Monday, July 9, 2018

'நீட்' விண்ணப்ப, 'கவுன்ட் - டவுன்' துவக்கம் : இன்னும் 85 நாட்களில் பதிவு ஆரம்பம்

Added : ஜூலை 09, 2018 05:02

இந்த ஆண்டு, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, 'கவுன்ட் - டவுன்' துவங்கியுள்ளது. விண்ணப்ப பதிவு துவங்க இன்னும், 85 நாட்கள் மட்டுமே உள்ளன.'நீட் மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகள், ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்; கணினி வழி தேர்வாக நடத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு, தமிழகத்தில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அதே நேரம், அரசியல் கட்சியினரை கண்டு கொள்ளாமல், நீட் தேர்வுக்கு, மாணவர்கள் தயாராக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி, முதல் கட்ட, நீட் தேர்வு, பிப்., 3 முதல், 17 வரை நடக்கிறது.இதில், ஏதாவது ஒரு நாளை மாணவர்கள் தேர்வு செய்து, அந்த நாளில் தேர்வில் பங்கேற்கலாம். முதல் கட்ட நீட் தேர்வுக்கு, அக்., 1ல் விண்ணப்ப பதிவு துவங்கி, 31ல் முடிகிறது. இதன் படி, விண்ணப்ப பதிவு துவங்க, இன்னும், 85 நாட்கள் தான் உள்ளன.'இதனால், மாணவர்கள், நீட் தேர்வுக்கு தற்போதே தயாராக வேண்டிஉள்ளது. 'இதற்கேற்ப, பள்ளிகளில் பொது தேர்வு பாடத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். பொது தேர்வு பாடத்திட்டத்தை முடித்தால் தான், நீட் தேர்வுக்கு ஓரளவாவது பயிற்சி பெற முடியும்' என, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.இதற்கேற்ப, பள்ளிகளில் வகுப்பு நேரம் நீட்டிக்கப்படுமா என, எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024