Saturday, June 2, 2018

மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு




சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஜூன் 02, 2018, 04:56 AM
சேலம்,

தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை மாணவ, மாணவிகள் குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக கொண்டாடினர்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் நாளில் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் தங்களது பள்ளிகளுக்கு சென்றனர். அதாவது, ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு செல்வதால் மிகுந்த உற்சாகத்துடன் அவர்கள் சென்றதை பார்க்க முடிந்தது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆட்டோ மற்றும் வாகனங்களில் அனுப்பாமல் தாங்களே பள்ளிவரை அழைத்து சென்று விட்டனர். புதிதாக 1-ம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து பெற்றோரிடம் சற்று அடம் பிடித்து அழுததை காணமுடிந்தது. அதிலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற கல்வி அவசியம் என்பதால் அவர்கள் முரண்டு பிடித்து கதறி அழுதாலும் விடப்படியாக தூக்கி சென்றும், வரவேமாட்டேன் என்று கதறி அழுத குழந்தைகளை கண்டும் காணாமலும் அழைத்து சென்றனர். பின்னர் குழந்தைகளை ஆசிரியர்கள் சமாதானம் செய்து பாடம் சொல்லி கொடுத்தனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று முதல் நாளில் அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டன. சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுகள் ஆகியவற்றை வழங்கினார்கள். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல்பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக பிரார்த்தனை, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024