பயணங்களில் நொறுங்கும் பள்ளிப் பிள்ளைகள்
By கவிஞர் ஜெயபாஸ்கரன் | Published on : 09th January 2018 02:47 AM |
வேகமாக வந்த மாநகர அரசுப் பேருந்து ஒன்று அதற்கான நிறுத்தத்தைக் கடந்து, சற்றுத் தூரம் தள்ளிப்போய் நின்றது. இறங்க வேண்டியவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும்போதே, அந்த நிறுத்தத்தில் காத்திருந்த இருபதுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிப் பிள்ளைகள் தங்களது புத்தகப் பைகளைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வேக வேகமாக ஓடிப்போய் அந்தப் பேருந்தில் முட்டிமோதிக்கொண்டு ஏற முற்பட்டார்கள். அவர்களில் ஐந்து பேர் கூட ஏறாத நிலையில், விசில் ஓசையோடு பேருந்து வேகமெடுத்துவிட்டது.
மனம் பதறவைக்கின்ற அக்காட்சியின் தொடர்ச்சியாக, எஞ்சிய பிள்ளைகள் அடுத்து வந்து நின்ற ஒரு பேருந்தைப் பார்க்கிறார்கள். அது ஏற்கெனவே பயணிகளால் நிரம்பி வழிந்ததால் அந்தப் பிள்ளைகளைத் தள்ளி நிற்க வைத்துவிட்டு நடத்துநர் விசில் அடித்துவிட்டார்.
அரசுப் பேருந்துகளில் இலவசப்பயணம் செய்வதற்குச் சலுகை பெற்றிருக்கின்ற பள்ளிப் பிள்ளைகளின் பயண அல்லல்கள், கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. தங்களுக்குரிய இலவசப் பயணங்களின்போது அவர்கள் அடைகின்ற ஏமாற்றங்களும், கேட்க நேருகின்ற வசவுகளும், எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற வன்முறைகளும், சகித்துக் கொண்டாக வேண்டிய அவமானங்களும் கணக்கிலடங்காதவை.
பல நேரங்களில் பேருந்துக்குள்ளிருக்கும் பயணிகள் கூட எதன் பொருட்டேனும் அவர்களை அதட்டுவதும் கண்டிப்பதும் உண்டு. சமூகத்தின் பொதுப்புத்தியானது, பள்ளிப் பிள்ளைகளின் கூட்டான பயணங்களையும், குதூகலமான கூச்சல்களையும், அவர்களது சிறு சிறு குறும்புகளையும் எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற முதிர்ச்சியற்றுக் கிடக்கிறது.
கல்வித் தரம், கல்விக் கூடங்களின் தரம், குடும்பப் பொருளாதாரம், உணவுத் தரம் போன்ற தங்களுக்குரிய வளரிளம் பருவத்துத் தேவைகள் எதுவும் சரியாக வாய்க்கப்பெறாத, நமது நாட்டின் பல லட்சக்கணக்கான ஏழை எளிய பள்ளிப் பிள்ளைகள், தங்களின் கல்விப் பயணத்திற்குரிய முறையான போக்குவரத்து வசதியைக் கூடப் பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.
எவ்விதமான தொலைநோக்குப் பார்வையும், திட்டத் தெளிவுகளும் இல்லாமல், சென்னைப் பெருநகரத்திற்குள் இருந்த பல குடிசைப்பகுதிகள் அகற்றப்பட்டன. இன்றளவும்கூட தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அப்புறப்படுத்தல் நடவடிக்கைகளால் பல்வேறு வகையில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள், மாநகருக்குள் இருக்கும் அரசுப்பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் வளரிளம் பருவத்துச் சிறார்கள்தான்.
