Wednesday, May 23, 2018

தெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி!

ச.அ.ராஜ்குமார் 

vikatan 23.05.2018

மஹாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரத்தில் வசிப்பவர் ரங்கராஜ். தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறார். கடந்த சனிக்கிழமை அன்று அவரிடம் இருந்து நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளது. கொஞ்சமும் எதிர்பாராத முறையில் பணத்தை இழந்த ரங்கராஜ், தன்னை மாதிரி இன்னொருவர் பணத்தைத் தொலைக்கக்கூடாதென இச்சம்பவம் பற்றி நம்மிட பகிர்ந்துகொண்டார்.

நம்மிடம் பேசிய அவர், " கடந்த சனிக்கிழமை பிற்பகல் வேளை. பேஸ்புக் மெசஞ்சரில் எனது நெருங்கிய நண்பர் ஒருவரது கணக்கிலிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. அதில், 'எனக்கு மிகவும் அவசரமாக 3600 ரூபாய் தேவைப்படுகிறது. அதை 'பே-டிஎம்' மூலம் இந்த எண்ணிற்கு உடனே எனக்கு அனுப்பு. அதை நான் ஒரு வாரத்தில் திருப்பி தருகிறேன்' என்று மெசெஜ் வந்தது. அதனால் அச்செய்தியில் வந்த 'பே-டிஎம்' எண்ணிற்கு உடனே பணம் மாற்றம் செய்தேன்.



பின்னர் சிறிது நிமிடங்களில் எனது நண்பருக்குச் செல்போனில் தொடர்பு கொண்டு உடனே பணம் அனுப்புமாறு குறுஞ்செய்தி அனுப்ப என்ன காரணம் என்று கேட்டேன். ஆனால் அதற்கு அவர் அளித்த பதில் எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. " பேஸ்புக் மெசெஞ்சரில் நான் எப்போது உங்களிடம் பணம் கேட்டேன்? அதுபோல் மெசேஜ் எதுவும் நான் அனுப்பவில்லையே" என்றார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தை திறந்து பார்த்தால், அதில் எனக்கு செய்தி அனுப்பியதற்கான தடயமே இல்லை. எனக்கு வந்த மெசேஜ்ஜை அவருக்கு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பியதும் அவர் அதிர்ந்து போனார். ' இதே போல் என்னிடமும் 4-5 நாட்களுக்கு முன்னர் எனது நண்பரின் பேஸ்புக்கிலிருந்து மெசேஜ் வந்தது. என்னிடம் 'பே-டிஎம்' இல்லாததால் எனது ஏடிஎம் கார்டு மூலம் நானும் அவருக்கு பணம் பரிமாற்றம் செய்தேன்' என்று அதிர்ச்சியுடன் கூறினார். உடனே அந்த மற்றொரு நண்பரைத் தொடர்பு கொண்டு பணம் வேண்டி செய்தி அனுப்பினீர்களா என்றோம். அவரது பதில் எங்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரே வழியில் எங்களிடம் இரண்டு முறை பணம் திருட்டு நடைபெற்றுள்ளதை நாங்கள் உணர்ந்தோம்." என்றார்.

இது அன்றாடம் நடக்கும் பல திருட்டுகளில் ஒன்றுதான். ஆனால், டிஜிட்டல் உலகில் தினம் தினம் புது முறைகளை திருடர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். மேலே சொன்ன சம்பவத்தில் எங்கேயும் அவர்களுக்கு சந்தேகம் வரவில்லையா என்ற கேள்வி எனக்கு எழுந்தது. அவரிடம் மீண்டும் பேசினோம்.

"எங்கள் மூவரின் 'பே-டிஎம்' பணப்பரிவர்த்தனை எண்ணை அவர்கள் குறிவைத்துள்ளனர். எனது நண்பர் வழக்கமாக எவ்வாறு என்னை அழைப்பாரோ (உதாரணமாக: நண்பா, மச்சி) அதே பாணியில் என்னிடம் மேசேஜ் அனுப்பியதால் எனக்கும் எந்தச் சந்தேகமும் வரவில்லை. இருந்தும் மெசெஜ் வந்த அடுத்த நிமிடம் அவரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டேன். பதில் வராதத்தால் மெசெஞ்சரிலே தொடர்ந்து பேசினேன். அவர் அவசரத்தில் இருப்பதாகச் சொன்னதால் நானும் பதற்றத்தில் பணம் அணுப்பிவிட்டேன். பின்னர் போன் செய்து தொடர்பு கொண்டேன். ஏதோ சதி வேலை நடந்துள்ளது என்பதைச் சுதாரித்து அப்போதே 'பே-டிஎம்' வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தேன்.10 மணி நேரத்திற்குப் பிறகு அதற்குப் பதில் அளித்த அவர்கள், ' போலீசிடம் புகார் அளியுங்கள். அந்த எண்ணில் மேற்கொள்ளப்பட்ட பணபரிமாற்றத் தகவலை அவர்களிடம் அளிக்கின்றோம்' என்றனர். எங்களைப் போல் மற்றவர்களும் ஏமாறாமல் இருக்க, உடனடியாக இந்தத் திருட்டிற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார் ரங்கராஜ்.

