Sunday, July 8, 2018

முட்டை சப்ளையில் கைமாறிய கோடிகள்
3 நாள், 'ரெய்டில்' கிடைத்த முக்கிய ஆவணம்
 dinamalar 8.07.2018

தமிழக அரசுக்கு, சத்துணவு முட்டை, சத்துமாவு வழங்கும் ஒப்பந்த நிறுவனம் மற்றும் அதன்துணை நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் நடத்திய, 38 மணி நேர சோதனையில், முட்டை சப்ளையில் ஆண்டுக்கு, 60 கோடி ரூபாய் கைமாறியதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. இதில், தமிழக பெண் அமைச்சருக்கு சிக்கல் எழுந்துள்ளது.



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வட்டூரைச் சேர்ந்தவர் குமாரசாமி, 55. ஆண்டிப்பாளையத்தில், 'கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி' என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்து மாவு, பருப்பு வினியோகம் செய்து வருகிறது.

பல குழுக்கள் :

இந்நிறுவனம், வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார் எழுந்ததை அடுத்து, கடந்த, 5ல், நிறுவனம், வட்டூரில் உள்ள குமாரசாமி வீடு, ஆடிட்டர்கள் மற்றும் உறவினர்கள் வீடு என, மாவட்டம் முழுவதும், 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர், பல குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தமிழகம் முழுவதும், நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண் இயக்குன ராக உள்ள, ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி சுதாதேவி, ஆண்டிபாளையம் அருகேயுள்ள, கொல்லம்பட்டியைச் சேர்ந்தவர்.

சிக்கின : குமாரசாமியின் உறவின ரான சுதாதேவி, பருப்பு, சத்து மாவு சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவரது வீட்டிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, தனியார் நிறுவன வங்கி கணக்கில் இருந்து, சுதாதேவி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணங்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் சிக்கின. இச்சோதனை, 38 மணி நேரத்துக்கு பின் முடிவுற்றது. நேற்று, ஆண்டிபாளையத்தில் மட்டும் சோதனை நடந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சத்துணவு திட்டத்துக்காக, 2017 - 18ம் ஆண்டில், 95 கோடி முட்டை சப்ளை செய்வதற்காக, கிறிஸ்டி நிறுவனம், ஒரு முட்டை, 434 காசு வீதம், 412 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. அதில், 10 சதவீதம் அமைச்சருக்கும், 5 சதவீதம், அதிகாரிகளுக்கும் என, 61.80 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், பெண் அமைச்சர் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார். ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கல், சத்துணவு மையங்களுக்கு புதிய கட்டடம் திறப்பு உட்பட விழாக்களுக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அமைச்சர்கள் இருவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிறிஸ்டி நிறுவன சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, விழாக்களில் பெண் அமைச்சர் கலந்து கொள்ள வில்லை.

திருமண பரிசு :

அமைச்சரின் வளர்ப்பு மகள் திருமணம், கடந்தாண்டு நடந்தது. இதில், கிறிஸ்டி நிறுவனத்தின் சார்பில், விலை உயர்ந்த கார் மற்றும் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஆவணங்களும், சோதனையில் சிக்கியுள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ரூ.246 கோடி, 'டிபாசிட்' :

கடந்த, 2016, நவம்பர்,8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், திருச்செங்கோடைச் சேர்ந்த தனிநபர் கணக்கில், 246 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்திருப்பதாக, தகவல் கிடைத்தது. இதில், 'பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா' என்ற திட்டத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், டிபாசிட் செய்திருப்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது, மொத்த தொகையில், 45 சதவீதத்தை வரியாக கட்டியும், 25 சதவீதத்தை வட்டியில்லா டிபாசிட்டாக வைத்திருக்கவும் சம்மதித்துள்ளதாக தெரியவந்தது. மேலும், அந்த வங்கியில், 800 பேர் பெயரில், 10 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய் வரை, பணம் போடப்பட்டுள்ளது. தற்போது, திருச்செங்கோடில் நடந்த வருமானவரி சோதனையின் போது, குறிப்பிட்ட அந்த வங்கியிலும் சோதனை நடந்தது, பல்வேறு சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துஉள்ளது.

காசாளர் மீது புகார் : நாமக்கல் மாவட்டம், ஆண்டிப்பாளையம், கிறிஸ்டி ப்ரைடு கிராம் நிறுவனத்தில், வருமானவரி சோதனையின் போது, காசாளர் கார்த்திகேயன், 32, தற்கொலைக்கு முயன்றதாக, சென்னை வருமான வரித்துறை அதிகாரி,தயானந்த பிரசாத் புகார் அளித்தார்.இதன்படி, திருச்செங்கோடு ரூரல் போலீசார், கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

- நமது நிருபர் குழு -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024