Monday, January 15, 2018

டிஜிட்டல் போதை 14: தனியே… தன்னந்தனியே..!

Published : 23 Dec 2017 11:54 IST


வினோத் ஆறுமுகம்




சமீபத்தில், அமெரிக்காவில் 13 வயது சிறுவன் தன்னிடமிருந்து ஸ்மார்ட்போனைப் பிடுங்கி வைத்துக்கொண்ட தன் பாட்டியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டான் என்ற செய்தி வெளியானது. எந்நேரமும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் பள்ளிக்குக்கூடச் செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் பாட்டி அவனைக் கண்டித்து ஸ்மார்ட்போனை வாங்கி ஒளித்து வைத்துவிட்டார். விளைவு… சிறுவன் இப்போது சிறார் சீர்திருத்தப் பள்ளியில்!

இந்த ஆண்டு ஏப்ரலில் இதேபோன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ராஜ் என்பவர், தன் குடும்பத்தினர் அனைவருக்கும் குழம்பில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டார். அவர் மருத்துவம் படிக்க வேண்டும் எனக் குடும்பம் கட்டளையிட்டது. ஆனால் இவருக்கோ வரலாறு படிக்க வேண்டும் என்று ஆசை. அதிலிருந்து தப்பிக்க நினைத்த அவர், குடும்பத்தையே கொன்றுவிட்டார். பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அவர் அதிகமாக வீடியோ கேம் விளையாடும் பழக்கம் உள்ளவர் என்பது தெரிய வந்தது.

மூளையைப் பாதிக்கும் மூர்க்கம்

வீடியோ கேம்களில் ‘மேன்ஹன்ட்’ (மனித வேட்டை) வகையறா வீடியோ கேம்கள் மிகவும் கொடூரமானவை. இவை, பல நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டன. அதுபோன்ற வீடியோ கேம்களில் உள்ள மூர்க்கத்தனத்தைக் கட்டுப்படுத்தாதவரை, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் நிதர்சனம்.

மேற்கண்ட சம்பவங்களைப் போன்று, வீடியோ கேம்களால் உந்தப்பட்டு நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து உளவியளாலர்கள் கூறும்போது, ‘மூர்க்கமான வீடியோ கேம்கள் விளையாடினால் மெல்ல அது நம் மூளையையும் மனதையும் பாதிக்கும். வெல்வதற்காகக் கொலைகூட செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும். இந்த மாதிரியான நேரத்தில் அவர்களுக்குச் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. இதனால், அவர்கள் மனிதத் தன்மையை இழக்க நேரிடுகிறது’ என்கிறார்கள்.

காப்பாற்றும் சமூகம்

எந்நேரமும் வீடியோ கேம் விளையாடுபவர்கள், மிக எளிதாகச் சமூகத்திடமிருந்து தனிமைப்பட்டு விடுவார்கள். இப்படி தனிமைப்படுதல் அவர்களின் உடலுக்கும் மனதுக்கும் கேடானது. மனிதர்கள், சமூக விலங்குகள்தான். சமூகம்தான் நம் பாதுகாப்பு, அதுதான் நம்மை இதுவரை காப்பற்றி வந்திருக்கிறது. இனியும் காப்பாற்றும்.

ஆனால், வீடியோ கேம்கள் வந்தபின் பிள்ளைகள் சமூகத்துடன் உறவாடுவதும் விளையாடுவதும் குறைந்துவிட்டது. இவ்வாறு நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பதன் பாதிப்புகளை அவர்கள் எளிதில் உணர்வதில்லை. தொடர்ந்து அறைக்குள் அடைந்து கிடப்பதே நம்மை மனச்சோர்வுக்குள்ளாக்கும். இயற்கையைச் சுற்றி இருப்பதுதான் நமக்கு நன்மை. அது இயல்பாகவே நம்மை மனச்சோர்வில்லாமல் வைக்கும்.

அதிகரிக்கும் அட்ரினலைன்

பொதுவாக, நண்பர்களுடன் இணைந்து விளையாடும் விளையாட்டுக்களைப் போன்று வீடியோ கேம்களில் ‘குழு விளையாட்டுக்கள்’ வருவதில்லை. காரணம், குழு விளையாட்டுக்களை விளையாடும்போது அதற்கு நிறையத் திட்டமிட வேண்டும். உடல் உழைப்பு வேண்டும். ஓய்வு கிடைக்கும். அது எல்லா நேரமும் நம் அட்ரினலினை அதிகமாக்குவதில்லை. மாறாக வீடியோ கேம்கள் எந்நேரமும் நம் அட்ரினலினை அதிக அளவில் சுரக்கச் செய்கின்றன. நம்மைத் தனிமைப் படுத்துகிறது.

சிறுவர்கள் பலரை அவர்கள் குடும்பத்தினர் பூங்காவுக்கும் பீச்சுக்கும் அழைத்துத்தான் வருகிறார்கள். ஆனால் அங்கும் அவர்கள் தங்கள் தலையைக் குனிந்தபடியே வேறு ஒரு உலகில் தம்மை ஆழ்த்திக்கொள்கிறார்கள். இதனால், கடலும் காடும் பச்சைப் பூங்காவும் அவர்களுக்கு மிகவும் போர் அடித்துவிடுகிறது.

கட்டுரையாளர்,டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு: write2vinod11@gmail.com

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...