Wednesday, January 10, 2018

தமிழக அரசின் ஏ, பி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் கருணைத்தொகை வழங்குக! ராமதாஸ் வலியுறுத்தல்

By DIN | Published on : 10th January 2018 11:53 AM

தமிழக அரசின் ஏ, பி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,  தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 மிகை ஊதியம் இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

தமிழக அரசின் ஏ மற்றும் பி பிரிவினர், பல்கலைக்கழக மானியக்குழு/ அகில இந்திய தொழில்நுட்பக் குழு/ வேளாண்மை ஆராய்ச்சிக் கழக ஊதிய விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்திய பணி ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் மிகை ஊதியம் வழங்கப்படாததற்கு தமிழக அரசின் சார்பில் காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. இந்தப் பிரிவினர் அதிக ஊதியம் பெறக்கூடியவர்கள் என்பது தான் அரசின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கக் கூடும். இது தான் காரணம் என்றால் அதை ஏற்க முடியாது.

ஏ மற்றும் பி பிரிவினரும் இப்போது தான் அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்று கூற முடியாது. அதிகாரப் படி நிலையின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அதிக ஊதியம் பெறுவது இயல்பானது தான். அதன்படி தான் இவர்களும் அதிக ஊதியம் பெறுகின்றனர். இதை கடந்த கால அரசுகளும் அறிந்து இருந்ததால் தான் இவர்களுக்காக சிறப்பு மிகை ஊதியம் என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி அடையாளத் தொகையாக ரூ.1000 வழங்கி வந்தன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நடைமுறை தொடர்கிறது.

சிறப்பு மிகை ஊதியத்தை ஊதியத்தின் அடிப்படையில் இதுவரை இருந்த அரசுகள் பார்க்கவில்லை; இனியும் பார்க்கத் தேவையில்லை. மதங்களைக் கடந்த தமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவில் குழந்தைகளுக்கு பெற்றோர் தரும் பரிசைப் போன்று, அரசு ஊழியர்களுக்கு அரசு தரும் பரிசாகவே இதை பார்க்க வேண்டும். எனவே, ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளுக்கு சிறப்பு மிகை ஊதியம் கிடையாது என்ற முடிவை மாற்றுக் கொண்டு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.














No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024