Friday, January 19, 2018

மகளிர் திருவிழா: மாங்கனி நகரில் மகத்தான கொண்டாட்டம்

Published : 14 Jan 2018 11:01 IST

கி.பார்த்திபன்
வி.சீனிவாசன்































மாங்கனி நகரமான சேலத்தில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் மகளிர் திருவிழா கடந்த ஜனவரி 7 அன்று சேலம் ஜெய்ராம் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. அலை அலையாக வந்த பெண்களின் கூட்டத்தில் ஒட்டுமொத்த அரங்கமும் கலகலப்பில் நிறைந்தது.

சேலம் அரசு இசைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் கண்களுக்குக் கலை விருந்து அளித்தது என்றால் துரோணா குத்துசண்டைப் பயிற்சி மையத்தினரின் தற்காப்பு நிகழ்ச்சி பெண்களின் வீரத்தைப் பறைசாற்றியது. ‘சமையல் பெண்களுக்கானதா இல்லையா?’ என்ற பேச்சரங்கம் சிந்திக்கவைத்தது. சென்னை ‘மேட்’ அகாடமியின் பறையாட்டத்துடன் சிலம்பாட்டமும் இணைந்துகொள்ள, அரங்கம் அதிர்ந்தது.



மீரா - TAMIL பெண் என்பதே பெருமிதம்

விழாவின் மூன்று முத்துக்களாய் முத்திரை பதித்துப் பேசிய சிறப்பு விருந்தினர்களால் செவி முழுக்கக் கருத்துத் தேன் பாய்ந்தது. முதலில் பேசிய அரசுப் பொது மருத்துவர் எஸ்.எஸ். மீரா, “பெண்களால் நிறைந்த அரங்கத்தைக் கண்டதும் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியதைப் புதியதாகச் சொல்ல வேண்டுமானால் மெர்சலாயிட்டேன்” என்றதும், கரவொலி அடங்க வெகுநேரமானது. கவிதை நடையிலான தேனினும் இனிய உரையை அவர் தொடர்ந்தார்: ‘‘பெண் என்று கேட்டு எதிலும் முன்னுரிமை பெறாதீர்கள். நமக்குக் கிடைத்ததை வைத்து முன்னேற வேண்டும். இந்த வாழ்வில் என்ன சுகத்தைக் கண்டேன்; எனக்கு மட்டும் ஏன் இப்படி என்பது போன்ற சலிப்பு வார்த்தைகள் இனியும் வேண்டாம்.

பெண்ணாகப் பிறக்க மாதவம் செய்தவர்கள் நாம் என்பதை உணர்வோம். பருவ வயதுப் பெண்களை மயக்கும் ஆண்களின் அலங்கார வார்த்தைகளான, ‘உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன், நீயின்றி நான் இல்லை, நீதான் என்னுயிர்’ போன்றவற்றை நம்பி ஏமாந்துவிடாத அளவுக்குப் பெண்களை வளர்க்க வேண்டும்.

உங்களுக்குக் கிடைக்காத விஷயத்தை நினைத்துப் புலம்புவதைவிட இருப்பதைக் கொண்டு மனம் நிறையும் பெண்மை குணம் கொள்பவரை எங்கும் கொண்டாடுவார்கள்’’ எனப் பேசினார். பெண்கள் தங்கள் உடல் நலனில் காட்ட வேண்டிய அக்கறை குறித்துப் பேசியதோடு அந்தரங்க நோய்கள் விஷயத்தில் பெண்கள் அசட்டையாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.



சண்முகபிரியா - TAMIL சட்டம்தான் கேடயம்

அடுத்ததாக நீதித்துறை நடுவர் ஏ. சண்முகப்பிரியா, “தாய் வயிற்றில் சிசுவாய் உருவெடுக்கும் காலம் தொடங்கி மூதாட்டிப் பருவம்வரை திறம்பட வகுக்கப்பட்ட சட்டம் பெண்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது. ஆனாலும் பெண் சிசுக் கொலை, குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை, வரதட்சிணைக் கொடுமை, விவாகரத்து எனப் பெண்களைச் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

இவை அனைத்துக்கும் ஆண் வர்க்கத்தை மட்டுமே குற்றம் சாட்ட முடியாது. இதன் பின்புலத்தில் பெண்கள் இயங்குவதையும் மறுக்க முடியாது. குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் போன்ற விஷயங்களைக் கற்பிப்பது பெற்றோரின் கடமை. பெண்கள் பாதுகாப்புச் சட்டம் அவர்களுக்கான கேடயமே தவிர, அதை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது’’ என்றார்.

விழிப்புணர்வு அவசியம்

சேலம் மாநகரக் காவல் துணை ஆணையர் ஜி. சுப்புலட்சுமியின் பேச்சு ஆரம்பம் முதல் கடைசிவரை களைகட்டியது. ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசை உள்ளது என்று அவர் சொல்ல, வாசகி ஒருவர் எழுந்து, “எனக்குத் தலையில் சைடு ரோஸ் வைக்க ஆசை” என்றார். அதைக் கேட்ட துணை ஆணையர், “கூட்டம் முடிவதற்குள் உங்கள் ஆசையை நிறைவேற்றிவைக்கிறேன்” என்றார்.

