Friday, January 19, 2018

கோவையில் இருந்து சென்னை வந்த ரயிலில் பாம்பு; பதறி ஓடிய பயணிகள்

Published : 19 Jan 2018 12:09 IST

எஸ்.விஜயகுமார் சென்னை




கோவையில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஏசி வசதி கொண்ட பெட்டியில் படுக்கையின் கீழ் பதுங்கியிருந்த பாம்பால் அதில் பயணித்த பயணிகள் பீதி அடைந்தனர்.

கடந்த வியாழனன்று கோவை - சென்னை சென்ட்ரல் இடையேயான சேரன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (12674) வழக்கம்போல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது.


ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடையவிருந்தபோது பி-3 ஏசி பெட்டியில் பயணி ஒருவர் அவரது உடைமைகளை எடுக்க முயன்றார். அப்போது படுக்கையின் கீழ் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்ததைக் கண்ட அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகளும் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர்.

சம்பவ இடத்திலிருந்த டாக்டர் புவனா கூறும்போது, "அந்த் பாம்பு நீளமாக இருந்தது. விஷப் பாம்பு போலவே தெரிந்தது. பயணிகள் போலீஸுக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் வருவதற்குள் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துவிட்டது.

பயணிகள் அனைவரும் தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறிவிட்டனர். நான் இறங்கியதும் அங்கிருந்த ரயில்வே போலீஸிடம் புகார் கொடுத்துவிட்டு புறப்பட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது" என்றார்.

இது குறித்து சென்னை பிரிவு டிவிஷனல் ரயில்வே மேலாளரிடம் வினவியபோது, "ரயில் பெட்டியில் பாம்பு இருந்தது. அதை அப்புறப்படுத்திவிட்டோம். ஆனால், அந்த பாம்பு எப்படி ஏசி ரயில் பெட்டிக்குள் வந்தது குறித்து ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024