ஐஸ்லாந்தில் பெண்களைவிட ஆண்களுக்கு அதிகச் சம்பளம் என்றால் குற்றம்..! இந்தியாவின் கவனத்துக்கு...
ஷோபனா எம்.ஆர்
உலக அளவில் ஆண் - பெண் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, விவாதங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. பணியிடங்களில் ஒரே வேலை செய்யும் இருபாலருக்கும் ஒரேவிதமான ஊதியம் அளிக்கப்பட வேண்டும், தேர்தலில் சரிசமமான இடஒதுக்கீடு வேண்டும் எனப் பெண்கள் தங்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார்கள். எனினும், அது நடைமுறையில் இல்லை. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடும், ஒரே வேலையைச் செய்யும் பெண்களுக்கு, ஆண்களைவிடக் குறைவாகவே ஊதியம் வழங்குகிறது என்று உலகப் பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது.
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஐஸ்லாந்து நாடு, ஒரே வேலையைச் செய்யும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான சம்பளம் அளிக்கப்பட வேண்டும் என்பதை சட்டமாக இயற்றியுள்ளது. இனி, ஐஸ்லாந்தில் இருக்கும் நிறுவனங்கள், பெண்களைவிட ஆண்களுக்கு அதிகம் ஊதியம் வழங்குவது சட்டப்படி குற்றம். இந்தச் சட்டத்தைப் புத்தாண்டு தினத்தில் அமல்ப்படுத்தியது ஐஸ்லாந்து. இந்தச் சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு, ஒருநாளுக்கு 500 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். ஐஸ்லாந்தில் 2016 அக்டோபர் மாதம் பல்லாயிரக்கணக்கான பெண்கள், தங்களுக்குச் சரிசமமான ஊதியம் வழங்கக் கோரி, தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதுவும் போராட்டம் மூலமே கிடைத்தது எனினும், பாலினப் பாகுபாட்டை ஒழிக்கும் முதல் முயற்சியை ஐஸ்லாந்து எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர், அங்குள்ள பெண்கள், ஆண்களைவிட 14 சதவீதம் குறைவாகவே சம்பளம் பெற்றுவந்தனர். 2022-ம் ஆண்டுக்குள், பணியிடங்களில் பாலினப் பாகுபாடு முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்களைக்கொண்ட நிறுவனங்களில், 40 சதவீதம் இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தன்று, 'சரிசமமான உரிமை என்பது, மனித உரிமை. பணியிடங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான வாய்ப்புகளைத் தருவது அவசியம். இந்த இலக்கை அடையும் முயற்சிகள் எடுப்பது நமது கடமை' என்று கூறி, இதற்கான மசோதாவை சட்டமாக உருவாகுவதற்கு ஒப்புதல் அளித்தார், ஐஸ்லாந்து நாட்டின் சமஉரிமை மற்றும் சமூக விவகாரத்துறை அமைச்சர், தோர்ஸ்டெய்ன் விங்லுண்ட்சன் (Thorsteinn Vinglundsson). ஏற்கெனவே, இந்த நாட்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட, பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் 49 சதவீதம் பெண்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பணியிடங்களில் ஒரே வேலையைச் செய்யும் ஆண்கள், பெண்களைவிட 27 சதவீதம் அதிக ஊதியம் பெறுகிறார்கள். சராசரியாக ஓர் ஆணுக்கு ஒரு மணி நேரத்தில் 288.68 ரூபாயும், ஒரு பெண்ணுக்கு 207.85 ரூபாயும் வழங்கப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. 2016-ம் ஆண்டு, பிரபல வேலைவாய்ப்பு இணையதளமான 'மொன்ஸ்டர் இந்தியா' நடத்திய ஆய்வில், இந்தப் பாலினப் பாகுபாடு, ஐ.டி துறையில் அதிகமாக உள்ளது என்கிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் ஆண்கள், ஒரு மணி நேரத்துக்கு 360.9 ரூபாயும், பெண்கள் 239.6 ரூபாயும் சம்பளம் பெறுகிறார்கள். பெண்களுக்குக் கிட்டதட்ட 34 சதவீதம் குறைவான ஊதியம் அளிக்கப்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.
நிறுவனத்தில் பதவி உயர்வு அளிப்பதில், பெண்களைவிட ஆண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும், இந்தப் பாகுபாட்டு, பெண்களின் திருமணத்துக்குப் பிறகு உருவாகும் குடும்பப் பொறுப்புகளும், சில கலாசார கட்டுப்பாடுகளுமே காரணம் என்று தெரிவிக்கிறது. ஆனால், இத்தகைய காரணங்களையும் தாண்டி, தன் பொருளாதார தேவைக்காகப் பணிக்குச் செல்லும் எண்ணற்ற இந்தியப் பெண்களுக்குச் சரிசமமான ஊதியம் வழங்கச் செய்வது அரசின் கடமை.
ஐஸ்லாந்தில் நடந்துள்ள மாற்றம், இந்தியாவில் மலரும் நாள் எப்போது வரும்?
No comments:
Post a Comment