Tuesday, July 17, 2018

மூணாறில் கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூலை 17, 2018 05:17




மூணாறு : மூணாறில் பெய்து வரும் கனமழையால் வீடு, கடைகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மூணாறில் ஜூலை 8ம் தேதி முதல் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி, 24 செ.மீ., மழை பதிவானது. இது இந்தாண்டு பெய்த மழையில் அதிகமாகும். கனமழையால் இக்கா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதனால் பழைய மூணாறில் உள்ள ெஹட் ஒர்க்ஸ் அணையில் ஒரு மதகு 4 அடி உயர்த்தப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனாலும் அதே பகுதியில் கொச்சி- -தனுஷ்கோடி ரோட்டில் தேங்கிய நீர் வெளியேறாததால் வாகனங்கள் தத்தளித்தன.

இதே ரோட்டில் மூணாறு -சிக்னல் பாய்ன்ட் இடையே நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை நான்கு இடங்களிலும், ெஹட் ஒர்க்ஸ் அணை அருகிலும் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகாத்மாகாந்தி காலனியில் கருப்பையா என்பவரின் வீட்டின் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டு ஆபத்தாக உள்ளது. இக்கா நகர், பழைய மூணாறில் தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் கடைகளை வெள்ளம் சூழ்ந்தது. கொச்சி- -தனுஷ்கோடி ரோட்டில் புறவழிச்சாலையில், போலீசார் குடியிருப்பு அருகே மிகப் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஸ்தம்பித்தது :

மழையால் முக்கிய சுற்றுலா பகுதிகளான மாட்டுபட்டி அணையில் கடந்த 9 நாட்களாக சுற்றுலா படகுகள் நிறுத்தப்பட்டன. இரவிகுளம் தேசிய பூங்கா கடந்த மூன்று நாட்களாக பூட்டப்பட்டு,ராஜமலைக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024