Tuesday, May 22, 2018

`அந்த விமானத்தின் இயந்திரக் கோளாறு நீடித்திருந்தால்…!" - ராஜீவ் நினைவு தினப் பகிர்வு!

ஜெ.பஷீர் அஹமது

vikatan 21.05.2018

ராஜீவ் காந்தி என்ற ஆளுமையின் மரணம் இந்திய வரலாற்றில் ஒரு கரைபடிந்த அத்தியாயம். 1984-1989 காலகட்டத்தில் அவர் இந்திய பிரதமராக பதவியில் இருந்து செயல்பட்ட விதம் இளையதலைமுறையின் ஒரு பிரிவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.




வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்து சந்திரசேகர் பொறுப்பேற்று 117 நாள்களில் அந்த ஆட்சியும் கவிழ்ந்ததோடு நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. நாடு தழுவிய அளவில் பயணம் செய்து பரப்புரை செய்த ராஜீவ் காந்தி 1991, மே 21 அன்று ஆந்திர மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அன்று மாலை 6.30 மணிக்குத் தனிவிமானம் மூலம் தமிழகத்துக்கு வந்து பரப்புரை செய்யவிருப்பதாக இருந்தது நிகழ்ச்சி நிரல். அவர் புறப்பட தயாராக இருந்தார். அந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மறுநாள் பயணம் செய்யலாம் என நிகழ்ச்சியை மாற்றி அமைத்து விருந்தினர் மாளிகைக்குத் திரும்பிச் சென்றார்.

ஆனால், சற்று நேரத்திலேயே `இயந்திரக் கோளாறு சரியாகிவிட்டது சென்னைக்குப் புறப்படலாம்' என அவருக்கு அழைப்பு வந்தது. மீண்டும் விமான நிலையத்துக்குத் திரும்பினார் ராஜீவ். ஆந்திராவிலிருந்து சென்னை வந்த அவர் இரவு 10 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் சென்றடைந்தார். உற்சாக வரவேற்பு. அந்த வரவேற்புக்கு மத்தியில் கையில் சந்தன மாலையுடன் நின்றுகொண்டிருந்தார் ஓர் இளம்பெண். ராஜீவ் காந்தி கழுத்தில் அந்த மாலையை அணிவித்த நொடிப்பொழுதில் மனித வெடிகுண்டாக இயங்கினார் அந்தப் பெண். ராஜீவ் உடல் சிதறியது.

நேரு குடும்பத்தின் ஓர் ஆளுமைமிக்க தலைவரின் அத்தியாயம் அங்கேயே முடிந்தது. அவரோடு காவல்துறை அதிகாரிகள், உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். அவரது மரணம் ஏற்படுத்திய அனுதாப அலை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது. பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலோடு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அந்த அனுதாபம் தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியைத் தேடிதந்தது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். தி.மு.க படுதோல்வி அடைந்தது.



ராஜீவ் காந்தி மறைந்தாலும் அவருடைய மரணத்தில் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. `ராஜீவ் கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டார்' எனக் கருதப்பட்ட சிவராசன் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்தனர். தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியது காவல்துறை. தமிழகம் முழுவதும் சல்லடையாக அலசப்பட்டது. இறுதியாக சிவராசன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் பதுங்கியிருந்த இடம் தெரியவந்தது. போலீஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு சிவராசன் பதுங்கியிருந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டது. அவர்களை கைது செய்யும் நேரத்தில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

இப்படி தற்கொலை செய்துகொண்டவர்கள் 12 பேர் தவிற, கைது செய்யப்பட்டவர்களில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் இன்னமும் சிறைச்சாலையில் உள்ளனர். அவர்கள் விடுதலைக்கான சட்டப்போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்களுக்குப்பிறகு பேரறிவாளன் பரோலில் வெளிவந்து மீண்டும் சிறை திரும்பினார். மற்றவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.



ராஜீவ் காந்தியின் மரணம் தமிழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியது என்றாலும், அந்த மரணம் ஏன் ஏற்பட்டது? என்ற வினாவுக்கு முடிவில்லாத விளக்கங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.11.2024