Wednesday, May 23, 2018

பட்ஸ் வைத்து காது குடையலாமா... மருத்துவம் சொல்வது என்ன? #ENT

ஜி.லட்சுமணன்

NAGAMANI V  23.05.2018

சளி, இருமல், காதுவலி, தொண்டை கரகரப்பு... எனக் காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள் நாம் அனைவரும் எதிர்கொள்பவைதாம். ஆனால், அந்தப் பிரச்னைகள் ஏன் வருகின்றன, எப்படியெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி ஆயிரம் கேள்விகளும் சந்தேகங்களும் நமக்கு இருக்கும். இது போன்ற சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகவே, ஒரு விழிப்புஉணர்வு கருத்தரங்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.




காது தொடர்பாக நாம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னைகள் குறித்து காது, மூக்கு, தொண்டை துறை இயக்குநரும், தலைவருமான முத்துக்குமார் பேசினார்...

"ஊக்கு, ஹேர்- பின், தீக்குச்சி, பென்சில், பட்ஸ், பைக் சாவி என எது கையில் கிடைத்தாலும், அதை காதுக்குள்விட்டுக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. காதில் அழுக்கை நீக்குவதுதான் சுகாதாரம் என்று நினைப்பதும், காது குடைவதால் சுகமாக இருப்பதும்தான் இதற்குக் காரணங்கள். இரண்டுமே ஆபத்தான பழக்கங்கள். இந்தப் பழக்கத்தை ஒரு வழக்கமாகவே மாற்றிவைத்திருப்பார்கள் சிலர்.

காதுக்குள்ளிருக்கும் செருமினோஸ் சுரப்பிகள்தாம் (Ceruminous Glands) காது குரும்பியைச் சுரந்து, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன. காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமென்றால், செவிப்பறை பாதுகாப்பாக இருக்க வேண்டும். கண்களுக்கு இமைகளைப்போல, காதுகளுக்கு இயற்கை தந்திருக்கும் பாதுகாப்பு வளையம்தான் காதுக் குரும்பி. காதுக்குள் நுழையும் தூசி, அழுக்குகள் போன்ற அந்நியப் பொருள்கள் செவிப்பறையைப் பாதிக்காதபடி தடுப்பது இந்தக் குரும்பிதான். இவை தானாகவே காய்ந்து வெளியேறிவிடும். அகற்றத் தேவையில்லை.

மாறாக, ஏதாவது கூர்மையான பொருளை வைத்துக் காதைக் குடைவதால், காதிலிருந்து அழுக்கு வெளியேறுவதற்கு பதிலாக அதிகமாக உள்ளேதான் செல்கிறது. அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். தவறுதலாகச் செவிப்பறையில் அந்தப் பொருள்பட்டு கிழித்துவிட்டால், காதுவலி, காதில் புண், காது கேட்காமல் போவது, காதினுள் வீக்கம் ஏற்பட்டு வாயை அசைக்க முடியாமல் போகும் ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகளிருக்கின்றன. அதோடு புண்களால் தொற்றுகள் ஏற்படவும் இது வழிவகுக்கும். மேலும், இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. மேலும் பருத்தியாலான பட்ஸின் பஞ்சுகள் காதுக்குள் அலர்ஜியையும் ஏற்படுத்தும். இதனால்தான் பட்ஸ் வைத்து காது குடைவதை முற்றிலும் தவிர்க்கச் சொல்கிறோம். காதைச் சுத்தம் செய்யவே தேவையில்லை என்பது ஒருபுறமிருக்க, பட்ஸால் சுத்தம் செய்வது கூடவே கூடாது என்பதையும் வலியுறுத்திவருகிறோம். பட்ஸ் பயன்பாட்டைத் தடுக்க, கடைகளில் அதை விற்பதைத் தடைசெய்வதுகூட நல்லது.

காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இதற்கென உள்ள காது சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

காதுக்குள் எறும்பு, பூச்சி புகுந்திருந்தால் தேங்காய் எண்ணெய் சில துளிகள் விடலாம். இதனால் பூச்சி இறந்துவிடும். பின்னர் சிறிதளவு தண்ணீர்விட்டு தலையைச் சாய்த்தால், பூச்சி வெளியில் வந்துவிடும் அல்லது மருத்துவரிடம் காட்டி, அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதும் நல்லது. மாறாக, காய்ச்சிய எண்ணெயைக் காதுக்குள் ஊற்றக் கூடாது.



காதில் சீழ் வடிதல்...

காதில் சீழ் வடிதலுக்கு முக்கியக் காரணம் தொற்று பாதிப்புதான். நீண்ட நாள்கள் கவனிக்கப்படாத ஜலதோஷப் பிரச்னையால், சளியிலிருக்கும் கிருமிகள் மூக்கின் பின்பக்கத்தில் இருக்கும் `ஈஸ்டாக்கியன் குழல்' (Eustachian tube) வழியாக நடுக்காதுக்குச் சென்று சீழ் வைக்கும். பிறகு அங்கிருந்து வெளிக்காது வழியாகச் சீழ் வெளியேறும். காதில் சீழ் வடிந்தால், கண்டிப்பாக அது கேட்கும்திறனைப் பாதிக்கும். மேலும், சீழ் காதுவழியாக மூளைக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதனால் சுயநினைவு இழப்பு ஏற்பட்டு, உயிரிழக்கவும் நேரிடலாம். எனவே, ஆரம்பநிலையிலேயே மருத்துவரிடம் சென்றால், மாத்திரை மருந்துகளிலேயே குணப்படுத்திவிட முடியும். சுய மருத்துவம் செய்துகொண்டு நாள்களைத் தள்ளிப்போட்டால், அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்படலாம்.

காது கேளாமை

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் காது கேளாமையை எவ்வளவு விரைவாகக் கண்டறிகிறோமோ அவ்வளவு விரைவாகக் குழந்தைக்கான பேசும் திறன், மொழித்திறனையும் காப்பாற்றலாம். குறிப்பாக ஐந்து வயதுக்குள்ளாவது, கண்டிபிடித்துவிட்டால் நல்லது. இதற்காக, `காக்ளியர் இம்பிளான்ட்’ (Cochlear Implant) எனும் உட்பதியக் கருவியைப் பொருத்தும் அறுவைசிகிச்சையைச் செய்துகொண்டு கேட்கும் திறனைப் பெறலாம். தனியார் மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சைக்குச் சுமார் எட்டு லட்ச ரூபாய் செலவாகும் இந்த நவீன சிகிச்சை முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகவே அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. இளம் வயதினர், அதிகமாக செல்போன் பயன்படுத்துவது, அதிக இரைச்சல் தரும் இடங்களில் பணியாற்றுவது போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலம் காது கேளாமைப் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்’’ என்றார் முத்துக்குமார்.

மூக்கு தொடர்பான தொந்தரவுகள் பற்றி காது, மூக்கு, தொண்டைத் துறையின் உதவிப் பேராசியர் செம்மனச் செல்வன் பேசினார்... ``நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னை ஜலதோஷம். இந்தப் பிரச்னைக்குத் தொற்று, அலர்ஜி, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு... எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும். ஆனால், ஒருவார காலத்துக்கு மேல் தொடர்ந்தால், காசநோய் பாதிப்பாக இருக்கலாம். எனவே, சளிப் பரிசோதனை மற்றும் மார்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும்.



அடிக்கடி ஜலதோஷம் ஏற்பட்டால், அது சைனஸ் பிரச்னையாக மாற வாய்ப்பிருக்கிறது. மூக்கின் பின்புறமுள்ள இரண்டு சைனஸ் அறைகளில் காற்றுக்கு பதிலாக நீர் கோர்க்கும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்து, சைனஸ் பிரச்னை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சைனஸ் பிரச்னையையும் ஆரம்பத்தில் கண்டறிந்துவிட்டால், டிராப்ஸ், மாத்திரைகள் மூலம் சரி செய்யலாம். முற்றிய நிலையில் அறுவைசிகிச்சைதான் தீர்வு. அதோடு வாழ்நாள் முழுக்க மாத்திரை, மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருக்கும்.’’

காது, மூக்கு, தொண்டை துறையின் உதவிப் பேராசியர் செண்பக வள்ளி பேசும்போது, "தொண்டைவலி, தொண்டைக் கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற பிரச்னைகள் தொண்டையில் ஏற்படும் அழற்சியால் உண்டாகலாம். இதைத்தான் `தொண்டைப்புண்’ என்கிறோம். பொதுவாக, இது வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் தொற்றால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் ஒரு வாரத்தில் குணமாகிவிடும். உப்பு கலந்த சுடுநீரில் வாய் கொப்பளிப்பது நல்லது அல்லது மருத்துவரின் ஆலோசனையின்படி தொண்டை கொப்பளிக்கும் மருந்துகளையும் பயன்படுத்தலாம்.



அதேபோல, டான்சில், தைராய்டு பிரச்னை, தைராய்டு புற்றுநோய் போன்ற பிரச்னைகளும் சிலருக்கு ஏற்படலாம். உணவு விழுங்கும்போதும், பேசும்போதும் வலி ஏற்படுதல், உலர்ந்த தொண்டை, கழுத்துப் பகுதியில் கரலை உருண்டைகள், தொண்டைச் சதை வீக்கம் இருப்பதை உணர்ந்தால் மருத்துவரைச் சந்தித்து, எண்டோஸ்கோபி மூலம் என்ன பிரச்னை என்பதை உறுதி செய்துகொண்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu The Hindu Bureau TIRUNELVELI 03.01.205 The universities in ...