சிகளும் அண்டாது. `என் தங்கம்’ என்று இந்தச் செடியை தாராளமாக சொல்லிக் கொள்ளலாம்.
லாவெண்டர் (Lavender)
பெயரைக் கேட்டதுமே மனதில் ஒட்டிக்கொள்வது இதன் நிறம் மட்டுமல்ல... லாவெண்டரின் மணமும்தான். லாவெண்டர் மணம் கொசுக்களை அண்ட விடாது, அதனால்தான் கொசு கடிக்காமல் இருக்க, நாம் பூசிக்கொள்ளும் நிறைய தோல் பூச்சுக்கள், லாவெண்டர் மணத்தில் இருக்கின்றன. இந்தியாவில் இது வளரும். செடிகளுக்கான பொட்டிக்கில், லாவெண்டர் செடி கிடைக்கும்.
சிட்ரோசம்
ஐந்து அல்லது ஆறு அடி வரை வளரக்கூடியது சிட்ரோசம் செடி. இதன் நறுமணம் கொசுவை விரட்டப் பயன்படும், காரணம் இதிலிருந்து எடுக்கப்படும் `சிட்ரோனெல்லா' (Citronella) எனும் ரசாயனம் சிறந்த கொசுவிரட்டி. இந்தத் தாவரத்திலிருந்து கிடைக்கும் மெழுகை ஏற்றினாலும், அதன் வாசத்துக்குக் கொசுக்கள் அண்டாது. இந்த சிட்ரோசம் வணீகரீதியாகவும் பயன்படுகிறது.
கற்பூரவல்லி
சாதாரணமாக எல்லாச் சூழலிலும் வளரக்கூடியது. நிறைய இடமோ, பொருள் செலவோ பிடிக்காத இந்த செடியின் வாசமும், இலைச் சாறும் கொசுவுக்குப் பிடிக்காது. 10 அடி தூரம் தாண்டியும் இந்தச் செடியின் மணம் மணக்கக்கூடியது.
ரோஸ்மேரி
அழகிய செந்நீல நிறப் பூக்கள்கொண்ட இந்தச் செடியின் மணம், தெய்விக உணர்வைத் தருகிற ஒன்று. அதோடு, நம்மிடம் இருந்து கொசுவைத் தள்ளியே வைத்திருக்கும்; குழந்தைகளுக்கு கொசுக்கள் தாக்காமல் நல்ல பாதுகாப்பு அரணாகவும் செயல்படும்.
செவ்வந்தி
சிறந்த பூச்சிவிரட்டியாக இருக்கும். பயிர்கள் போன்றவை தாக்காமல் இருக்க, செவ்வந்தி ஓரங்களில் நட்டு வைத்தால் பூச்சிகள் இந்த செடியை தாக்கும். பயிர்கள் பாதுகாக்கப்படும்.செவ்வந்தி, மற்றச் செடிகளுக்குப் பாதுகாவலனாக இருக்கும்; கொசுக்களையும் விரட்டும்.
வீனஸ் ஃப்லைட்ராப் (Venus Flytrap)
இது, பூச்சிகளை உண்ணும் தாவரம்; கொசுக்களையும் உண்டு செரிக்கும். ஆனால், குழந்தைகள் இருக்கிற வீட்டில் இந்தச் செடியை வளர்ப்பதைத் தவிர்க்கலாம்.
வீட்டில் இருக்கிற கொஞ்சமே கொஞ்ச இடத்திலும் இந்தச் செடிகளை வளர்த்து கொசுவை விரட்ட முடியும் என்கிறபோது அதையும் செய்து பார்ப்பதில் தவறில்லை. இயற்கையை நோக்கி நம் பார்வை திரும்பி இருக்கும் இந்த நேரத்தில், செடி வளர்ப்பும் பயனுள்ளதே. டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று பயமுறுத்தும் நோய்கள் பல இவற்றில் இருந்து பரவுகிறவைதான். நினைவில் இருக்கட்டும்!
- கோ.ப.இலக்கியா (மாணவப் பத்திரிகையாளர்)
No comments:
Post a Comment