ரங்கராஜ் விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஒருவர் பெண் என்பதால் எந்த ஃபேஸ்புக் கணக்கிலிருந்து மெஸெஜ் வந்தது போன்ற தகவல்களை அவர் தரவில்லை. அவரிடம் பேசியதிலிருந்து இரண்டு வழிகளில் அவர் ஏமாற்றப்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது.

1) அந்தப் பெண்ணின் கணினியில் ஃபேஸ்புக் லாக் இன் செய்யப்பட்டிருந்து, அப்போது அதைப் பயன்படுத்த முடிந்தவர்கள் யாரேனும் மெசெஜ் அனுப்பியிருக்கலாம். அதன்பின் அந்த மெஸெஜை டெலீட் செய்து விட்டிருக்கலாம். இருவரும் எப்படி பேசுவார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் திருடன் என்பதால், அவன் அதே அலுவலகத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம்.

2) அந்தப் பெண்ணின் ஐடியை போலவே ஒன்றை உருவாக்கி, அவரது புரொஃபைலில் இருப்பதைப் போன்ற படங்கள், தகவல்கள் சேர்த்திருக்கலாம். அது போலியான அக்கவுன்ட் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். உதாரணத்துக்கு, ஆங்கில எழுத்தான L என்பதைச் சொல்லலாம். I,I. பார்ப்பதற்கு இரண்டு ஒன்று போலத்தானே இருக்கிறது? இதில் ஒன்று கேப்பிடல் i, இன்னொன்று ஸ்மால் L. உங்கள் புரொஃபைலில் இந்த எழுத்து இருந்தால் இதை மட்டும் மாற்றினால் போதும். உங்கள் மெசெஞ்சரில் வித்தியாசத்தைப் பார்க்கவே முடியாது. இப்படியும் அவர் ஏமாற்றப்பட்டிருக்கலாம்.

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு விஷயங்களை நொடிப்பொழுதில் செய்ய முடிகிறது. அதில் பணப்பரிவர்த்தனை முக்கியமான ஒன்று. எவ்வளவு எளிமையாகச் செயல்கள் நடைபெறுகிறதோ, அதே அளவில் ஆபத்தும் நிறைந்துள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.



பண மோசடி செய்யும் பலர் பயன்படுத்தும் வழிமுறைகள்:

- மோசடி செய்யும் திருடர்கள் , ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே பெரும்பாலும் தங்களை அறிமுகம் செய்து கொள்கின்றனர். பின்னர் ஏடிஎம் கார்டின் பின் நம்பர் போன்றவற்றைக் குறுஞ்செய்தியாக அனுப்புமாறு செய்திகள் வரும். எனவே அதுபோன்ற ஒரு முறைக்கு இரு முறை சரி பார்ப்பது அவசியம்.

- தங்களது வாங்கி கணக்கு எண் ,ஏடிஎம் கார்டு எண் போன்றவற்றை அளிக்குமாறு எந்த வங்கியும் குறுஞ்செய்தி அனுப்பாது. எனவே அவ்வாறு வரும் தகவல்களை நிராகரிப்பது நல்லது.

- பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தங்களது ரகசிய தகவல்களைப் பதிவிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

பண மோசடி, தகவல் திருட்டு போன்ற செயலுக்கு உள்ளாவதைத் தடுக்க ஒரு சில வழிமுறைகள்:

- செல் போனில் பணம் பரிமாற்றம் செய்யுமாறு வரும் மெசேஜை பார்த்து உடனே கண்மூடித்தனமாக செய்ய வேண்டாம் . சம்மந்தப்பட்டவர்களை முடிந்தால் நேரிலோ அல்லது கைப்பேசியிலோ தொடர்பு கொண்டு பின்னர் பணத்தை அனுப்பலாம்.

- ஒரு பெரிய தொகையைப் பரிமாறுவதற்கு முன்னர் முதலில் சொற்பமான சில்லறையை பரிமாற்றி, பணம் கணக்கில் வந்து சேர்ந்ததா என்று உறுதி செய்தபின் முழுப்பணத்தை பண்றிமாற்றலாம்.

- தெரிந்த பெண்களின் செல்போன் எண் மற்றும் பிற தகவல்களை மேசேஜ் மூலம் கேட்டால் அத்தகவல்களை அளிப்பதைத் தவிர்க்கலாம்.ஏனெனில் அதிலும் ஏமாற்ற வாய்ப்புண்டு.

- சந்தேகம் எழும் வகையில் ஏதேனும் குறுஞ்செய்தியோ அல்லது போன் கால் வந்தாலோ அதை உரிய அதிகாரிகளிடம் கூறி புகார் அளிப்பது நல்லது.




தினம் தினம் புதுப்புது வழிகள் திருடர்களால் கண்டுபிடிக்கப்படும். இதிலிருந்து தப்பிக்க இருப்பது ஒரே வழிதான். யார் பணம் கேட்டாலும் அவர்களிடம் பேசியபின்பே பரிமாற்றம் செய்யவும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற தகவல்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். சந்தேகம் வந்தால் உடனே தெரிந்தவர்களிடம் உதவி கேளுங்கள். அவ்வளவுதான்.

No comments:

Post a Comment

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu The Hindu Bureau TIRUNELVELI 03.01.205 The universities in ...