Tuesday, May 1, 2018

ஹெச்-4 விசா பணி அனுமதி ரத்து: என்ன செய்யப்போகிறார்கள் அமெரிக்க இந்தியர்கள்?

Published : 30 Apr 2018 11:40 IST

அகில் குமார்



தனியுடைமை என்று ஒன்று இல்லாத காலகட்டம் மனித வரலாற்றின் தொடக்கத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக தனது வாழ்வியல் முறைகளை அன்றிலிருந்து படிப்படியாக மாற்றிக்கொண்டே வந்த மனிதன், இன்றைய நிலையில் இருக்கிறான். ஆனால் மகிழ்ச்சிக்கான தேடல்கள் இன்னமும் குறைந்தபாடில்லை.

சில பொருட்களுக்கான, விஷயங்களுக்கான தனியுடைமை என்பது மனிதனுக்கு தேவையான ஒன்றாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டாலும், எல்லாவற்றுக்கும் ஒருவர் தனியுடைமை கோர முடியாது. ஒருவருக்கு ஒன்றை அளித்தும், மற்றவரிடம் இருந்து இன்னொன்றைப் பெற்றும் உலகம் இயங்குவதுதான் உலகமயமாதலின், வேற்றுமையில் ஒற்றுமையின், மனித வாழ்வின் சாரமாக இருக்கிறது.


ஆனால் சமீபமாக தமிழக அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்க்கிறபொழுது உலகமய சிந்தனைகளிலிருந்து விலகி தன் நாடு, தன் இனம், தன் மதம் என்பதை மட்டும் முதன்மைப்படுத்தும் நிலைக்கு மனிதர்கள் போய்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

சமீபத்தில் இப்படிப்பட்ட தூண்டுதல்களை அளித்துக்கொண்டிருப்பவர்களில் முதன்மையானவராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தேகமின்றிக் குறிப்பிடலாம். அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் பெற்ற வெற்றியே ‘ எல்லாம் அமெரிக்கர்களுக்கே’ என்ற குறுகிய மனப்பான்மையை எல்லோரிடமும் விதைக்க முடிந்ததற்கு கிடைத்த பலனாகத்தான் கருதவேண்டி இருக்கிறது.

ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலையாக அமெரிக்கா-மெக்சிகோ எல்லை அருகே பிரம்மாண்ட தடுப்புச்சுவர் அமைக்கப்படும், அதற்கான செலவை மெக்சிகோ ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார் ட்ரம்ப். செலவை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொன்ன மெக்சிகோ அதிபர் நியடோவை அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்றார். அதனால் திட்டமிட்டிருந்த பயணத்தை மெக்சிகோ அதிபர் ரத்து செய்யவேண்டியதாயிற்று. அன்றிலிருந்து, ஆட்சிக்கு வந்து ஒன்றேகால் ஆண்டுகளைக் கடந்த பின்னும் ட்ரம்ப் நடவடிக்கைகளில் பெரிய மாற்றமில்லை. ச

மீபத்தில் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை பலமடங்கு உயர்த்தி உலக வர்த்தகத்தில் குழப்பம் ஏற்படுத்தினார். இந்தியாவை உற்றதோழன் என்று சொல்லிக்கோண்டே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும் ட்ரம்ப் ஒருபோதும் தயங்குவதில்லை. சில தினங்களுக்கு முன்பு ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிற நடவடிக்கை அமெரிக்காவில் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஹெச்-1பி விசா பெற்றவர்களின் மனைவி அல்லது கணவன் அமெரிக்காவில் பணி செய்வதற்கு இருந்த சட்டபூர்வ உரிமையை ரத்து செய்யப் போவதாக சொல்லியிருக்கிறது ட்ரம்ப் நிர்வாகம். இதனால் பாதிக்கப்படப்போவது சுமார் 64,000 இந்தியர்கள்.

ஹெச்-4 விசா பணி அனுமதி திட்டம்

அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டினர் குறிப்பிட்ட காலம் பணிபுரிவதற்கான அனுமதியாக ஹெச்-1பி என்ற விசா அமெரிக்க அரசால் தரப்படுகிறது. ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவி (அல்லது கணவன்) மற்றும் குழந்தைகளுக்கு ஹெச்-4 என்ற விசா அளிக்கப்படுகிறது. இந்த ஹெச்-4 விசாவைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் தொடங்கலாம், ஓட்டுநர் உரிமம் பெறலாம், குழந்தைகள் அமெரிக்கப் பள்ளிகளில் கல்வி பயிலலாம் . ஆனால் அமெரிக்காவில் எந்தப் பணியிலும் இவர்கள் சேர முடியாத நிலை இருந்தது.

பணியில் சேரவேண்டுமென்றால் ஹெச்-1பி விசா தேவை. இல்லையேல் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் கணவன் அல்லது மனைவி , நிரந்தர வசிப்பிடத் தகுதி எனப்படும் ‘கிரீன் கார்டு’ உடையவராக இருந்தால் அவரது கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணிசெய்யும் உரிமையைப் பெறமுடியும். ஆனால் இந்த கிரீன் கார்டை பெறுவதென்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.

இதனைப் பெறுவதற்கு ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குமேல் கூட ஆகலாம். எனவே ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களையும் பணி செய்ய அனுமதிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்துவந்தது.

இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஒபாமா அரசாங்கம் ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பில் (யுஎஸ்ஐஎஸ்) ஐ-765 என்ற படிவத்தை பூர்த்தி செய்து பணி அனுமதி அட்டையை பெற்றுக்கொண்டால் அமெரிக்காவில் பணிபுரியலாம் என மே 26,2015-ல் சிறப்பு சட்டம் கொண்டுவந்தது. இப்போது இந்த சட்டத்தை ரத்து செய்யும் முடிவில் ட்ரம்ப் நிர்வாகம் இருப்பதாக அமெரிக்காவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சக் கிராஸ்லேவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் யுஎஸ்ஐஎஸ் அமைப்பின் இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா.

பெண்களுக்கு அதிக பாதிப்பு

இந்த ஹெச்-4 விசா பணி அனுமதி திட்டம் மூலம் 71,287 பேர் பயனடைந்துள்ளதாகச் சொல்கிறது அமெரிக்காவின் மைக்ரேஷன் பாலிஸி இன்ஸ்டிடியூட் ஆய்வு. முக்கியமான தகவல் என்னவென்றால் இதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் (சுமார் 64,000 பேர்). ஹெச்-4 விசா மூலம் பயனடைந்தவர்களில் 94 சதவீதம் பேர் பெண்கள். இதில் இந்தியப் பெண்கள் மட்டும் சுமார் 62,000 பேர் ( 93 சதவீதம்). எனவே இது ஹெச்-4 விசா பற்றிய பிரச்சினை மட்டுமல்ல, பாலினம் சார்ந்த பிரச்சினையும்தான் என அமெரிக்காவின் நாடாளுமன்ற கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய -அமெரிக்கப் பெண்ணும், ஹெச்-4 விசா பணி அனுமதிக்காக தொடர்ந்து குரல் எழுப்பியவருமான பிரமிளா ஜெயபால் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதேவேளையில் பாதிப்பு என்பதை ஹெச்-4 விசாவைப் பயன்படுத்தி பணிக்கு செல்லும் 70,000 பேருக்கான பாதிப்பு என்று சுருக்கிப் பார்க்கமுடியாது. ஒட்டுமொத்த சமூக அமைப்பிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இருவர் வேலைக்கு செல்லும் குடும்பங்களின் பொருளாதார திட்டமிடல்களை இந்த அறிவிப்பு அதலபாதாளத்தில் தள்ளுகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்ப இருக்கிற பணம், அமெரிக்காவில் பயிலும் இந்தியக் குழந்தைகளின் கல்வி போன்றவற்றிலும் இவை பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது.

