Thursday, January 4, 2018

எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்

Published : 04 Jan 2018 13:16 IST

இணையதள செய்திப்பிரிவு சென்னை
 



ஆர்.எம்.வீரப்பனுடன் ரஜினிகாந்த்

எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) நேரில் சந்தித்துப் பேசினார்.

சென்னை வள்ளுவர் கோட்ட பகுதியில் அமைந்துள்ள ஆர்.எம்.வீரப்பனின் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தார். ஊடகங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.


முன்னதாக, நேற்று (புதன்கிழமை) திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் அரசியல் பிரவேசத்திற்காக ஆசி பெற்றதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். சுமார் 20 நிமிடங்கள் அவரது வீட்டில் இருந்துள்ளார்.

முன்னதாக, ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இருந்த ரஜினிகாந்த் திடீரென ஆர்.எம்.வீரப்பன் வீட்டில்தான் இருக்கிறாரா? என தொலைபேசியில் கேட்டு உறுதி செய்துள்ளார். பின்னர், அடுத்த சில நிமிடங்களில் அவரது வீட்டுக்கு நேராக சென்றுள்ளார். ரஜினியின் எதிர்பாராத இந்த வருகை அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. வீட்டிலிருந்த அனைவரும் நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். பணியாட்களும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

ரஜினியின் அரசியல் பேச்சும் ஆர்.எம்.வீரப்பனுடனான தொடர்பும்..

'பாட்ஷா' ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப் படம். அந்தப் படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த், "தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிக்கிடக்கிறது. அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்" என்று பேசினார்.

அரசியல் ரீதியாக ரஜினி பேசிய அந்த முதல் பேச்சு அரங்கேறியபோது ஆர்.எம்.வீரப்பன் அதே மேடையில் இருந்தார். அவர் அப்படத்தின் தயாரிப்பாளர்.

யாரும் சற்றும் எதிர்பாராத பேச்சு அது. ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில் ரஜினிகாந்த் அவ்வாறு பேசியது அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்தின் இந்த பேச்சால் ஆர்.எம்.வீரப்பன் பதவியும் இழந்தார்.


அதன் பின்னர்தான், ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தபோது ரஜினி நேசக்கரம் நீட்டினார். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது எனப் பேசியதும் அதே காலகட்டத்தில்தான்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அதிமுகவில் ஜெயலலிதாவும் ஆர்.எம்.வீரப்பனும் எதிர் எதிர் அணியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக, ஆர்.எம்.வீரப்பனுக்கும் ரஜினிகாந்துக்கு ஒரு சுவாரஸ்யமான மேடை பந்தம் இருக்கிறது.

2-வது சந்திப்பு:

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பின் நிறைவு நாளான டிசம்பர் 31 2017-ல் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

அத்துடன் நின்றுவிடாமல் இணையதளத்தையும் தொடங்கினார். இந்த இணையதளத்தில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்து வருகின்றனர். மேலும், கட்சிக் கொடியை உருவாக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேலி கிண்டல்கள் ஓய்ந்து 'ஆன்மீக அரசியல்' அறிவிப்பு தொடங்கி அடுத்தடுத்த சூடுபறக்கும் அவரது நடவடிக்கைகளும் தற்போது விவாதப் பொருளாகியுள்ள நிலையில் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

அந்த சந்திப்பைத் தொடர்ந்து இன்று எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்துள்ளார்.

இனி அடுத்தடுத்து விறுவிறுப்பான நடவடிக்கைகளின் அவர் ஈடுபடுவார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024