Saturday, June 2, 2018

தலையங்கம்

பாடம் தரும் தேர்தல் முடிவுகள்




பா.ஜ.க.வை பொறுத்தமட்டில், இது அதிர்ச்சிதரும் தோல்வி என்றாலும், அடுத்த ஒரு ஆண்டில் தங்களை தயார் படுத்திக்கொள்ள ஒரு பாடமாக அமைந்துவிடும்.

ஜூன் 02 2018, 03:30

அனைத்து அரசியல் கட்சிகளும் 2019–ம் ஆண்டு நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலை மனதில்வைத்து பணிகளை தொடங்கிவிட்டன. பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் முயற்சிகளை தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க. தனது

4 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் முயற்சியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இப்போது 4 பாராளுமன்ற தொகுதிகளிலும், 11 சட்டசபை தொகுதிகளிலும் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெரும்சரிவை சந்தித்துள்ளது. நிச்சயமாக இது அதிர்ச்சிதரும் தோல்விதான்.

2014–ம் ஆண்டில் இருந்து இதுவரை 27 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. இதில் 5 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது உத்தரபிரதேச மாநிலம் கைரானாவில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொகுதி ஏற்கனவே பா.ஜ.க. வெற்றிபெற்ற தொகுதியாகும். இந்த தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்று மரணமடைந்த பா.ஜ.க. எம்.பி. ஹூக்கும்சிங்கின் மகள் மிரிகங்காசிங் பா.ஜ.க. வேட்பாளராக போட்டி யிட்டார். அவரை எதிர்த்து அஜித்சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தள வேட்பாளராக ஒரு முஸ்லிம் வேட்பாளர் தபசும்ஹசன் போட்டியிட்டார். தபசும்ஹசனை, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரித்தன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஒருபக்கம், பா.ஜ.க. ஒருபக்கம் என்று நடந்த இந்த போட்டியில் தபசும்ஹசன் வெற்றிபெற்றார். இதேபோல, மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிபெற்றிருந்த பந்தாரா–கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர், பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்து வெற்றிபெற்றார். மராட்டிய மாநிலத்தில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த பால்கர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர், சிவசேனா வேட்பாளரை தோற்கடித்தார்.

இதுபோல, நாகலாந்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, நாகா மக்கள் முன்னணி வேட்பாளரை தோற்கடித்து வெற்றிபெற்றது. ஆக, மொத்தம் நடந்த 4 பாராளுமன்ற தொகுதிகளில் 2 இடம் எதிர்க்கட்சிக்கும், 2 இடம் பா.ஜ.க.வுக்கும் கிடைத்துள்ளது. இதுபோல மேற்குவங்காளம், மேகாலயா, பஞ்சாப், உத்தர பிரதேசம், கேரளா, மராட்டியம், பீகார், ஜார்கண்ட், உத்தரகாண்ட், கர்நாடகம் மாநிலங்களில் நடந்த

11 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மட்டும் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஜார்கண்டில் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கேரளா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் ஆளுக்கொரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளன. இனி நிச்சயமாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேலும் வலுப்பெறும்.

பா.ஜ.க.வை பொறுத்தமட்டில், இது அதிர்ச்சிதரும் தோல்வி என்றாலும், அடுத்த ஒரு ஆண்டில் தங்களை தயார் படுத்திக்கொள்ள ஒரு பாடமாக அமைந்துவிடும். இந்த தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலை வைத்து, 2019–ம் ஆண்டு நடைபெறபோகும் தேர்தலை கணிக்கமுடியாது என்றாலும், ஒவ்வொரு கட்சியும் தங்களை தயார் படுத்திக்கொள்ள இது ஊக்கமாக அமைந்துவிடும். எந்தவொரு விளையாட்டு போட்டிக்கும் முன்னால் வீரர்கள் தங்களை ‘வார்ம்அப்’ செய்துகொள்வது போலத்தான் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...