Wednesday, January 3, 2018

 சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
 
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
 
சேலம், 

மத்திய அரசு புதிதாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவர உள்ளதாக அறிவித்தது. இதற்கு நாடுமுழுவதும் உள்ள டாக்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நேற்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தமிழகத்திலும் நடந்தது. சேலம் மாவட்டத்தில் 142 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இந்த ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று காலை முதல் மாலை வரை பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவு பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. ஆஸ்பத்திரிகளில் வழக்கமான பணிகள் நடக்கவில்லை என்பதால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.

அதே வேளையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு வழக்கம்போல இயங்கின. ஆனாலும், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டாக்டர் பிரகாசம் கூறியதாவது:–

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவ கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக 139 பேர் இருப்பார்கள். ஆனால், தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 பேர் மட்டுமே இருப்பார்கள். இதில் தலைவர் உள்பட 14 பேர் அரசால் நியமிக்கப்படுவார்கள். 5 பேர் டாக்டர்களாக இருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட ஆணையக்குழுவில் எந்த கோரிக்கையும் வைக்க முடியாது.
மேலும் 25 பேரில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடையாது. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி மற்றும் பயிற்சி பெற்ற டாக்டர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்ற பின்னரே தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியும் என்பது இயலாத காரியம். இதனால், மருத்துவ மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் டாக்டர்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் பயிற்சி டாக்டர்கள் காலை 10 மணி முதல் 11 மணிவரை, பணியை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பழைய மருத்துவ கவுன்சிலே நீடிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய மருத்துவ ஆணையத்தால் டாக்டர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே, புதிய ஆணையத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை திரும்பபெற வேண்டும் என டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

அதன் பின்னர் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேட்டூர், ஆத்தூர், ஓமலூர், வாழப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் 500–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024