Wednesday, January 10, 2018

''என் கல்யாணம் நின்னுருமோன்னு பயமா இருக்கு!'' - கலங்கும் அரசுப் பேருந்து கண்டக்டர் #BusStrikeChaos

போ க்குவரத்து ஊழியர்களின் நிலைமை நாளுக்கு நாள் பரிதாபமாகிக்கொண்டிருக்கிறது. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஆறு நாள்களைக் கடந்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசாங்கமோ, ஆட்டோ ஓட்டுநர்களில் ஆரம்பித்து ஊர்காவல் படைவீர்கள்வரை கண்ணில் சிக்குபவர்களையெல்லாம் அரசுப்பேருந்துகளின் தற்காலிக ஓட்டுநர்களாக்கி மக்களின் உயிரோடும் போக்குவரத்து ஊழியர்களின் வாழ்க்கையோடும் பரமபதம் விளையாடிக்கொண்டிருக்கிறது. இதனால், போக்குவரத்து ஊழியர்கள் அடைந்துள்ள துயரமும் அடையப்போகும் துயரமும் கட்டுக்கடங்காதது. அதில் சில கண்ணீர் துளிகள்...

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டக்களத்தில் ஆவேசமும் ஆக்ரோஷமும்கூடிய முகங்களுக்கு மத்தியில் சோகம் படிந்த முகத்தோடு தனியாகத் தெரிந்தார் ஓர் கண்டக்டர். அவர் மனதளவில் துவண்டுபோயிருக்கிறார் என்பதை அவர் பேச்சில் உணர்ந்துகொள்ள முடிகிறது. என் பேரு ஊரெல்லாம் போட்டுறாதீங்க சார்.

அப்புறம், இதை மனசுல வச்சுகிட்டு பின்னால ஏதாச்சும் பிரச்னை பண்ணுவாங்க. கஷ்டப்பட்டு இப்பதான் கன்ஃபார்ம் ஆகியிருக்கேன். இதுவரைக்கும் இருக்க பிரச்னையையே எங்களால ஹேண்டில் பண்ண முடியல. என்று பயந்தபடியே பேச ஆரம்பித்தார், "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு ட்ரான்ஸ்போர்ட்ல வேலை கிடைச்சது.

சும்மா இல்ல... யார் யார் கைகாலையெல்லாம் பிடிச்சி கடனவுடன வாங்கி ரெண்டு லட்சம் ரொக்கமா கொடுத்துதான் இந்த வேலைக்கு வந்தேன். இங்கே வேலை பார்க்கிற ஒவ்வொருத்தரும் என்னையப் போல லட்சங்களை கொடுத்து வேலைக்கு வந்தவங்கதான். எங்ககிட்டயிருந்து லட்சலட்சமா வாங்கி வயித்துல போட்டுகிட்டவங்கதான் இப்போ, எங்களுக்குச் சட்டப்படி சேர வேண்டிய பணத்தையும் எங்களுக்கான ஊதிய உயர்வையும் கொடுக்காம வந்துபாருங்கடா'னு சொல்றாங்க.

இப்போ நடக்கிறதையெல்லாம் பார்த்து எதிர்காலத்தை நினைச்சு ரொம்ப பயமா இருக்கு. இதுமாதிரி பிரச்னையெல்லாம் இருக்காதுங்கிறதுக்காதான் எல்லோரும் அரசாங்க வேலைக்கு வர்றதே.. ஆனால், அரசாங்கம் பிரைவேட்-ஐ விட பெரிய ஏமாத்துக்காரங்களா இருக்கிறது எந்தவகையில நியாயம்' எதிர்பார்ப்புகளும், நம்பிக்கையும் சிதைக்கப்பட்ட ஆவேசம் அவருக்குள் பொங்குகிறது.



சற்று நிதானித்தவர், "காசு கொடுத்து உன்ன யாருடா இந்த வேலைக்கு வரச்சொன்னதுன்னு நினைப்பீங்க.

