கல்லூரி பேரிடர் ஒத்திகையில் மாணவி பலி ! 2ம் மாடியிலிருந்து கீழே தள்ளிய கொடூர பயிற்சியாளர் *வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலை
Updated : ஜூலை 13, 2018 06:18 | Added : ஜூலை 13, 2018 06:17
கோவை:கோவை தனியார் கல்லுாரியில் நேற்று நடந்த பேரிடர் மேலாண்மை ஒத்திகையின் போது, இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளரால் வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடப்பட்ட மாணவி, பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மாணவியை தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, தொண்டாமுத்துார், நாதேகவுண்டன்புதுார், நியாய விலைக்கடை வீதியைச் சேர்ந்தவர் நல்லா கவுண்டர். இவரது மகள் லோகேஸ்வரி, 19. நரசீபுரம், விராலியூர் ரோட்டில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ., படித்து வந்தார். நேற்று மாலை கல்லுாரி வளாகத்தில் மாணவர்களுக்கு, பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் தலைமையிலான குழுவினர் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்தனர்.
இதன் ஒரு பகுதியாக, ஆபத்து காலங்களில் ஜன்னல் வழியாக மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது. மூன்று மாடி கொண்ட கல்லுாரி வளாகத்தின் கீழ் பகுதியில் பெரிய வலையை கட்டி, மாடியில் இருந்து மாணவர்களை கீழே குதிக்க அறிவுறுத்தினர்.
இரண்டாவது மாடியில் இருந்து மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே குதிக்குமாறு கூறினார். கீழே, மாணவர்கள் சிலர் வலை விரித்து, அவரை தாங்கிப்பிடிக்க காத்திருந்தனர். பயந்து நடுங்கிய மாணவி, 'பயமாக இருக்கிறது; நான் குதிக்க மாட்டேன்' என, பீதியுடன் கூறி, கீழே குதிக்க மறுத்தார். அத்துடன், பக்கவாட்டுச் சுவரையும் நன்றாக இறுக்கிப்பிடித்துக்கொண்டார். அவ்வாறிருந்தும் அவரை விடவில்லை பயிற்சியாளர். 'கீழே குதித்தே ஆகவேண்டும்' எனக்கூறி, அவரது தோள்பட்டையைப் பிடித்து இரண்டு மூன்று முறை கீழே தள்ள முயன்றார். மாணவி மறுத்து இறுக்கமாக சுவரைப் பிடித்துக்கொண்டார்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பயிற்சியாளர் ஆறுமுகம், மாணவியை திடீரென கீழே தள்ளிவிட்டார். நிலைகுலைந்த மாணவி பக்கவாட்டுச் சுவரை ஒரு கையால் பிடித்தவாறே கீழே சுழன்றபடி விழுந்தபோது, முதல் மாடியின் 'சன் ஷேடு' மீது தலைகீழாக விழுந்து பலத்த காயமடைந்தார்.
இச்சம்பவம், அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவ, மாணவியரை திடுக்கிடச் செய்தது. ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்து மாணவியின் உறவினர்கள், கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
கல்லுாரியில் இதுபோன்ற பயிற்சிகளை அளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினர் உரிய முன் அனுமதி பெற வேண்டும். நேற்று நடந்த பயிற்சி தொடர்பாக, கல்லுாரி நிர்வாகம் யாரிடமும் அனுமதி வாங்கவில்லை. பேரிடர் மேலாண்மை மீட்பு தனியார் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளித்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட பேரிடர் மீட்பு பணிக்களுக்கான தாசில்தார் ஜெயபால் கூறுகையில், ''இதுபோன்று பயிற்சிகள் அளிக்க, மாவட்ட நிர்வாகம், பேரிடர் குழுவிடம் முன் அனுமதி பெற வேண்டும். தீயணைப்பு வீரர்கள் முன்னிலையில் தான் பயிற்சி அளிக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடிக்காமல் பயிற்சி அளித்து உயிரிழப்பு ஏற்படுத்தி உள்ளனர்,'' என்றார்.
கோவை மாவட்ட எஸ்.பி., மூர்த்தியிடம் கேட்டபோது, 'சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி., நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளார். மாணவி கீழே விழுந்தது தொடர்பான வீடியோ பதிவு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த 'வீடியோ'வை ஆய்வு செய்து, மாணவி உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மாணவி உயிரிழப்பு தொடர்பாக கலைமகள் கல்லுாரி நிர்வாகத்திடம் கேட்டபோது, இந்த சம்பவம் வளாகத்தின் வெளியே நடந்ததாக முதலில் மழுப்பலாக பதிலளித்தனர். இதன்பின், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
'கொலைக்கு ஈடான குற்றம்'
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பேரிடர் மீட்பு பயிற்சி என்பது, நன்கு திட்டமிட்டு பயிற்சி பெற்ற தகுதியான நபர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டும். கல்லுாரி வளாக ஒத்திகையின் போது, மாணவி பலியான வீடியோவை பார்த்தேன். கீழே குதிக்குமாறு மாணவியை நிர்பந்தித்து, பயிற்சியாளர் கீழே பல முறை வலுக்கட்டாயமாகத் தள்ள முயற்சிக்கிறார். அந்த மாணவி மறுக்கிறார். இது கொலைக்குற்றத்துக்கு ஈடான செயல்தான்.
ஒருவரின் விருப்பத்துக்கு மாறாக அவ்வாறு செய்தால் உயிரிழப்பு நேரிடும் என்பது பயிற்சியாளருக்கு நன்கு தெரிந்திருக்கும். அவ்வாறு அறிந்திருந்தும் தள்ளிவிட்டது, கொலைகுற்றத்துக்கு ஈடான குற்றச் செயலே. அதனால், தகுந்த சட்டப்பிரிவின் கீழ் அந்நபர் மீதும், போதுமான முன்னெச்சரிக்கையின்றி முன் ஏற்பாடுகளின்றி ஒத்திகை நடந்ததை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்த கல்லுாரி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment