Saturday, July 14, 2018

மாநில செய்திகள்

2-வது மாடியில் இருந்து தள்ளியதால் கல்லூரி மாணவி பலி : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்





கோவையை அடுத்த நரசீபுரம் விராலியூர் சாலையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நாட்டு நலப்பணித்திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

பதிவு: ஜூலை 14, 2018 05:45 AM

கோவை,

ஆறுமுகம் (வயது 31) என்பவர் இந்த பயிற்சியை நடத்தினார். காலை 11 மணி முதல் 1.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பிற்பகல் 3 மணி முதல் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. உயரமான கட்டிடங்களில் தீப்பிடித்தால் கீழே குதித்து தப்பிப்பது எப்படி? என்ற பயிற்சி செய்து காட்டப்பட்டது.

இதற்காக கல்லூரி வளாகத்தில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் 2-வது மாடியின் ஜன்னல் மேல் உள்ள ஷன் ஷேடு பகுதியில் இருந்து மாணவர்களை கீழே குதிக்க வைத்தனர். பயிற்சியாளர் ஆறுமுகம் ஷன் ஷேடு பகுதியில் நின்று கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவராக குதிக்கவைத்தார். 2-வது மாடியின் ஷன் ஷேடு பகுதியில் இருந்து கீழே குதிக்கும் மாணவர்களை பாதுகாப்பாக பிடிப்பதற்காக சில மாணவர்கள் கீழே பெரிய வலையை கையில் பிடித்து தயாராக நின்றனர்.

முதலில் சில மாணவர்கள் கீழே குதித்தனர். அவர்களை கீழே நின்ற மாணவர்கள் வலையை விரித்து பிடித்து காப்பாற்றினார்கள். அதன்பின்னர் 2 மாணவிகள் 2-வது மாடியில் இருந்து குதித்தனர்.

இந்த பயிற்சியில் தொண்டா முத்தூர் அருகே உள்ள நாதே கவுண்டன்புதூரை சேர்ந்த நல்லா கவுண்டர்-சிவகாமி தம்பதியரின் மகள் லோகேஸ்வரி (19) என்ற மாணவியும் பங்கேற்றார். இவர் அந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பயிற்சியின் போது 2-வது மாடியின் ‘சன் ஷேடு’ (சிலாப்) பகுதியில் மாணவி லோகேஸ்வரி நின்றார். உயரமான இடத்தில் இருந்து கீழே பார்த்ததும் பயம் ஏற்பட்டதால் அவர் உட்கார்ந்து கொண்டார். ஆனால் பயிற்சியாளர் ஆறுமுகம், “சும்மா குதியுங்கள். கீழே வலை உள்ளது” என்று கூறியும் லோகேஸ்வரி குதிக்க மறுத்து ‘சன் ஷேடு’ பகுதியை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

ஆனால் பயிற்சியாளர் ஆறுமுகம் விடாப்பிடியாக, குதிக்குமாறு வற்புறுத்தியதால் அவர் பயத்தில் கூச்சலிட்டார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயிற்சியாளர் லோகேஸ்வரியை வலுக் கட்டாயமாக கீழே தள்ளி விட்டார்.

இதனால் அலறிக்கொண்டே கீழே விழுந்த மாணவி லோகேஸ்வரியின் தலை மற்றும் கழுத்து பகுதி முதல் மாடியின் ‘சன் ஷேடு’ பகுதியில் இடித்தது. இதனால் பலத்த காயம் அடைந்தார். தரையை நோக்கி வேகமாக வந்த அவரை, கீழே நின்றிருந்த மாணவர்கள் தங்களது கைகளில் விரித்து வைத்திருந்த வலையில் பிடித்தனர்.

படுகாயம் அடைந்ததால் மாணவி லோகேஸ்வரி வேதனையில் முனங்கியபடி சுய நினைவு இழந்து கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் நடந்து பல மணி நேரம் கழித்து தான் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவி லோகேஸ்வரி இறந்தது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் அலறி அடித்துக்கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். மாணவியின் உடலை பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இது தொடர்பாக மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலாந்துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர் சென்னையை அடுத்த மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2) (இறப்பு ஏற்படும் என்று தெரிந்தும் உயிரிழப்பை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குப்பிரிவு கொலை முயற்சிக்கு இணையான பிரிவு என்றும், இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மாணவி லோகேஸ்வரியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி சவ கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்தில் மாணவியின் உறவினர்கள் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் 1 மணி அளவில் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பிறகு மாணவி லோகேஸ்வரியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நாதே கவுண்டன்புதூரில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், மத்வராயபுரத்தில் உள்ள மின் மயானத்தில் மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாணவி லோகேஸ்வரி இறந்ததை தொடர்ந்து அவர் படித்த கல்லூரிக்கு வருகிற திங்கட்கிழமை வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் கல்லூரியின் நுழைவுவாயில் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி லோகேஸ்வரியின் மரணத்துக்கு காரணமான ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆறுமுகம் டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி பெற்றதாகவும், அதற்கான கடிதத்தை கல்லூரி நிர்வாகத்திடம் காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடிதத்தை போலீசார் ஆய்வு செய்ததில் அந்த கடிதம் போலியானது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த சம்பவத்துக்கு காரணமான பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவி கீழே விழுந்த வீடியோ பதிவு உள்ளது. அதன் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கும் போது சில விதிமுறைகள் உள்ளன. அவை பின்பற்றப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிற்சியாளர் ஆறுமுகம் அந்த கல்லூரிக்கு அவராகவே சென்று பயிற்சி அளிப்பதாக கூறி உள்ளார். இதற்காக கடந்த 3-ந் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து வந்ததாக கூறி ஒரு கடிதத்தை கல்லூரி முதல்வரிடம் கொடுத்து இருக்கிறார். அந்த கடிதத்தில் முத்திரை கூட கிடையாது. அந்த கடிதத்தை அவராகவே தயாரித்ததாக தெரிகிறது. அது போலி கடிதம் ஆகும்.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் அவர் பயிற்சி பெற்றதாக கூறி உள்ளார். அந்த சான்றிதழ்கள் போலியானது என்று தற்போது தெரியவந்து உள்ளது. அவர் அங்கு பயிற்சி பெறவில்லை.

அவர் போலி சான்றிதழ்களை கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக கோவை மற்றும் பிற மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதன் மூலம் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது மேலும் சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். பயிற்சியாளர் அளித்த முகவரி உண்மையானது தானா? என்றும் சென்னை போலீசார் மூலம் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...