காவல்துறை அதிகாரிகள் என்றாலே நெருங்கவும் அச்சப்படக்கூடிய வகையில் இருப்பார்கள் என்ற நினைப்பைத் தன் இயல்பான பேச்சாலும் அணுகுமுறையாலும் மாற்றிவிட்டார் சுப்புலட்சுமி. அந்த வாசகிக்கு உடனடியாக ரோஜாப்பூ கொடுக்கப்பட, அதை அவரது ஆசைப்படியே தலையில் சூடிக்கொள்ள அரங்கம் முழுவதும் மகிழ்ச்சி பரவியது.


சுப்புலட்சுமி - TAMIL

“அம்மாவாக, மாமியாராக நாமேதான் இருக்கிறோம். ஆனால், வரதட்சிணை வழக்கில் முதல் குற்றவாளியாக மகன், இரண்டாவது குற்றவாளியாக அம்மா, நாம் என்ன சொன்னாலும் கேட்கும் அப்பா மூன்றாவது குற்றவாளியாக இருக்கிறார். ஏன் இந்த நிலை?

குழந்தைகளுக்கு நம் வேதனையைத் தெரிவித்து வளர்க்க வேண்டும். அதுதான் சரியான வளர்ப்பு. தற்போது செல்ஃபி மோகம் அதிகரித்துள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் முகப்புப் படம் வைக்கும்போது எடிட் செய்யப்பட்ட படங்களை வைக்க வேண்டும்” என்று பெண்கள் செல்போன் பயன்பாட்டில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுப்புலட்சுமி விளக்கினார்.

கைநிறைய பரிசுகள்

மதிய உணவுக்குப் பிறகு போட்டிகளால் விழா களைகட்டியது. மதிய நிகழ்வுகளைச் சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார். பந்து பாஸ் செய்தல், பொட்டு ஒட்டுதல், மைம், தலையில் ஸ்டிரா சொருகுதல், பலூன் உடைத்தல் என விறுவிறுப்பான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி மாணவிகள் முதல் எழுபது வயதைக் கடந்த அனுபவசாலிகள்வரை பலரும் பங்கேற்று மகிழ்ந்ததோடு, அந்த மகிழ்ச்சியை அரங்கம் முழுவதிலும் பரவச் செய்தனர்.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளுக்கு இடையே சேலத்தின் சிறப்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுச் சரியான பதிலைச் சொன்ன வாசகிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

‘பெண் இன்று’ இணைப்பிதழ் தொடர்பான திடீர் கேள்விகளுக்குப் பதிலளித்த வாசகியரும் பரிசுகள் பெற்றனர். இவை தவிர பையில் புத்தகம் வைத்திருந்தவர்கள், கையில் மருதாணி வைத்தவர்கள், குறிப்பிட்ட நிறங்களில் புடவை அணிந்தவர்கள் எனப் பல வாசகிகளுக்கும் ஆச்சரியப் பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த தேனம்மை, சேலத்தைச் சேர்ந்த சரஸ்வதி இருவருக்கும் பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன.


தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து விழா அரங்குக்கு முதல் ஆளாக வந்த வாசகி அருணாவுக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாசகிகள் அனைவருக்கும் நிச்சயப் பரிசுகள் வழங்கப்பட, மனம் நிறைய மகிழ்வுடனும் கைநிறையப் பரிசுகளோடும் சென்றனர்.

‘தி இந்து’வுடன் இணைந்து தி சென்னை சில்க்ஸ், லலிதா ஜுவல்லரி, அணில் ஃபுட்ஸ் ஆகியோர் செலிபரேஷன் பார்ட்னராகவும், ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப பார்ட்னராகவும் பங்கேற்றனர். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு முதல் பரிசை கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ், அன்னை டேட்ஸ் நிறுவனத்தினர் வழங்கினர்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ் நிறுவனமும் ஆறுதல் பரிசை குமரப்பா சிலக்ஸ், உடுப்பி ருச்சி, லாலாஸ் மசாலா, ப்ருத்வி இன்னர் வியர்ஸ் நிறுவனங்கள் வழங்கின. மதிய உணவை ஸ்ரீசரவணபவன் குரூப்ஸ் வழங்கியது.



விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சக்திமசாலா, அணில் ஃபுட்ஸ், அம்மு இட்லி, கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ், அதிபன் அப்பளம், கோகுல் சாண்டல், கிரிஸ்பி க்ரீம் பிரெட்ஸ் நிறுவனங்கள் வழங்கின. சேனல் பார்டனராக சிடிஎன் மற்றும் சிட்டி டிவி நிறுவனங்களும் ஹாஸ்பிட்டாலிட்டி பார்டனராக ஜிஆர்டி வைப், நிகழ்விட பங்குதாரராக ஜெய்ராம் கலை அறிவியல் கல்லூரி ஆகிய நிறுவனங்கள் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...