Monday, January 1, 2018


ஆங்கிலம் அறிவோமே 193: அதையும் தாண்டி அதிகமானது!

Published : 26 Dec 2017 11:59 IST
Updated : 26 Dec 2017 11:59 IST

ஜி.எஸ்.எஸ்.

 


கேட்டாரே ஒரு கேள்வி

“என் காதலியை வர்ணித்துச் சில பல பாடல்களை எழுதப்போகிறேன். ஒப்பிட முடியாத என்று பொருளைத் தரும் Non-comparable என்ற வார்த்தைக்குச் சமமான வேறு ஆங்கில வார்த்தைகளைக் கொட்ட முடியுமா?

நிச்சயமாக. ஆனால், ஓர் எச்சரிக்கை. Non-comparable என்பது எப்போதுமே உயர்வு நவிற்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதற்குச் சம வார்த்தைகளாக inadequate, incompetent, insufficient, mediocre போன்றவற்றைகூடக் குறிப்பிட முடியும்.

எனவே, ஒப்பிட முடியாத என்பதை incomparable (non-comparable அல்ல) என்று வைத்துக்கொள்வோம். இதன் சமமான வார்த்தைகளாக matchless, peerless, unmatched, unequalled, unrivalled, unique, rare, outstanding, unsurpassable ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் பகிர்ந்துகொள்கிறேன். Unique, infinite, entire, impossible போன்ற வார்த்தைகள் ஒப்பிடக் கூடாதவை. அதாவது it is an impossible task என்று கூறலாம். It is the most impossible task என்று கூடாது.

**********************

Mum’s the word என்பதன் பொருள் என்ன?

அம்மாவைக் குறிக்க Mum என்ற வார்த்தை பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுவதுண்டு (மம்மி என்பதன் சுருக்கம்தான் Mum). ஆனால், Mum is the word என்பதன் முதல் சொல் அம்மாவைக் குறிப்பிடுவதில்லை.

யாராவது ஒரு கேள்வியைக் கேட்க நீங்கள் அதற்குப் பதில் கூறாமல் ‘mmmmmm’ என்ற ஒலியை எழுப்பினால் நீங்கள் பதில்கூற விரும்பவில்லை என்று பொருள். இதைத்தான் mum’s the word என்கிறார்கள்.

எகிப்திய மம்மி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை ஏன் மம்மி என்கிறோம்?

பிடுமேன் (Bituman) என்பது கருநிறம் கொண்ட பிசுக்குத் தன்மையுள்ள பொருள். இந்தப் பிசினைப் பாரசீக மொழியில் ‘மம்’ என்பார்கள். சடலங்களை இப்படிப் பாடம் செய்ய Mum பயன்படுத்தப்பட்டதால் அதை Mummy என்கிறோம்.

**********************

‘He is a vet’ என்கிறார்களே. அப்படியென்றால் என்ன?

Veterinary Surgeon என்பதை Vet என்று சுருக்கிக் கூறுகிறார்கள். அதாவது, கால்நடை மருத்துவர்.

A sick cow is being treated by the Vet.

ராணுவத்தில் பணிபுரிந்தவரை அமெரிக்காவில் veteran என்றும், பேச்சுவழக்கில் vet என்றும் அழைக்கிறார்கள்.

கவனமாக ஒன்றை உறுதி செய்துகொள்வது என்ற அர்த்தத்தில் vet என்பது verb ஆகப் பயன்படுகிறது. During the emergency, the Government vetted all news reports.

சிலரை ‘Hyper’ என்கிறார்களே, ஏன்?

அது Hyperactive என்பதன் சுருக்கம். கிரேக்க மொழியில் hyper என்றால் அதிகப்படியாக, அதையும் தாண்டி என்று பொருள்.

Hyper ஆக இருப்பவர் மிகவும் ஆற்றல்வாய்ந்தவராக இருப்பார். பள்ளிக்கூடத்தில் உட்கார மாட்டார். உட்காராமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் தொடர்ந்து உற்சாகமாகப் பல விஷயங்களைச் (விஷமங்களை) செய்துகொண்டிருக்கும் குழந்தைகள் இந்த hyper பிரிவில் அடங்க வாய்ப்பு உண்டு.