நான், டிகிரி படிச்சிருக்கேன் சார். நான் படிச்சப் படிப்புக்கு எங்கேயும் வேலை கிடைக்கலை. வீட்ல ரொம்ப கஷ்டம். சோத்துக்கு வழி இல்ல.

வாழுறதுக்கு என்ன பண்றதுன்னே தெரியாமல் பைத்தியம்பிடிச்ச மாதிரி அலைஞ்சிகிட்டு இருந்தேன். அப்பதான் ஒரு ப்ரைவேட் பஸ்ல க்ளீனர் வேலை கிடைச்சது. படிச்சிருக்கேன்னு கெளரவம் பாத்தா பொழைக்க முடியாதுனு புரிஞ்சு, அந்த வேலைக்குப் போனேன். ஆறு மாசம் படாதபாடு.

அதையெல்லாம், சொல்லி மாளாது அதுக்குப் பிறகு, அந்த பஸ்லயே கண்டக்டரானேன். பெருசா இல்லைன்னாலும் அதுல ஓரளவுக்கு வருமானம் வந்துச்சி. ஆனால், எல்லா நாள்களும் டியூட்டி இருக்காது. அடுத்தடுத்து சின்னப்பசங்க புதுசுப்புதுசா வேலைக்கு வந்துகிட்டே இருந்தாங்க.

எப்ப வேணும்னாலும் உன்னைய வேலையை விட்டு நிறுத்திருவோம்ங்கிற பயத்துலயே வச்சிருந்தாங்க. அந்த நேரத்துலதான் கவர்மென்ட் வேலைக்கு ஆள் எடுக்கிறாங்கனு அறிவிப்பு வந்துச்சி. என் நிலைமையில நீங்க இருந்த என்னா பண்ணுவீங்க. அடிச்சிப்புடிச்சு பணத்தை கொடுத்து உள்ளே வந்துட்டேன்.

பணம் கொடுக்கலைன்னா ஒரு பயலுக்கும் வேலை கிடைக்காதுங்கிறையும் இந்த இடத்துல நீங்க மனசுல வச்சிக்கணும். வந்தபிறகு அவ்வளவு சின்சியரா உழைக்க ஆரம்பிச்சேன் கவர்மென்ட் பஸ் கண்டக்டர்னு ஒரு கெத்து மனசுக்குள்ள இருந்துச்சி. ஆனால், போகப்போகதான் இந்த கவர்மென்ட் போக்குவரத்து ஊழியர்களை எந்த லெவல்ல நடத்துனு தெரிஞ்சது. நடக்கும் போராட்டங்களில் போக்குவரத்து ஊழியர்கள் புலம்புறதைக் டிவிலயும், பேப்பர்லயும் வர்றதைக் கேட்டு என் வாழ்க்கையில் புயல் வீசிகிட்டு இருக்கு என்று நிறுத்தியவர்.

எனக்கு போன மாசம்தான் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணி பொண்ணுப் பார்த்துருக்காங்க.

மாப்பிள்ளை கவர்மென்ட் வேலையில இருக்கிறார்னதும் அவுங்க வீட்ல எல்லாரும் உடனே சம்மதிச்சிட்டாங்க. அந்தப் பொண்ணும் ஓ.கே சொல்லிருச்சு. இந்த மாசம் கல்யாணத்தை வச்சிக்கலாம்னு முடிவு பண்ணி இருந்தாங்க. இப்போ ஒரு வாரமா நடக்குற போராட்டத்தையும் அதுல போக்குவரத்துக் கழக ஊழியர்களும் அவர்கள் குடும்பத்தினரும் இங்க உள்ள பிரச்னைகளை டி.வில உடைச்சிப் பேச ஆரம்பிச்சதும் பொண்ணு வீட்ல ரொம்ப பயந்துட்டாங்க.

அந்தப் பொண்ணும் பயந்துருச்சி. என்னத்த சொல்லி அவங்களுக்கு புரிய வைக்கிறதுனு தெரியல. கல்யாணம் நடக்குமான்னும் தெரியல என்றபடி அவர் முடிக்கும்போது, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோஷம் வலுவாக ஒலிக்க ஆரம்பித்தது.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024