Friday, January 19, 2018

பெண் டாக்டருக்கு அதிர்ச்சியளித்த ஊழியர்கள்! சிசிடிவி-யால் குட்டு வெளிப்பட்டது!

சகாயராஜ் மு




சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், பயிற்சி டாக்டரிடம் முகமூடி அணிந்து கொள்ளையடித்த மூன்று ஊழியர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர். உள்நோயாளிகளாகப் பலரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களும் அதிக அளவில் பணியாற்றிவருகின்றனர். இந்த மருத்துவமனையில், பவித்ரா என்பவர் பயிற்சி டாக்டராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில் பவித்ராவின் செல்போன், லேப் டாப் இருந்த பை திருடு போனது. இதுகுறித்து அவர், காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், மருத்துவமனையில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது, பவித்ராவின் பையை முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மூன்று பேர் யார் என்று பார்த்தபோது, மருத்துவமனை ஊழியர்கள் சரத்குமார், சசிகுமார், அபினேஷ் எனத் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் கைதுசெய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த செல்போன், லேப்டாப் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

டாக்டரிடமே மருத்துவமனை ஊழியர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அங்குள்ள மற்ற டாக்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024