Hyperbole என்று ஒரு வார்த்தை உண்டு. உவமை, உவமானம் மாதிரி இதுவும் ஓர் அணிவகை. “எனக்கு இருக்கிற பசிக்கு நான் உன்னையே விழுங்கிவிடுவேன்” என்றோ “பசியில் என் பெருங்குடல் சிறுகுடலைத் தின்கிறது” என்றோ சொன்னால் அது hyperbole. அதிகப்படியாக ஒன்றை விவரிப்பது.

Hyperbole ஆகப் பேசலாம். ஆனால், hyperventilate செய்யக் கூடாது. Hyper ventilate என்றால் மிக அதிகமாகச் சுவாசத்தை வெளியேற்றுவது. இதன் மூலம் உங்களுக்கு ஒருவித மயக்க உணர்வு உண்டாகலாம்.

Hyperbaric என்றால் ஒரு வாயுவை அதன் வழக்கமான அழுத்தத்தைவிட அதிக அழுத்தத்தில் செயல்படவைப்பது.

When, while ஆகிய இரு வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது தனக்கு மிகுந்த குழப்பம் ஏற்படுவதாக வருத்தப்பட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

When என்றால் எப்போது என்ற ஒரு பொருள் உண்டு. அதை விட்டுவிடுவோம். When, while ஆகிய ‘குழப்பப் பயன்பாடுக’ளைப் பார்ப்போம்.

While என்பது ஒரு தொடர்ந்த நிலையைக் குறிக்கிறது. I listened to the radio while I was making dinner. We conversed while walking.

When என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தையோ அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தையோ குறிக்கிறது.

Cover your mouth when you sneeze. Do not smoke when you are pregnant.

வேறொரு சிறிய வித்தியாசத்தையும் கவனிக்கலாம். She opened the door when I knocked என்று கூறும்போது அது கதவைத் தட்டியவுடன் (அதாவது, கதவைத் தட்டிய பிறகு) அவள் கதவைத் திறந்தாள் என்ற பொருளைக்கொடுக்கிறது.

Shen opened the door while I knocked எனும்போது கதவைத் தட்டுவதும், கதவைத் திறப்பதும் ஒரே நேரத்தில் நடப்பதைப் போல இருக்கிறது. எனவே, இங்கு when என்ற பயன்பாடுதான் பொருத்தமாக உள்ளது.

ஒரே நேரத்தில் தொடரும் இரு விஷயங்களைக் குறிக்கிறது while. ஒரே நேரத்தில் நடக்கும் அல்லது அடுத்தடுத்து நடக்கும் இரு வேலைகளைக் குறிக்க when.

தொடக்கம் இப்படித்தான்

‘Brownie points’ என்பதன் பொருளைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

நீங்கள் செய்ததற்காக உங்களுக்கு அளிக்கப்படும் பாராட்டுதான் ‘Getting brownie points’. இது உண்மையான விருதோ மதிப்பெண்ணோ அல்ல. கொஞ்சம் நகைச்சுவையாகவும் பயன்படுத்தப்படுகிறது. Let me score some brownie points with my mother-in-law by offering to cook dinner.

Browny என்பது ஒரு கற்பனை உயிரினம். நாடோ​டிக் கதைகளில் நிலவுவது. முக்கியமாகப் பெண் Browny-க்கள் கருணை உள்ளம் கொண்டவை. குடும்பமே தூங்கும்போது சத்தம் போடாமல் வீட்டு வேலைகளையெல்லாம் செய்துவிடும்.

பெண் சாரணர் இயக்கத்தில் Girl guide Brownies என்பவர்கள் உண்டு. அவர்கள் செய்த நல்ல செயல்களுக்காக அவர்களுக்கான பேட்ஜ்களை அளிப்பார்கள். இவற்றை Brownie points என்பதுண்டு.


சிப்ஸ்

# He has fallen over என்று சிலரும் he fell over என்று சிலரும் சொல்கிறார்களே!

முன்னவர் பிரிட்டிஷ்காரராகவும், பின்னவர் அ​மெரிக்கராகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

# “She is surrounded by toadies” என்ற வாக்கியத்தின் பொருள் என்ன?

சுயலாபத்துக்காக ஒருவரைப் புகழ்ந்து பேசுபவரை toady என்பார்கள்.

# Boutique என்றால்?

சிறிய கடை. நாகரிகமான உடைகள், நகைகள் போன்றவற்றை விற்கும் கடையாக இருக்க வாய்ப்பு அதிகம்.


தொடர்புக்கு: aruncharanya@gmail.com

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...