அவர்கள் இப்போது சென்னைக்கு வெகுதூரத்தில் செம்மஞ்சேரி, கண்ணகிநகர் போன்ற இடங்களில் அரைகுறை வசதிகளோடு அமைக்கப்பட்டிருக்கின்ற தங்களது புதிய புதிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னை மாநகருக்குள் வந்து படித்துவிட்டுப் போகிறார்கள். அவர்களைப் பொருத்தவரையில், அந்தப் பயணமானது களைப்பையும், வலிகளையும் தரக்கூடிய நெடும்பயணம்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அப்படிப்பட்ட பயணங்களில் அவர்கள் விபத்துகளில் சிக்கிக் காயமடைவதும், உயிரிழக்க நேருவதும் கூட அவ்வப்போது நடக்கிறது.
கட்டாய வாழ்விட மாற்றத்தால் புதிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 46% பிள்ளைகள் பள்ளிகளுக்குச் செல்லாமல் நின்றுவிட்டதாகவும், போக்குவரத்து வசதியின்மையும், உரிய பயணப் பாதுகாப்பின்மையுமே அதற்குக் காரணம் என்றும் "தோழமை' எனும் குழந்தைகளுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் 30% அளவுக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் அப்பகுதிகளின் அரசுப் பள்ளிப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் போனால் போகிறதென்று பணம் கொடுத்துப் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தனியார் பள்ளிகளின் பிள்ளைகள், மிகப் பெரும்பாலும் ஒரு கொழுத்த கட்டணத்தைச் செலுத்தித் தங்களது பள்ளி வாகனங்களிலும், பலர் தங்களது பெற்றோர்களின் வாகனங்களிலும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
சென்னை நகரின் ஏழை எளிய பிள்ளைகளுக்கு இதுபோன்ற வசதிகள் ஏதுமில்லை, எனவே அவர்கள், பயண வசதி இல்லாததால் பள்ளிக்குப் போகாத பிள்ளைகளாக மாறுகின்றனர்.
இந்த அவலத்திற்குத் தீர்வு காணும் வகையில், பள்ளிப் பிள்ளைகளுக்கென்றே தனியாகப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இந்த அறிவிப்பு மிக மிகக் காலங்கடந்தவொரு ஞானம் என்றாலுங்கூட, இது நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டின் பல லட்சக்கணக்கான அரசுப் பள்ளிப் பிள்ளைகள் ஓரளவுக்குப் பயன் பெறுவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
நமது பள்ளிப்பிள்ளைகளின் கல்வியின் பொருட்டான பயணம் என்பது போக்குவரத்துத்துறையின் கரிசனத்தில் நிகழவேண்டுமா? அல்லது கல்வித்துறையின் திட்டங்களில் நிகழவேண்டுமா? என்கின்ற இரண்டு கேள்விகள் இப்போது எழுகின்றன.
நமது அரசின் போக்குவரத்துத் துறையானது, ஏற்கெனவே வரலாறு காணாத அளவுக்குச் சிக்கல்களில் மூழ்கிச் சீர்குலைவுகளின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
போக்குவரத்துத் துறையின் மேம்பாட்டிற்காக ஒரு வல்லுநர் குழுவினரால் தயாரிக்கப்பட்டு அண்மையில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற ஓர் ஆய்வறிக்கை பலகட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் மூத்த குடிமக்கள், பார்வையற்றவர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், மாற்றுத்திறனாளிகள், பள்ளிப் பிள்ளைகள் என்றெல்லாம் பல்வேறு தரப்பினருக்கு இலவசப் பயணச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
பல பணிமனைகளின் வருவாய் குறைந்து லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு, அந்த இழப்புத் தொகையானது ஆண்டுக்கணக்கில் கோடிகளாக மாறுகிறது. இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், ஒரு தோராயக் கணக்கீட்டின்படி கல்வித்துறையில் இருந்து தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் அந்தத் துறையால் தரப்படுவதில்லை.
அரசுத் திட்டம் என்பதாலும், தொடர்புடைய எல்லாமே அரசுத்துறைகள் என்பதாலும், ஏதோவொரு புரிதலில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள், போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர்.
