Thursday, May 3, 2018

ரஜினி, கமலுக்கு கல்லூரிகளில் தடை

03.05.2018

சென்னை : நடிகர் கமல், ரஜினி நிகழ்ச்சிகளின் எதிரொலியாக, கல்லுாரிகளில் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.



மக்கள் நீதி மையத்தின் தலைவர், நடிகர் கமல், பல்வேறு கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் விழாக்களில் பங்கேற்கிறார். இந்த விழாக்களில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அவர், மத்திய - மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல் கட்சிகளை விமர்சித்தும், பல்வேறு கருத்துகளை பரப்பி வருகிறார்.

அதேபோல், நடிகர் ரஜினியும், ஒரு பல்கலை விழாவில் பங்கேற்று, தான் துவங்க உள்ள அரசியல் கட்சி குறித்து பேசினார்.

இதுகுறித்து, ஆளுங்கட்சியினர் தரப்பில், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கல்லுாரிகளில் அரசியல் பேசும் நிகழ்ச்சிகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை சார்பில், கல்லுாரி கல்வி இயக்குனர் மஞ்சுளா, அனைத்து மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்லுாரிகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்போர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், தாங்கள் சார்ந்த அரசியல் கட்சியின் கொள்கைகளை, தங்கள் உரைகளில் பேசி வருகின்றனர். இத்தகைய நிகழ்வுகள், மாணவர்களின் கல்விக்கு

இடையூறாக அமையும். மாணவர்களின் மனப்பான்மை பாதிக்கப்படும்.

கல்லுாரிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், தங்களின் அரசியல் கொள்கைகள், பிற இயக்கங்களின் கருத்துகளை, மாணவர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறான விழாக்களுக்கு, கல்லுாரிகள் அனுமதி தரக்கூடாது. இதுகுறித்து, மண்டல கல்லுாரி இணை இயக்குனர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024