Friday, May 25, 2018

இந்தப் பேருந்தை இயக்கினால் பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளது! - அரசுப் பேருந்து ஓட்டுநர் போர்க்கொடி 

எம்.கணேஷ் வீ.சக்தி அருணகிரி  vikatan 25.05.2018



இந்தப் பேருந்து சாலையில் இயங்கும் நிலையில் உள்ளதா? என்பதைச் சோதனை செய்யுங்கள்.!’ என்ற கோரிக்கையோடு தேனி மாவட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அரசுப் பேருந்தோடு வந்தார் ஓட்டுநர் முருகேசன். போடி பணிமனையில் தனக்கு வழங்கப்பட்ட பேருந்து மோசமான நிலையில் இருப்பதைக் கண்ட முருகேசன், அதிகாரிகளுடன் முறையிட்டுள்ளார். எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், நேற்று தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குப் பேருந்தை கொண்டுவந்து நிறுத்திவிட்டு, பேருந்தைச் சோதனை செய்து தகுதிச் சான்றிதழ் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர், ‘இந்தப் பேருந்து சாலையில் இயங்க தகுதியற்றது.!’ எனச் சான்றிதழ் வழங்கினார். இச்சம்பவம் தேனி போக்குவரத்துத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.



ஓட்டுநர் முருகேசனிடம் பேசினோம். `பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தைச் சேர்ந்தவன் நான். கடந்த 10 வருடங்களாக அரசுப் போக்குவரத்து துறையில் பணியாற்றுகிறேன். நான்கு மாதங்களாக தேனி முதல் போடி வழி உப்புக்கோட்டை பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட பேருந்து சாலையில் இயக்குவதற்கு தகுதி இல்லாத பேருந்து. ஜன்னல், மேற்கூரை, இருக்கைகள் என அனைத்தும் உடைந்து இருக்கும். எனக்கு வேறு பேருந்து கொடுங்கள். இந்தப் பேருந்தை இயக்கினால் பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளது’ என அதிகாரிகளிடம் எத்தனையோ முறை சொல்லியும் எந்தப் பலனும் இல்லை. அதனால், நேற்று போடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனி புதிய பேருந்துநிலையத்தில் விட்டுவிட்டு நேராக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்.

இப்பேருந்து சாலையில் இயங்கத் தகுதி உள்ளதா என்பதற்கான தகுதிச் சான்றிதழ் கேட்டேன். ஏழு குறைகளைக் கண்டறிந்து, இப்பேருந்து தகுதியற்ற ஒன்று என சான்றிதழ் வழங்கினார்கள். அதை போடி பணிமனைக்கு அனுப்பிவிட்டேன். மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கிறோம். அந்த மக்களின் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் பேருந்துகளை எப்படி இயக்குவது?’’ என வேதனையோடு தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் பெரும்பாலான பேருந்துகள் சாலையில் இயங்கத் தகுதியற்ற ஒன்று எனவும், அதன் ஆயுள் காலம் முடிந்து பல வருடங்கள் ஆன பின்பும், பயன்படுத்தப்படுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

No comments:

Post a Comment

National anthem is sung at beginning, end of Governor’s address: Raj Bhavan

National anthem is sung at beginning, end of Governor’s address: Raj Bhavan The Governor reaffirms his commitment  to upholding the constit...