நேரடியான வருவாய் இழப்பு என்கிற பின்புலமே, கொத்துக் கொத்தாகப் பேருந்துக்குள் ஏறுகின்ற பள்ளிப் பிள்ளைகளின் மீதான பாராமுகமாகவும் அலட்சியமாகவும் மாறுகிறது என்பது ஓர் உளவியல் உண்மை. தனிப்பட்ட முறையில் பள்ளிப் பிள்ளைகளின் மீது கரிசனம் காட்டி, புன்முறுவலுடன் அவர்களைக் கையாளுகின்ற நல்ல மனநிலையில் போக்குவரத்துத் துறையின் பணியாளர்களை, அந்தத் துறையும் அரசும் வைத்திருக்கவில்லை.
இந்த பிரச்னையின் மீதான பட்டிமன்றத்தில் எந்தத் தரப்பினர் "நியாயமானவர்கள்' எனும் தீர்ப்பினைப் பெற்றாலும், பள்ளிப் பிள்ளைகள் நியாயம் பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
போக்குவரத்துத் துறையில் நிலவுகின்ற இதுபோன்ற சிக்கல்களுக்கிடையேதான் பள்ளிப் பிள்ளைகளுக்கு என்று தனியாக பேருந்துகளை இயக்க பரிசீலனை செய்வதாக அத்துறையின் அமைச்சர் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு, ஏற்கெனவே அத்துறையில் கொடிகட்டிப் பறக்கின்ற சிக்கல்களும், இயலாமைகளும் எந்த அளவுக்கு இடம் கொடுக்குமென்பது மிகப்பெரிய கேள்விக்குறித்தான்.
சரியாகச் சொல்ல வேண்டுமென்றல், தமிழக அரசின் கல்வித்துறைதான் தமிழகம் முழுவதும் உள்ள 37,141 அரசுப் பள்ளிகளிலும், 8,409 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கின்ற பல லட்சக்கணக்கான பிள்ளைகளின் பாதுகாப்பான இலவசப் பயணத்திற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
தொலைநோக்குப் பார்வைகளோடு கூடுதல் நிதியை ஒதுக்கி, பள்ளிப் பிள்ளைகளின் பயணத்திற்கென்றே ஆய்வு செய்து வடிவமைப்பு செய்யப்பட்ட பேருந்துகளைக் கொள்முதல் செய்து உரிய வழித்தடங்களில் இயக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையின் விளைவாக அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும், அவற்றில் பிள்ளைகளின் சேர்க்கையும் இயல்பாகவே அதிகரிக்கும். இப்படிச் செய்தால், அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேருங்கள் என்று விழிப்புணர்வுப் பேரணி நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.
பல்வேறு வகையான தனியார் கல்வி நிறுவனங்களின் பெரும் வளர்ச்சிக்கு, அவை தன்னகத்தே கொண்டுள்ள போக்குவரத்து வாகன வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட அடிப்படைக் கட்டமைப்புவசதி ஆகிய இரண்டே இரண்டு காரணங்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும்.
தமிழக அரசின் கல்வித்துறையானது மேம்பாட்டுப் பாதைக்குத் திரும்பியிருப்பதற்கான சிறு சிறு சான்றுகள் இப்போது தென்படுகின்றன. அத்தகையச் சான்றுகளின் அடுத்தகட்டமாக, தன்துறையின் பிள்ளைகளுக்கான போக்குவரத்து வசதிகளை மற்ற துறைகளிடம் ஒப்படைக்காமல் அதைத் தன் கையிலும் கட்டுப்பாட்டிலும் தமிழகக் கல்வித்துறை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
விளையாட்டுகள், கோயில் திருவிழாக்கள், பண்டிகைகள், அரசியல் மாநாடுகள், சுற்றுலாப் பொருட்காட்சிகள் போன்ற பல்வேறு வகையான தாற்காலிகத் தேவைகளுக்குக்கூட வேண்டிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருப்பது ஓர் அரசின் நியாயமான நடவடிக்கை என்றால், படித்துக் கொண்டிருக்கிற பள்ளிப் பிள்ளைகளுக்கான நிரந்தரமான தேவைக்குப் பேருந்துகளைத் தனிப் பேருந்துகளை இயக்க வேண்டியது அதைவிட நியாயமான நடவடிக்கையாகும்.

No comments:
Post a Comment