Monday, January 8, 2018

நலம்தரும் நான்கெழுத்து 16: ஆரோக்கியத்தைச் சம்பாதிக்கலாமா?

Published : 06 Jan 2018 11:06 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்


‘உலகிலேயே மிக முக்கியமான செல்வம் எது? ஆரோக்கியம்தான் உலகிலேயே மிக முக்கியமான செல்வம்’

– மகாபாரதத்தில் தர்மர்

திருக்குறள் முனுசாமியின் நகைச்சுவைச் சிந்தனை ஒன்று உண்டு. கல்வி என்பது எப்படி நாமே தேடிக்கொள்ள வேண்டிய ஒன்று என்பதை இப்படிச் சொல்வார்: “அவனுக்கென்னப்பா! அவங்கப்பா கோடீஸ்வரர். சாகும்போது ரெண்டு பங்களாவை அவனுக்குத் தந்திட்டுப் போயிட்டார் எனச் சொல்வோம். ஆனால், அவனுக்கென்னப்பா அவங்கப்பா எம்.ஏ., எம்.பில். சாகும்போது ரெண்டு பட்டத்தையும் மகன் பேரில் எழுதி வச்சிட்டுப் போய்ட்டார் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், செல்வத்தை யாரும் தானமாகப் பெறலாம், திருடலாம். ஆனால், கல்வி அப்படியல்ல”.

ஆனால், இக்காலத்தில் பட்டங்களைக்கூட விலை கொடுத்து வாங்க முடிகிறது. ஆனால், கட்டாயம் நாமே சம்பாதித்துத்தான் ஆக வேண்டிய சமாச்சாரம், ஆரோக்கியம்.

உடலை நினைவுபடுத்தும் நோய்

நம்மில் பெரும்பாலோர் பணம், பொருட்கள் போன்ற செல்வங்களைத் தேடி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் உடலை அலட்சியம் செய்கிறோம். 48 மாதத் தவணையில் வாங்கிய ஒரு மொபெட்டை வாரம் ஒரு முறை கழுவுகிறோம். ஒரு சைனா மாடல் செல்போனைக்கூட உறையெல்லாம் போட்டு பத்திரமாகக் கவனிக்கிறோம். ஆனால், அதி அற்புத இயந்திரமான இந்த உடலைப் பற்றிய நினைவு, நோய் வந்த பின்னரே நமக்கு நினைவுக்கு வருகிறது.

இத்தொடரின் முதல் வாரத்திலேயே சொன்னதுபோல் உள்ளத்தின் ஆரோக்கியத்துக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதைப் பார்த்தோம். அப்படிப்பட்ட உடல்நலனை கவனிக்காமல் விடுவதே பல்வேறு சமநிலைச் சீர்குலைவுகளுக்குக் காரணமாக அமைகிறது.

சீக்கிரம் தொடங்குவதே சீரானது

உடலைப் பற்றி அக்கறை காட்டுவது என்பது பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் பென்ஷன், ஏழாவது சம்பளக் கமிஷன் போன்ற பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே வாக்கிங் போகும்போது கவலைப்பட வேண்டிய சமாச்சாரம் அல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாகத் தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லிக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருப்பது என்பது வெறும் நோய்கள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. நமது வாழ்க்கையைத் தரமாக வாழ்வதற்கான முக்கியக் கருவி அது.

வாழ்வது சாகாமல் இருப்பதா?

80 வயது பாட்டி ஒருவர், இருபது வருடங்களாகப் படுத்த படுக்கையாக இருந்தாராம். அவரது மகன்தான் அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டாராம். ஒருநாள் அந்தப் பாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததாம். என்னவென்று மகன் கேட்டபோது “உன் காலத்துக்குப் பின் உன்னுடைய மகனும் என்னை இப்படிப் பார்த்துக்கொள்வானா என யோசித்தேன்” என்று அந்தப் பாட்டி சொன்னாராம்.

வாழ்வது என்பது சாகாமல் இருப்பது அல்ல. தொற்றுநோய்கள் குறைந்துள்ள இக்கால கட்டத்தில் நமக்கு ஏற்படக்கூடிய முக்கால்வாசி நோய்கள் வருமுன் காக்கக் கூடியவையே. மகாத்மா காந்திகூட, ஆயுள் முழுக்க அகிம்சையைப் போன்றே ஆரோக்கியத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

உடலைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமானால் அதுவும் தொந்தரவுதான். எப்படி?

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024