Thursday, March 9, 2017

நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டத்தை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று மத்திய மந்திரிகளிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
மார்ச் 09, 04:00 AM

புதுடெல்லி,

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டத்தை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று மத்திய மந்திரிகளிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர்.மத்திய மந்திரிகளுடன் சந்திப்பு

‘நீட்’ தேர்வு மற்றும் ‘கேட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய மந்திரிகளிடம் வலியுறுத்துவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் முதன்மை செயலாளர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன், சுனில் பாலிவால் ஆகியோர் டெல்லி சென்றனர். அவர்கள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை நேற்று சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–ஆதரவான நிலைப்பாடு

‘நீட்’ (தேசிய தகுதி நுழைவுத்தேர்வு) தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி அ.தி.மு.க. அரசு சார்பில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. அதில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரிகளின் ஒப்புதலும் கேட்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் நாங்கள் 2 மந்திரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க வலியுறுத்தினோம். அவர்கள் இதை பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்கள்.

மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி எடுத்து சொன்னோம். தமிழகத்தில் 3½ லட்சம் மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் உயிரியல் பாடப்பிரிவில் தேர்வு எழுதுகிறார்கள். 3 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே மத்திய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுகிறார்கள், எனவே, கிராமப்புற மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு சிரமமாக இருக்கும் என்று கூறினோம்.எய்ம்ஸ் மருத்துவமனை

மேலும் அரசு கல்லூரியில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குத்தான் விலக்கு கேட்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினோம். காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

இதை பரிசீலிப்பதாக கூறிய அவர், தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வழங்கப்படும் என்ற சாதகமான பதிலையும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், ‘என்ஜினீயரிங் படிக்க விரும்பும் மாணவர்களை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மேற்படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ‘டான்செட்’ தேர்வு நடத்தப்படுவதால் மீண்டும் ‘கேட்’ தேர்வு தேவையில்லை என தெரிவித்தோம்’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024