Sunday, July 22, 2018

மூலிகையே மருந்து 15: நலம் தரும் நெருஞ்சில்!

Published : 21 Jul 2018 12:04 IST


டாக்டர் வி.விக்ரம் குமார்




கண்கவரும் கிராமத்துப் பசுமையையும் ஆங்காங்கே துள்ளியோடும் ஓடை நீரின் சலனத்தையும் ரசித்துக்கொண்டு, வயல் வரப்புகளில் காலணி அணியாமல் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தபோது, ‘நறுக்கென்று’ நமது பாதங்களைச் சில முட்கள் பதம் பார்த்திருக்கும். ஆழமான நமது ரசனைக்குத் தடைபோட்ட அந்த முட்கள், நெருஞ்சில் தாவரத்துக்குச் சொந்தமானவை!

வாழ்வின் சிறு பகுதியாவது கிராமத்தில் கழித்தவர்களுக்கு, மூலிகை சார்ந்த நினைவுகள், பல இயற்கைக் கதைகள் பேசும். இன்று கதை பேசவிருக்கும் கிராமத்து மூலிகை நெருஞ்சில்!

பெயர்க் காரணம்: திரிகண்டம், நெருஞ்சிப்புதும், சுவதட்டம், கோகண்டம், காமரசி, கிட்டிரம், சுதம் போன்ற வேறு பெயர்களும் நெருஞ்சிலுக்கு உண்டு. யானையின் கொழுப்புப் படிமம் நிறைந்த பாதங்களைத் துளைத்து, யானையைத் தலை வணங்கச் செய்வதால் ‘யானை வணங்கி’ என்ற பெயரும், காமத்தைப் பெருக்கும் தன்மை இருப்பதால், ‘காமரசி’ எனும் பெயரும் இதற்கு உள்ளன.

அடையாளம்: மண் தரையில் பசுமையாகப் படரும் முட்கள் கொண்ட தரைபடர் செடி. தாவரம் முழுவதும் வெண்ணிற ரோம வளரிகள் காணப்படும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும். இதன் தாவரவியல் பெயர் ‘டிரிபுலஸ் டெரஸ்ட்ரிஸ் (Tribulus terrestris)’. ஜைகோபில்லேசியே (Zygophyllaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. ஹெகோஜெனின் (Hecogenin), ஸாந்தோசைன் (Xanthosine), பீட்டா சைடோஸ்டீரால் (Beta – sitosterol), டையோசின் (Dioscin), டையோஸ்ஜெனின் (Diosgenin) ஆகிய தாவர வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கிறது.

உணவாக: நெருஞ்சில் செடியை அரிசியோடு சேர்த்து வேக வைத்து, வடித்த கஞ்சியோடு நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுக்க, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். குளிர்ச்சித் தன்மை கொண்ட நெருஞ்சில், சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்பட்டு, உடலின் வெப்பத்தை முறைப்படுத்தும்.

சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றப் பயன்படும் தாவரங்களுள் நெருஞ்சில் முக்கியமானது. ‘நீர்க்கட்டு துன்மாமிசம் கல்லடைப்பு… நெருஞ்சிநறும் வித்தை நினை’ எனும் அகத்தியரின் பாடல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு சார்ந்த அறிகுறிகளைக் குறைப்பதில் நெருஞ்சில் சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது.

மருந்தாக: டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவை நெருஞ்சில் விதைகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் அறுதியிட்டுக் கூறுகின்றன. செர்டொலி செல்களைத் தூண்டி, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை நெருஞ்சிலுக்கு இருக்கிறது. ஆண்மைப் பெருக்கி மருந்துகளில் நெருஞ்சில் விதைகளுக்கு நீங்கா இடம் உண்டு. கல்லீரலைப் பலப்படுத்தும் மூலிகையாக சீன மருத்துவம் நெருஞ்சிலைப் பார்க்கிறது.

வீட்டு மருந்தாக: நெருஞ்சில் செடியை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் ஊற வைத்து வடிகட்டி, தேனில் கலந்து கொடுக்க ஆண்மை அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம். நெருஞ்சில் விதைப் பொடி, நீர்முள்ளி விதைப் பொடி, வெள்ளரி விதைப் பொடி ஆகியவற்றை ஒன்றுசேர்த்து பாலில் கலந்து குடித்துவர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நல்ல உறக்கத்தை வரவழைக்க, நெருஞ்சில் பொடியைப் பாலில் கலந்து இரவில் குடித்து வரலாம். நெருஞ்சில் விதைகளையும் கொத்துமல்லி விதைகளையும் சம அளவு எடுத்து, கஷாயமாக்கிப் பருக, வேனிற் கால நோய்கள் கட்டுப்படும். நெருஞ்சில் பொடி கொண்டு தயாரிக்கப்படும் நெருஞ்சில் பானத்தை, சுரத்தைக் குறைப்பதற்காக காஷ்மீர் பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

நெருஞ்சில் குடிநீர்: நெருஞ்சில் தாவரத்தைக் காய வைத்துக் குடிநீராகக் காய்ச்சி வெயில் காலத்தில் குடிக்க உடல் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். கல்லடைப்பு நோயால் உண்டாகும் குறிகுணங் களைக் குறைக்கவும், சுரத்தைத் தணிக்கவும் உதவும். உடலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்க இன்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் மருந்து நெருஞ்சில் குடிநீர்தான்.

இரண்டு கைப்பிடி அளவு யானை நெருஞ்சில் இலைகளை 200 மி.லி. நீரில் ஊறவைத்து மூன்று தேக்கரண்டி சர்க்கரை கலந்து, சிறிது நேரம் கலக்க, நீர் வெண்ணெய் போல் குழகுழப்பாகும். அந்த நீரைப் பருக உடல் மிகுந்த குளிர்ச்சி அடையும். வெண்புள்ளி நோய்க்கு, இந்தக் கலவையை மருந்தாகப் பாரம்பரிய வைத்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.

இனி, உங்கள் பாதங்களில் முள் குத்தும்போது, அந்த முள்ளை எடுத்துக் கவனித்துப் பாருங்கள். ‘உங்கள் பாதங்களுக்கு வலியைக் கொடுத்த நான், பல நோய்களின் வலியை நீக்குவேன்’ என்ற உண்மையை ஆவலுடன் தெரிவிக்கும். நெருஞ்சி நெருக்கமாகும்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...