இதன் உச்சவிளைவாக அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேறும் சூழல் உருவாகும். இந்த வெளியேற்றம் மூலம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அதே அளவுக்கு அமெரிக்க பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதை ட்ரம்ப் நிர்வாகம் உணர்ந்ததுபோல் தெரியவில்லை. அதிகபட்சமாக காக்னிசண்ட் நிறுவனம் முதல் குறைந்தபட்சம் ஃபேஸ்புக் நிறுவனம் வரை இந்தியர்களை ஹெச்-1பி விசா மூலம் வேலைக்கு அமர்த்தியிருக்கிறது.

ஹெச்-4 விசாவின் மூலம் பலர் அமெரிக்காவில் தொழில்முனைவோராக மாறி அமெரிக்க பொருளாதாரத்துக்கு பங்களித்துவருகிறார்கள். இதையெல்லாம் ட்ரம்ப் நிர்வாகம் கணக்கில்கொள்ளாமல் தங்கள் பொருளாதாரத்தை சிதைப்பதோடு மற்ற பொருளாதாரங்களையும் மறைமுகமாக சிதைக்க முயல்கிறது.

அதேவேளையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா முன்வைத்திருக்கும் ‘ஏன் அமெரிக்கர்களின் கணவன் அல்லது மனைவி இந்தியாவில் பணி செய்வதையும் ரத்து செய்யக்கூடாது’ என்ற கேள்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமற்றது. ஒப்பீட்டளவில் அமெரிக்கர்கள் இந்தியாவில் பணிசெய்வது குறைவு. எனவே சித்தராமையா கருத்தை கவனத்தில் கொள்ள தேவையில்லை. தவிர, ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று உலகம் களம் இறங்கினால் மீண்டும் கற்காலத்திற்குத்தான் செல்லவேண்டியிருக்கும்.

மறக்கக்கூடாத மறுபக்கம்

இப்போது இருப்பவர்களை அனுமதித்துவிட்டு இதற்குமேல் அனுமதி அளிக்காமல் இருக்கலாம் என்ற குரல்களும் எழுந்துள்ளன. இருப்பினும் இந்தியர்கள் இவ்வளவு அதிகபட்ச எண்ணிக்கையில் அமெரிக்காவை நாடிச் செல்வது ஏன், இந்தியாவின் உயர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தரப்பட்ட தொழில்நுட்ப அறிவு பெரும்பாலும் அமெரிக்காவுக்கு தாரை வார்க்கப்படுவது ஏன் போன்றவற்றுக்கு விடைகாணவேண்டியதும் நீண்டகால தீர்வின் அடிப்படையில் முக்கியமானது.

ஹெச்-4 விசா மூலம் வேலை பெறுபவர்களின் குடும்பங்களில் ஏற்கெனவே ஒருவர் வேலைக்கு செல்வதால், ஹெச்-4 விசா மூலம் வேலை பெறுபவர்கள் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்குவர ஒப்புக்கொள்வதாகவும், அதனால் நிறுவனங்கள் இவர்களை வேலைக்கு எடுக்க முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஹெச்-1 பி விசா மூலம் வேலைக்கு செல்லும் மணமாகாதவர்கள் வேறு வேலைக்கு மாறுவதிலும், அப்படி மாறினாலும் அதிக சம்பளம் கிடைப்பதிலும் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நிறுவனங்களின் இந்த செயல்பாட்டின் மூலம் நேரடியாக பாதிக்கப்படுவது மணமாகாதவர்கள் என்றாலும், குறைந்த சம்பளம் பெறுவதின் மூலம் ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. இத்தகைய சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் இப்போதைய நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்திய அரசு தனது வலுவான குரலைப் பதிவு செய்யவேண்டியதும், இந்திய அமெரிக்கர்களின் நலனைக் காக்கவேண்டியதும்தான் உடனடி தேவையாகிறது.

-akhilkumar.a@thehindutamil.co.in

No comments:

Post a Comment

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...