Monday, January 1, 2018


ஆன்மிக அரசியல் என்றால் என்ன? நடிகர் ரஜினிகாந்த் கூறிய விளக்கம்





ஆன்மிக அரசியல் என்றால் என்ன? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனவரி 01, 2018, 05:15 AM சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து போயஸ் கார்டன் இல்லம் நோக்கி ரஜினிகாந்த் வந்தார்.

போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லம் அருகே ரசிகர்கள் நற்பணி மன்ற கொடியுடன் திரண்டனர். அவர்கள் ரஜினிகாந்த் வந்தபோது உற்சாகமாக பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

அப்போது, ‘ரஜினிகாந்த் ஜனநாயகத்தின் பாதுகாவலர்’, ‘நமது சின்னம் பாபா சின்னம்’, ‘வருங்கால தமிழகம் ரஜினிகாந்த்’, ‘நாளைய முதல்-அமைச்சர் ரஜினிகாந்த்’ என்பன உள்ளிட்ட பல்வேறு வாழ்த்து கோஷங்களை ரசிகர்கள் எழுப்பினர்.

வீட்டுக்கு செல்லும் வழியில் போயஸ்கார்டன் சாலை சந்திப்பில் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மக்களை எப்போது நேரடியாக சந்திப்பீர்கள்?

பதில்:- மக்களை எப்போது நேரடியாக சந்திப்பேன் என்பது தெரியாது. ஏற்கனவே நான் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லிவிட்டேன்.

கேள்வி:- ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாக கூறியிருக்கிறீர்கள். ஆன்மிக அரசியல் எப்படி இருக்கும்?

பதில்:- ஆன்மிக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியலாக இருக்கும்.

கேள்வி:- உங்களுடைய கட்சியின் பெயரை தெரிந்துகொள்ள ரசிகர்கள் சட்டசபை தேர்தல் வரை காத்திருக்கவேண்டுமா?

பதில்:- எனது கட்சி பெயரை எப்போது அறிவிப்பேன் என தெரியாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

கேள்வி:- உங்களுடைய நண்பர் கமல்ஹாசன் நீங்கள் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறாரே..

பதில்:- வாழ்த்து தெரிவித்ததற்காக கமல்ஹாசனுக்கு ரொம்ப நன்றி. மேலும் எனக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024