சித்தா படிக்க, 'நீட்' தேவையில்லை; பிளஸ் 2 மதிப்பெண்படி சேர்க்கை
Added : ஜூலை 17, 2018 01:21
சென்னை : இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்துவது என, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடைபெற வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில், நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அதில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர்.
இந்திய மருத்துவ முறை, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை, தமிழகத்தில் இதுவரை, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில், நடந்து வந்தது. இரண்டு கல்வியாண்டுகளாக, மத்திய அரசு, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, நீட் தேர்வை பின்பற்ற அறிவுறுத்தியது. அதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி, சட்டத்துக்கு முரணாக, நீட் தேர்வை, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு அறிமுகப்படுத்த முடியாது என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரியப்படுத்தியது. தற்போதுள்ள இந்திய மருத்துவ முறை, மத்தியக் குழு சட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கான எந்தவொரு திருத்தத்தையும், மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இது குறித்து, முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி கல்லுாரிகளில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
சட்டம் சொல்வது என்ன?
'இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த முடியும்' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற அலோபதி மருத்துவ மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அதேபோல், சித்தா, யோகா, ஆயுர்வேதா, ஓமியோபதி போன்ற, இந்திய மருத்துவ முறை படிப்புகளும், நடப்பாண்டு முதல், நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய அரசு அறிவித்தது.
இது குறித்து, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. இதனால், நடப்பாண்டு, இந்திய மருத்துவ முறை படிப்புகள், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, ஏற்கனவே தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். தற்போது, இந்திய மருத்துவ முறை படிப்புகள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார். இதை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, நீட் தேர்வு அடிப்படையில் நடத்த, ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1970ல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இந்திய மருத்துவ முறை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என, கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நீதிமன்றம் சென்றாலும், தமிழக அரசு வெற்றி பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment