Monday, July 9, 2018

வார விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்: 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்


2018-07-09@ 03:58:20


திருமலை: வார விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிரம்பி வழியும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். அதன்படி சனிக்கிழமையான நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 92 ஆயிரத்து 645 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்று ஒரே நாளில் கோயில் உண்டியலில் ₹2.78 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கோயிலில் இலவச தரிசனத்திற்கான வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி பக்தர்கள் நீண்ட வரிசையில் வெளியே காத்துக்கிடக்கின்றனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் ஆகிறது. ₹300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள், மலைப்பாதையில் நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்றவர்கள், ஆதார் கார்டு மூலம் சர்வ தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் டிக்கெட்டில் உள்ள நேரத்திற்கு அனுமதிக்கப்பட்டு 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் சாலையில் தவித்தனர். எனவே, பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூடுதல் அறைகள் கட்ட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024