Friday, May 25, 2018

கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் கல்விக் கட்டணம் செலுத்தத் தடுமாறுபவரா? 


ஞா. சக்திவேல் முருகன்
Chennai: vikatan 25.05.2018

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி, ஒரு வாரம் ஆகிறது. பெற்றோர்களும் மாணவர்களும் எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என அலைமோதிக்கொண்டிருக்கின்றனர். கல்லூரியில் இடம் கிடைத்தால் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியுமா எனத் தடுமாறுபவர்களுக்குக் கல்விக்கடன் வழங்க வங்கிகள் தயாராகிவருகின்றன.





மத்திய அரசு, `கல்விக்கடன் கேட்டு வருபவர்களை அலைக்கழிக்காமல் கல்விக்கடன் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. இதற்காக, அனைத்து தேசிய வங்கிகளையும் ஒருங்கிணைத்து, `வித்யாலட்சுமி’ (www.vidyalakshmi.co.in) என்ற இணையதளத்தின் மூலம் ஒற்றைச்சாளர முறையில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம், மாணவர்கள் வங்கிக்கு நேரில் செல்லாமல் 40-க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கலாம்.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், `வித்யாலட்சுமி’ இணையதளத்தில் தங்களுடைய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். இதில், மாணவர் மற்றும் பெற்றோரின் பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கியின் சேமிப்புக்கணக்கு விவரங்கள், கல்லூரி மற்றும் படிக்கவுள்ள பாடப்பிரிவு குறித்தும், கல்விக்கடனாக எவ்வளவு தொகை வேண்டும் என்பதையும், தேர்வுக் கட்டணம், புத்தகக் கட்டணம், கம்ப்யூட்டர் மற்றும் இதரக் கருவிகள் வாங்கினால் அதற்கான விவரங்கள், விடுதிக்கான கட்டணங்கள், போக்குவரத்துக் கட்டணம் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

மேலும், பெற்றோரின் வருமான விவரத்தையும் குறிப்பிட வேண்டும். இதற்காக வருமானச் சான்றிதழ் அல்லது பெற்றோர் மாதாந்திரச் சம்பளம் பெறுபவராக இருந்தால் வங்கியில் சம்பள வரவு விவரங்கள் அல்லது வருமானவரித் தாக்கல் செய்திருந்தால் அதற்கான விவரங்களையும் வழங்க வேண்டும்.

நான்கு லட்சம் ரூபாய்க்குக் கூடுதலாகக் கடன்பெற நினைப்பவர்கள், கடனுக்கு உத்தரவாதமாக என்னென்ன சொத்து விவரங்களை வழங்க இருக்கிறீர்கள், உங்களுக்கான நிதி வாய்ப்புகள் போன்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். 7.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்கள், கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவரின் விவரத்தையும் வழங்க வேண்டும்.

கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில், கல்விக்கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவீர்கள்? ஒவ்வொரு தவணையிலும் உங்களால் எவ்வளவு தொகையைத் திருப்பிச் செலுத்த முடியும் போன்ற தகவலையும் வழங்கவேண்டியிருக்கும். இத்தனை விவரங்களையும் வழங்கிய பிறகு, மதிப்பெண் சான்றிதழையும் கல்லூரிச் சேர்க்கைக்கான கடிதத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு, கடன் பெற விருப்பம் உள்ள மூன்று வங்கிகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

இணையதளத்தில் தகவலைப் பதிவுசெய்த 15 நாள்களுக்குள் வங்கியிலிருந்து தகவல் வரும். 7.5 லட்சம் ரூபாய்க்குக் கூடுதலாகக் கடன் கேட்டிருந்தால், 30 நாள்கள் வரை காத்திருக்க வேண்டும்.

சில வங்கிகளின் இணையத்திலேயே கல்விக்கடனுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்தியும் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கல்விக்கடன் பெறுபவர்களுக்கு, மத்திய அரசு கல்விக்கடன் வட்டி மானியம் வழங்குகிறது. கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க, கால நிர்ணயம் எதுவும் கிடையாது. ஏற்கெனவே கல்லூரியில் சேர்ந்து படித்துவருபவர்களும் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

வங்கியில் கல்விக்கடன் வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவிக்கலாம். மாவட்டத்தின் முன்னோடி வங்கியாக அறிவிக்கப்பட்ட வங்கியை அணுகியும் உங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளரை அணுகி தீர்வு காணலாம்.



கடந்த ஆண்டு இணையத்தின் வழியே விண்ணப்பித்துக் கல்விக்கடன் பெற்றவர்களிடம் பேசினோம். ``கடந்த ஆண்டு, என்னுடைய மகளுக்குப் பொறியியல் கலந்தாய்வில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்விக் கட்டணமாகப் பெருந்தொகையைச் செலுத்தவேண்டியிருந்ததால், கல்விக்கடன் பெற இணையதளத்தின் வழியே விண்ணப்பித்தோம். விண்ணப்பித்த ஒரு வாரத்தில் எங்கள் இல்லத்துக்கு அருகில் உள்ள வங்கியிலிருந்து அழைப்பு வந்தது. அந்த வங்கியிலேயே எங்களுடைய மகளுக்குச் சேமிப்புக்கணக்குத் தொடங்கியிருந்ததால், கல்விக்கடன் கிடைப்பதற்கு எளிதாக இருந்தது.

கல்விக்கடன் பெற்றபோது, மகளின் வங்கிக்கணக்கில் பெற்றோரின் பெயரை இணைக்கச் சொன்னார்கள். ஆதார் கார்டு, பெற்றோரின் வருமானவரிச் சான்றிதழையும் சம்பளச் சான்றிதழையும் கூடுதலாகக் கடன் தர, மதிப்பீடு (சிபில் ஸ்கோர்) விவரங்கள் கேட்டனர். அனைத்து விவரங்களையும் வழங்கிய ஒரு வாரத்தில் வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு வந்து பார்வையிட்டார்கள். அதன் பிறகு நான்கு நாள்களில் வங்கிக்கடன் கிடைத்துவிட்டது.

 வங்கியில் சரியான விவரங்களை முழுமையாக வழங்கினால், உடனுக்குடன் கல்விக்கடன் கிடைத்துவிடும். முக்கிய ஆவணங்களும், கொஞ்சம் பொறுமையும், கனிவான பேச்சும் இருந்தால் லோன் கிடைப்பது எளிது. வங்கியில் உதவி செய்யவே காத்திருக்கின்றனர். சிலசமயம், கொஞ்சம் காத்திருக்கச் சொன்னால்கூட பொறுமை இல்லாமல் வங்கி அதிகாரிகளைக் கடிந்துகொள்வதும், வார்த்தைகளால் வறுத்தெடுப்பதுமாக இருந்தால் நம்முடைய நம்பகத்தன்மையை யோசிப்பார்கள்" என்றனர்.

No comments:

Post a Comment

National anthem is sung at beginning, end of Governor’s address: Raj Bhavan

National anthem is sung at beginning, end of Governor’s address: Raj Bhavan The Governor reaffirms his commitment  to upholding the constit...