Saturday, July 21, 2018

தேசிய செய்திகள்

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு





தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர் களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வை நடத்த அனுமதி வழங்கியது.

பதிவு: ஜூலை 21, 2018 05:45 AM

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுதேர்வை தமிழில் எழுதிய மாணவர் களுக்கு, கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மதிப்பெண்கள் குறைந்தது.

196 கருணை மதிப்பெண்கள்

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறியதோடு, மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) அறிவுறுத்தியது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி சி.பி.எஸ்.இ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் தரப்பிலும், ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.எஸ்.இ, தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கேள்வித்தாளை கோர்ட்டில் தாக்கல் செய்து வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்களை வழங்கினால் சில மாணவர்களின் மதிப்பெண் கள் மொத்த மதிப்பெண்களை விட அதிகமாகும். உதாரணத்துக்கு மொத்த மதிப்பெண் 720 ஆகும். இப்போது கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்கினால் சில மாணவர்களின் மதிப்பெண் 750 ஆகிவிடும். இது தேர்வு முறையை கேள்விக்குரியதாக்கி விடும்.

கேள்வித்தாளில் தமிழ் மொழிபெயர்ப்போடு ஆங்கில மூலத்தாளும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல் கையேட்டில், தமிழ் கேள்வித்தாளில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகள் இருப்பதாக தோன்றினால், ஆங்கில கேள்வித்தாளில் உள்ளதே இறுதியாக கொள்ளப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் வருங்காலத்தில் இது போன்ற குளறுபடிகள் எதுவும் நடைபெறாமல் அனைத்து வகையிலும் கவனமாக பார்த்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரை தொடர்ந்து டி.கே.ரங்கராஜன் எம்.பி. தரப்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த் லுத்ரா வாதாடுகையில், “தமிழில் வெளியிடப்பட்ட கேள்வித்தாளில் ஏதேனும் எழுத்துப்பிழைகள் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மொழிபெயர்ப்பில் வினாக்களே தவறாக கேட்கப்பட்டு உள்ளன. இது மாணவர்களுக்கு மிகவும் பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தியது. எனவே, ஐகோர்ட்டு தீர்ப்பு மிகவும் சரியானது. அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி கருணை மதிப்பெண்கள் வழங்குவதுதான் நியாயமாக இருக்கும்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் கூறியதாவது:-

49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. தவறாக மொழிபெயர்க் கப்பட்ட ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தம் 196 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் வழங்குமாறு ஐகோர்ட்டு கூறி உள்ளது. இது நாடு தழுவிய அளவில் உள்ள தகுதி பட்டியலை பாதிக்கும்.

இது தேசிய அளவில் நடைபெறும் தேர்வு. மொழி பெயர்ப்பு சரியாக இருந்தாலும் மாணவர்கள் விடைகளில் தவறு நேர்ந்திருக்கலாம் என்ற விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியதாவது:-

ஒரு கேள்வியில் ‘சீட்டா’ (சிறுத்தை) என்ற வார்த்தை ‘சீதா’ என்று தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. மொழிபெயர்ப்பின் கூர்மைத்தன்மை தவறுவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதுபோன்ற பிழைகள் மாணவர்களின் விடையை தவறாக வழிநடத்திச் செல்லும் ஆபத்து உள்ளது. இதுபோன்ற தவறுகளால் அடுத்த முறை மாணவர்கள் தமிழில் தேர்வை எழுத எப்படி முன்வருவார்கள்? ஆனால் அதற்காக இப்படி கருணை மதிப்பெண்கள் அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்களை அளிக்குமாறு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஐகோர்ட்டு தீர்ப்பினால் தடைபட்ட 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வை சுகாதாரத்துறை இயக்குனரகம் நடத்திக்கொள்ளலாம்.

வருங்காலத்தில் நீட் தேர்வில் கேள்வித்தாளை இறுதி செய்வதற்கும், பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பை சரிபார்க்கவும் சி.பி.எஸ்.இ. நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...